இது தமிழ் ⚡ AMP

நாகேஷ் திரையரங்கம் – வழக்கு தொடர்ந்த ஆனந்த் பாபு

By Dinesh R | Jul 01, 2017

சமீபத்தில், நாகேஷ் திரையரங்கம் படத்தின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். நடிகர் ஆரி, ஆஷ்னா சவேரி நடிப்பில் இசாக் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரான்ஸ் இண்டியா மீடியா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனர் ராஜேந்திர எம். ராஜன் தயாரித்துள்ளார். நாகேஷ் திரையரங்கம் படத்தை வெளியிட தடைகேட்டு, மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனும் நடிகருமான ஆனந்த்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

‘என்னுடைய தந்தை நாகேஷ், 1958ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ள மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர். அவர் சென்னை தியாகராய நகரில், நாகேஷ் தியேட்டர் என்ற ஒரு திரையரங்கைச் சொந்தமாக நடத்தினார். டிரான்ஸ் இந்தியா நிறுவன தயாரிப்பில், ஐசக் என்ற முகமது இசாக் என்பவர் இயக்கத்தில், ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. திகில் திரைப்படமான இது மிக விரைவில் வெளியாக உள்ளது. திரைப்படத்துக்கு ‘நாகேஷ் திரையரங்கம்’ என்று பெயர் வைப்பதற்கு முன்பு, எங்கள் குடும்பத்தினரிடம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பில் எந்த முன் அனுமதியும் பெறவில்லை. என்னுடைய தந்தையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாக இந்தத் திரைப்படத்தின் பெயர் உள்ளது. எனவே, ‘நாகேஷ் திரையரங்கம்’ திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும். எங்கள் அனுமதி இல்லாமல் எங்களது தந்தையின் பெயரைப் பயன்படுத்தியதற்காக, ஐம்பது லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்’ என வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனு நீதிபதி வி. பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இது குறித்து பதில் அளிக்குமாறு படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.