இது தமிழ் ⚡ AMP

Balan: The Boy விமர்சனம்

By Dinesh R | Jun 20, 2026

மஞ்ஞுமள் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரத்தின் படமென்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படத்தின் கதையை, ரோமஞ்சம், ஆவேஷம் முதலிய படங்களை எழுதி இயக்கிய ஜித்து மாதவன் இயற்றியுள்ளார். 

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சிறையில் இருந்து தனது மகனுடன் வெளியேறும் இளம் தாய், புதுப்புது அடையாளங்களுடன் தன் வசிப்பிடத்தை மாற்றிய வண்ணமே உள்ளார். ஒரு வீட்டில் பாட்டியம்மாவைப் பார்த்துக் கொள்ளும் தாதியாகச் செல்லும் இடத்தில், தனது பால்ய வயது மகன் பாலனை எதிர்பாராதவிதமாகப் பிரிந்து விடுகிறார். பதின் பருவத்தை அடையும் அந்த மகன், தனது தாயைத் தேடி வருகிறான். பாலன் தனது தாயைத் தேடிக் கண்டுபிடித்தானா இல்லையா என்பதே படத்தின் கதை. ‘பாலன்: தி பாய்’ எனும் தலைப்பு,  ஒரு நிரந்தர பெயரற்ற பாலகன்/ பையன் என்பதைக் குறிக்கும் பொதுப்பெயராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

பாட்டிம்மாவாக நடித்துள்ள டாலி ஜூனும், சிறுவனாக நடித்துள்ள K.R.ஆதிசேஷனும் அசத்தியுள்ளனர். வீல் சேரில் அமர்ந்தவாறு அந்தப் பாட்டி செய்யும் அட்ராசிட்டி திகிலையும் கலகலப்பையும் ஒருங்கே அளித்து ரசிக்க வைக்கின்றன. ஆதிசேஷனின் கண்களும், அமைதியான முகமும், புன்னகையும் ஈர்ப்பாய் உள்ளன. பாலனின் அம்மாவாக நடித்துள்ள ஃபர்ஸானா பலத்திங்கள், இந்தப் படத்திற்கு ஓர் அமானுஷ்யமான வசீகரத்தை வழங்குகிறார். சைக்காலஜிக்கல் த்ரில்லர் என்ற வகைமையில் இப்படத்தை அடைப்பதற்குப் படத்தின் முதற்பாதியில் ஃபர்ஸானாவின் ஸ்க்ரீன் ப்ரசென்ஸே காரணம்.

அப்பாஸாக நடித்துள்ள டொவினோ தாமஸின் அத்தியாயம் கொஞ்சம் தனியாகத் தெரிந்தாலும், அவ்வத்தியாயத்தை மிக அழகாக முடித்து வைத்துள்ளனர். சகித்துக் கொள்ள முடியாத போலீஸ்காரர் பவித்ரனாக ஜீன் பால் லால் நடித்துள்ளார். தனக்கு ஏற்பட்ட இழப்பிற்குப் பழி வாங்கி விட்டதாக நினைத்துக் கொள்ளும் பவித்ரன், திருதிருவென திருவாத்தானாக முழிப்பதுடன் அப்பாத்திரத்தை நிறைவு செய்துள்ளது சிறப்பான ட்விஸ்ட்.

பதின் பருவ பாலனாக நடித்துள்ள முஹம்மத் ஜினானுக்கும், சிறுவன் ஆதிசேஷனுக்கும் உள்ள உருவ ஒற்றுமையை மிக அழகாகத் தேடிப் பயன்படுத்தியுள்ளனர். படத்தின் தீவிரத்தன்மையைக் (intense) கதையோடு சேர்த்து அதிகப்படுத்த உதவியுள்ளது லோகேஷனும், ஷைஜு காலித்தின் ஒளிப்பதிவும். வழக்கமான நேரடிக் கதை சொல்லல் யுக்தியில் இருந்து மாறுபட்டு, பார்வையாளர்களோடு கண்ணாமூச்சி ஆடும் ஒரு புதிர்த்தன்மை வாய்ந்ததாக ஒரு ஜாலம் செய்கிறது படம்.