இது தமிழ் ⚡ AMP

“காதலை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது” – இயக்குநர் பாலாஜி மோகன் #Love

By Dinesh R | Sep 27, 2026

சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இயக்கத்தில் நவீன காதலையும், உறவுகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள #Love வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர், இன்றைய டிஜிட்டல் உலகில் காதல், டேட்டிங், உறவுகள் மற்றும் உணர்வுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் பேசுகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சென்னையில் நடைபெற்ற #Love தொடரின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மோனிகா ஸ்ரீவாஸ்தவ், “நெட்ஃப்ளிக்ஸின் முதல் தமிழ்க் காதல் டிராமா தொடராக #Love உருவாகியுள்ளது. தென்னிந்தியக் கதைகளில் நெட்ஃப்ளிக்ஸ் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாகத் தமிழ்ப் படைப்புகளில் வித்தியாசமான கதைக்களங்கள், தனித்துவமான குரல்கள் மற்றும் புதிய அணுகுமுறைகளை வழங்க விரும்புகிறோம். அந்த வகையில் #Love காதல் கதையை நவீனமான மற்றும் விளையாட்டுத்தனமான பார்வையில் சொல்லும் படைப்பாக அமைந்துள்ளது.

#Love தொடரில் இரண்டு போட்டியாளர்களான டேட்டிங் ஆப் நிறுவனர்கள் இடம்பெறுகின்றனர். ஒருவர் காதல் என்பது இணக்கத்தை (Comparability) அடிப்படையாகக் கொண்டது என நம்புகிறார்; மற்றொருவர் கெமிஸ்ட்ரிதான் முக்கியம் என்கிறார். தங்களது கருத்து சரி என்பதை நிரூபிக்க இருவரும் போட்டியில் இறங்கும் நிலையில், காதல் அவர்களது திட்டங்களையே மாற்றுகிறது. டேட்டிங் ஆப்களைப் பயன்படுத்தியிருக்கிறோமா இல்லையா என்பதைத் தாண்டி, காதல் குறித்த நம்முடைய எண்ணங்களை சில நேரங்களில் காதலே மாற்றிவிடும் என்பதை இந்தத் தொடர் பேசுகிறது.

இந்தத் தொடரை உருவாக்கிய இயக்குநர் பாலாஜி மோகன், அன்றாட உறவுகளில் இருக்கும் உண்மையான விஷயங்களைத் தனக்கே உரிய நகைச்சுவையான பார்வையில் சொல்லும் திறமை கொண்டவர்.

ஷோ-ரன்னரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், ஆரம்பம் முதலே தெளிவான பார்வையுடன் #Love தொடரின் உலகத்தை உருவாக்கியுள்ளார். எழுத்தாளர் நிர்மல் வில்லியம்ஸ், இணை எழுத்தாளர்கள் ஷ்ரதா சுப்ரமணியன், ஸ்வேதா சக்ரவர்த்தி, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், எடிட்டர்கள் சாய் முத்துராமன், சிவா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

மேத்யூ மற்றும் தாரா கதாபாத்திரங்களில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரின் கெமிஸ்ட்ரி இந்தத் தொடரின் முக்கிய பலமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு முறையும் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான உலகம் மற்றும் உணர்வை வழங்க வேண்டும் என்பதே நெட்ஃப்ளிக்ஸின் நோக்கம். அந்த வகையில் ‘Love’ சமகால இளைஞர்களின் காதல் மற்றும் உறவுகளைப் பிரதிபலிக்கும் படைப்பாக இருக்கும்” என்றார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த், “என்னை நம்பி இந்தக் கதையை வழங்கிய நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கும், குறிப்பாக மோனிகாவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மும்பையில் #Love தொடருக்கான வாசிப்பு நிகழ்வு நடைபெற்றபோது அவருடன் இருந்த அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பானது. நான் ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும், சிறந்த கதை சொல்லியாகவும் உருவாக அவர் அளித்த உத்வேகம் மறக்க முடியாதது.

