இது தமிழ் ⚡ AMP

Antim: The Final Truth விமர்சனம்

By Dinesh R | Jan 05, 2022

அன்திம் என்றால் இறுதி எனப் பொருள். கத்தி எடுத்தவனுக்குக் கத்தியால் மரணம் என்பது ஆதி உண்மை. படத்தின் கதையும் இந்த இறுதி உண்மையை மையப்படுத்தியே!

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

விவசாய நிலத்தை விற்றுவிட்டு, புனே மார்க்கெட்டில் கூலி வேலைக்குச் செல்கின்றனர் ராகுல்யாவும், அவன் தந்தையும். குறைவான கூலி தரப்படுவதைக் கேள்வி கேட்டு, அது தகராறாகி சிறைக்குச் செல்கிறான் ராகுல்யா. அங்கிருந்து வளர்ந்து, 300 ஏக்கர்க்குச் சொந்தக்காரனாகி, புனேவின் ‘டான்’ ஆகிவிடுகிறான். எதனால் பாதிக்கப்பட்டானோ, அதையே மற்றவர்களுக்குச் செய்து தனியனாகிறான் ராகுல்யா.

இன்ஸ்பெக்டர் ராஜ்வீர் சிங்காக நடித்திருக்கும் சல்மான் கானுக்கு, மாஸான சண்டைக்காட்சி அறிமுகம் இருந்தாலும், அவர் இப்படத்தில் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாகவே வருகிறார். படத்தின் நாயகன், ராகுல்யாவாக நடித்திருக்கும் ஆயுஷ் ஷர்மாதான். ராகுல்யாவின் தந்தையாக நடித்திருக்கும் ச்ச்சின் ஹெடேக்கர் வழக்கம் போல் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். க்ளைமேஸில், தனது மகனுக்கு அளித்த வாக்கின்படி மரண வீட்டில் அவர் சிரிப்பதுடன் படம் முடிகிறது.

பலமுறை பார்த்துப் பழகிய கதைக்களம் என்றாலும், கதாபாத்திரங்களைக் கையாண்ட விதத்தில் இயக்குநர் மகேஷ் மஞ்ரேக்கர், படத்தைப் பத்திரமாகக் கரையேற்றி விடுகிறார். சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுடையவர்களான ஆயுஷ் ஷர்மாவையும், சல்மான் கானையும் மோத வைத்து, சல்மான் ரசிகர்களுக்கு ஆக்ஷன் விருந்து கொடுத்துள்ளனர். ராகுல்யாவின் காதலி மந்தாவாக நடித்திருக்கும் மஹிமா மக்வானாவின் கதாபாத்திரத்தையும் ரசிக்கும்படி உருவாக்கியுள்ளனர்.

படம், Zee 5 இல் காணக் கிடைக்கின்றது.