இது தமிழ் ⚡ AMP

“பாட்டல் ராதா | சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் படம்” – வெற்றிமாறன்

By Dinesh R | Jan 19, 2025

இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படம் ‘பாட்டல் ராதா’ ஆகும். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான் விஜய், மாறன், மற்றும் பலர் நடித்திருக்கும் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் வெற்றிமாறன், லிங்குசாமி, அமீர், மிஸ்கின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

லிங்குசாமி, “இந்தப் படம் தமிழில் மிகச் சிறந்த படமாக, இந்தக் காலகட்டத்திற்குத் தேவையான ஒரு படமாக வந்திருக்கிறது. ஜனரஞ்சகமாக அதே சமயம் கருத்துள்ள படமாக இருக்கிறது. இந்தப் படம் அரசாங்கத்திற்கு போடும் மனு போல . அவசியமானதொரு படம். இந்தப் படம் பெரும் வெற்றியடையும்” என்றார்.

அமீர், “இந்த கதையைப் போல குடி நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களைப்பற்றி நான் ஒரு படம் இயக்குவதாக இருந்தேன். அதற்காக கள ஆய்வுகள் செய்தும் வைத்திருந்தேன். ‘பாட்டல் ராதா’வைப் பார்த்த பிறகு இனி அந்தப் படம் செய்தால் ‘பாட்டல் ராதா’ பார்த்து எடுத்ததைப் போல இருக்கும். எனவே அதை எடுக்கப் போவதில்லை. குடி நோயாளிகளைப் பற்றி இவ்வளவு சிறப்பாக இனி யார் படம் எடுத்தாலும், அது ‘பாட்டல் ராதா’ படத்தை விடச் சிறப்பாக எடுக்க முடியாது. இந்தப் படம் தமிழில் மிகச் சிறந்த படம்” என்றார்.

மிஷ்கின், “ ‘பாட்டல் ராதா’ திரைகதை எழுதப்பட்ட விதம் மிகச் சிறப்பானது. முதல் படத்திலேயே இவ்வளவு சிறப்பாக எழுதி எடுத்திருக்கும் இயக்குநர் தினகரன் சிவலிங்கத்திற்குப் பாராட்டுக்கள். அதுவும் இப்படி ஒரு கதைகளத்தை எழுதியதற்கு என் பாராட்டுக்கள். இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் நடிப்பைப் பார்த்து வியந்து விட்டேன். குறிப்பாக குருசோமசுந்தரம் நடிப்பில் மிரட்டிவிட்டார். மொத்தமாகப் படக்குழுவுக்கு என் அன்பும் பாராட்டும். இப்படிப்பட்ட படங்களைத் தயாரிக்கும் ரஞ்சித்துக்கு என் அன்புகள்” என்றார்.

வெற்றிமாறன், “ ‘பாட்டல் ராதா’ திரைப்படம் நன்றாக எழுதி மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தின் முதல் பாதி சிரிக்கவும், இரண்டாம் பாதி சிந்திக்கவும் வைக்கும். கூடவே இந்தச் சமூகத்திற்கு இப்போதைய காலகட்டத்திற்கு அதுவும் அடிக்சனுக்கு ஆளாகியிருக்கும் இந்த சமூகத்திற்கு மிக அவசியமான படமாக வந்திருக்கிறது. இந்தப் படம் உங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்” என்று பேசினார்.

பா.இரஞ்சித், “குடியால் பல குடும்பங்கள் அழிந்து போனதை நான் கண்டிருக்கிறேன். இந்தக் கதையை என்னிடம் தினகர் தரும்பொழுது அதிலிருந்த உண்மைத்தன்மை என்னை வெகுவாக ஆட்கொண்டது. வசனங்களும், வாழ்வும் நமக்கு நெருக்கமான ஒரு உணர்வைத் தந்தது. தினகர் மிக அருமையாக இயக்கியிருக்கிறார். தொடர்ந்து இந்த தமிழ் சினிமாவில் அவசியமான படங்களைத் தரவேண்டும் என்பது நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் விருப்பம். இன்னும் நல்ல படங்கள், பொழுதுபோக்கோடு சமூகக்கருத்துள்ள படங்கள் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டேயிருப்போம். ‘பாட்டல் ராதாஉங்களை ரசிக்க வைப்பதோடு உங்களுக்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இருக்கும்” என்றார்.