நான் அதிகமான விஷயங்களால் எளிதில் வியப்படைவதில்லை. ஏனென்றால், நான் தலைவரின் மகள். அனைவராலும் போற்றப்படும் ஒருவருடன் வாழும்போது, மற்றவர்களைப் பார்த்து வியக்கும் பழக்கம் குறைந்துவிடும். ஆனால் மோனிகா என்னை மிகவும் வியக்க வைத்தவர். அவர் ஒரு சிறந்த தலைவர், மிகப்பெரிய உத்வேகம் தருபவர். நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்காகத் தயாரிப்பாளராகவும் ஷோ-ரன்னராகவும் பணியாற்றும் வாய்ப்பை வழங்கியதற்கு அவருக்கு நன்றி. அதேபோல், ஒவ்வொரு கட்டத்திலும் என்னுடன் பயணித்த அபிஷேக் மற்றும் சுதான்ஷு ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நெட்ஃப்ளிக்ஸ் ஒரிஜினல் தொடரின் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு. ‘ஸ்பைடர்மேன்’ படத்தில் வரும் ‘With great power comes great responsibility’ என்ற வசனம் உண்மைதான். ஒரு கதையை ஆரம்பத்திலிருந்து இறுதிக்கட்டம் வரை கொண்டு செல்வது என்னுடைய பொறுப்பாக மாறியது. அந்தப் பயணத்தில் பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. எடுத்த முடிவுகளில் உறுதியாக இருப்பதோடு, தேவையான நேரத்தில் அவற்றை மாற்றிக்கொள்ளவும் கற்றுக்கொண்டேன்.

இறுதியில், இந்தத் தொடரை நாங்கள் நினைத்த இடத்திற்குச் சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே நோக்கமாக இருந்தது. இந்தப் பயணத்தில் நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய விஷயம், முடிவுகளை எடுப்பது கடினமாக இருந்தாலும், சரியான நேரத்தில் அந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதுதான். #Love தொடரின் ட்ரெய்லரையும், தொடர்ந்து முழுத் தொடரையும் ரசிகர்கள் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

இயக்குநர் பாலாஜி மோகன், “காதல் என்பது உலகில் யாராலும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத ஒரு விஷயம். அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் காதலைப் பற்றிக் கதைகள் சொல்லி வருகிறேன். ஆண்கள் பெண்களைப் பற்றியும், பெண்கள் ஆண்களைப் பற்றியும் தெரிந்துகொள்வது என்பது பல தலைமுறைகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு பயணம். இன்னும் பல ஆண்டுகள் சென்றாலும் காதலை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதுதான் அதன் சிறப்பு.

காதலைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்பதற்காக நான் தொடர்ந்து அதைப் பற்றிப் பேசவில்லை. உண்மையில், எனக்கும் காதலைப் பற்றி முழுமையாக எதுவும் தெரியாது. மற்ற அனைவரையும் போலவே நானும் தொடர்ந்து அதைப் புரிந்துகொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் காதலை எப்போதும் சுவாரசியமாகவும் புதுமையாகவும் வைத்திருக்கிறது. அதனால்தான் காதல் கதைகளைத் தொடர்ந்து திரையில் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது.

என்னுடைய படைப்புகளைப் பார்த்து ரசிகர்கள் காதல் குறித்து பல விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள் என்று கூறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே நேரத்தில், திரைப்படங்களில் வரும் காதல் கதைகளைப் பார்த்து நிஜ வாழ்க்கையிலும் அதேபோன்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். முடிந்தவரை என்னுடைய கதைகளை நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமாகவும், அதே நேரத்தில் பார்வையாளர்கள் கனவு காணவும், தங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கவும் முடியும் வகையிலும் உருவாக்க முயற்சிக்கிறேன்.

அந்த வகையில்தான் #Love தொடரையும் உருவாக்கியுள்ளோம். காதலைப் பற்றிய சில கனவுகளையும், நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமான உணர்வுகளையும் இணைத்து இந்தக் கதையைச் சொல்ல முயற்சித்திருக்கிறோம். பார்வையாளர்கள் இந்தத் தொடரைப் பார்க்கும்போது தங்களது அனுபவங்களுடன் தொடர்புப்படுத்திப் பார்க்க முடியும் என்று நம்புகிறேன்” என்றார்.

தாரா கதாபாத்திரம் குறித்துப் பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, “என்னை 80 சதவீதம் தாராவுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பல நேரங்களில் நான் நடிக்கவே இல்லை, அந்தக் கதாபாத்திரமாகவே இருந்தேன். நான் நடித்த சில கதாபாத்திரங்களைப் போல தாரா என்னிடமிருந்து வெகு தொலைவில் இருப்பவர் அல்ல. அதனால் அவரை நடிப்பது மிகவும் இயல்பாக இருந்தது. மேலும், காதல் கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருந்தது. அதற்கு #Love ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. இதற்கு முன்பு அர்ஜுனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருந்தோம்; அது நடக்காமல் போனதால் வருத்தப்பட்டேன். ஆனால் தற்போது #Love உருவாகியிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. நல்ல விஷயங்கள் நடக்க சில நேரங்களில் காலம் தேவைப்படும்” என்றார்.
காதல், நட்பு, குடும்பம், லட்சியம் என உறவுகளின் பல்வேறு பரிமாணங்களைப் பேசும் #Love இணைய தொடர் அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.