இது தமிழ் ⚡ AMP

பைக்கர் விமர்சனம் | Biker review

By Dinesh R | Apr 04, 2026

இஷான் நாராயண் எனும் சிறுவன், பைக் ரேசர்களான தன் தந்தைக்கும் தாத்தாக்கும் வாழ்க்கையை உணர்த்துவதுதான் பைக்கர் படத்தின் கதை. நமது தந்தையை ஒருவன் அவமானப்படுத்தினால் அதைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது என விகாஸ் நாராயணுக்கும், குடும்ப உறவுகளும் பிணைப்பும் லட்சியத்திற்கான உத்வேகத்தை அளிக்குமேயன்றி கவனச்சிதறலாக மாறாது என புல்லட் சுனில்க்கும் உணர்த்துகிறான் இஷான்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மனைவி அனன்யா கேட்டுக் கொண்டதற்காக பைக் ரேஸிங்கை விட்டு விலகும் சேம்பியனான விகாஸ், தந்தைக்கு நேரும் அவமானத்தைத் துடைக்க மீண்டும் ரேசிங்கிற்கு வருகிறான். ஆனால், விகாஸின் முடிவை தந்தை, மனைவி என இரு உறவுகளுமே ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். விகாஸ் ரேசில் மட்டுமல்ல உறவுகளையும் எப்படி வெல்கிறான் என எமோஷ்னலாகச் சொல்கிறது படம். பைக் ரேசிங் என ஒரு பக்கம் விஷுவலில் அதகளம் புரிந்தாலும், ஒளிப்பதிவாளர் J.யுவராஜின் கேமரா கதாபாத்திரங்களின் எமோஷ்னலைத் துல்லியமாகப் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது. ஒருவன் சேம்பியனாக முதலில் வெல்ல வேண்டியது அவன் அகமனப் போராட்டங்களைத்தான் எனச் சொல்லாமல் சொல்லியுள்ளார் எழுதி இயக்கியுள்ள அபிலாஷ் ரெட்டி. 2 ஸ்ட்ரோக் இன்ஜின்க்கும், 4 ஸ்ட்ரோக் இன்ஜின்க்குமான வித்தியாசம் என்ன என்று  எழுதப்பட்டிருக்கும் வசனம் புன்னகையை வரவைக்கின்றது.

விகாஸ் நாராயணனாக ஷர்வானந்தும், புல்லட் சுனிலாக டாக்டர் ராஜசேகரும் நடித்துள்ளனர். ‘நீங்க மட்டுந்தான் ஆங்க்ரி மேன்னு நினைச்சுக்காதீங்க’ என டாக்டர் ராஜசேகரிடம், ஷர்வானந்த் சொல்கிறார். ‘இதுதான்டா போலீஸ்’ காலத்து ராஜசேகரைப் பார்த்தவர்களுக்கு இது புரியக்கூடும். க்ளைமேக்ஸில், தந்தையை ஜெயிக்க வைத்ததும் உருவாகும் தருணத்தை இருவரும் அழகாகத் தங்கள் நடிப்பில் கொண்டு வந்துள்ளனர். ஒரு பரிபூரண நிறைவைத் தருவதாக அது உள்ளது.

யூகிக்கக் கூடிய ஒரு டெம்ப்ளட் கதை தான் என்றாலும், பார்வையாளர்களுக்கு மேம்பட்ட திரை அனுபவத்தை நல்கத் தொழில்நுட்ப ரீதியாகச் செமயாக உழைத்துள்ளனர். ஒரு தெலுங்குப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வே எழாத அளவுக்கு மிக அற்புதமாக வேலை செய்துள்ளது இயக்குநர் குழுமம். படத்தின் மிகப் பெரிய ஹைலைட்டே அதன் ஒலி வடிவமைப்புதான். பார்வையாளர்களை ரேஸிங் ட்ராக்கிற்குள் கொண்டு சென்று அவ்வுலகில் லயிக்க வைக்கிறது. இவ்வகை ஸ்போர்ட்ஸ் ஜானரிலும் உலகத் தரத்தில் உருவாக்க, இந்தியப் படைப்பாளிகள் சளைத்தவர்களில்லை என மட்டி படம் போல் இப்படமும் சான்றாக அமைகிறது.