இது தமிழ் ⚡ AMP

Chennai Files: முதல் பக்கம் – சோஷியல் மெஸேஜ் த்ரில்லர்

By Dinesh R | Jul 21, 2025

அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். க்ரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படம், ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான மகேஸ்வரன் தேவதாஸ், ”ஒன்பது வயதில் நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டேன். 11 வயதில் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தைத் தேர்வு நேரத்திலும் பார்த்தேன். ஆசிரியர், ‘நடிப்பின் மீது கவனம் செலுத்தாதே!’ என்று அறிவுரை சொன்னாலும் என் மனதில் அந்த ஆசை பதிந்திருந்தது. அதன் பிறகு திருமணமானது. பிள்ளைகளும் பிறந்தார்கள். பிசினஸ் இருந்தது. கோவிட் வந்தது. அனைவரும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் என டிஜிட்டல் தளங்களில் தங்களது பொழுதைக் கழித்தனர். அந்தத் தருணத்தில் எல்லோரும் எல்லாப் படங்களையும் பார்க்கத் தொடங்கினர். சிங்கப்பூரில் என்ன சிறப்பு என்றால், டாப் 10 என திரைப்படங்களைப் பட்டியலிடுவார்கள். அங்கு சீனர்கள், மலாய்காரர்கள் என அனைவரும் படங்களைப் பார்ப்பார்கள். இதில் டாப் 1, 2 ஆகிய இடங்களில் தமிழ்ப்படங்கள் தான் இருக்கும். எல்லோருக்கும் தமிழ் படங்களைப் பார்க்கத்தான் ஆசை. இதை நான் உன்னிப்பாகக் கவனித்தேன்.

பின் என்னைத் தயார்படுத்திக் கொண்டு 46 வயதில் சிங்கப்பூரில் கட்டுமஸ்தான தேசிய ஆணழகன் என்ற பட்டத்தை வென்றேன். அதன் பிறகு இந்த உடலமைப்பை எப்படி எங்கு வெளிப்படுத்திக் கொள்வது என யோசித்தேன். எனக்கு வில்லன்களை மிகவும் பிடிக்கும் ‌ ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வில்லன்கள் தான் முதுகெலும்பு போல் இருப்பார்கள். நான் பேட்மேன் படத்தைப் பார்த்துவிட்டு வில்லனாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இன்று வரை நான் கில்லி, துப்பாக்கி, தனி ஒருவன் போன்ற படங்களைத் திரும்பத் திரும்பப் பார்ப்பேன். விஜய்க்காக மட்டுமல்ல அந்தப் படத்தில் நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், ஹிந்தி வில்லன் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரின் வில்லத்தனமான நடிப்பிற்காக அந்தப் படங்களைப் பார்ப்பேன்.

எனக்குத் தமிழ்த் திரையுலகம் பற்றி எதுவும் தெரியாது. இதற்காக இரண்டு ஆண்டுகள் ஹோம் ஒர்க் செய்தேன். தமிழ்த் திரையுலகில் எத்தனை துறைகள் இருக்கின்றன, அவை எப்படி இயங்குகின்றன என்பது குறித்து ஹோம் ஒர்க் செய்தேன். இதில் என்னை ஏமாற்றுவதற்கும் சிலர் முயற்சித்தனர். அதன் பிறகு தான் அஷ்ரஃப் அறிமுகமானார். அங்கிருந்து இந்தத் திரைப்படத்தை உருவாக்குவதற்கு இரண்டு ஆண்டுகளானது.

எனக்கு சிங்கப்பூரில் தொழில் இருக்கிறது, குடும்பம் இருக்கிறது, இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். நான் சர்வதேச அளவிலான மேடைப் பேச்சாளர், எழுத்தாளர். கால்பந்து பயிற்சி அகாடமியை நடத்தி வருகிறேன். இத்தனை பணிகளையும் நிர்வகித்துக் கொண்டே இடையில் இந்தப் படத்தின் பணிகளைக் கவனித்தேன். சரியாகத் திட்டமிட்டுப் பணியாற்றினால் நல்ல படத்தை வழங்க இயலும் என்பதில் உறுதியாக இருந்தேன். கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமா தான்.

என்னுடைய தாத்தாவின் பெயரில்தான் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறேன். ஆபாசக் காட்சிகள் இடம் பெறக் கூடாது, பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெறக் கூடாது என்ற இரண்டு நோக்கத்தை மனதில் வைத்து தான் என் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறேன். பொழுதுபோக்காகவும் இருக்க வேண்டும், குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து திரையரங்க அனுபவத்தையும் பெற வேண்டும் என்பதற்காகப் படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டேன். இதைத்தான் இயக்குநர் அஷ்ரஃப்பிடம் தெளிவாகத் தெரிவித்தேன். கதை நன்றாக இருக்கிறது. இருந்தாலும் இப்படத்தின் டீசர் என்ன, ட்ரெய்லர் என்ன என்பது வரை விவாதித்தோம். அதனால் தான் அவரை முதலில் ஒரு குறும்படத்தை இயக்கச் சொன்னேன்.

இந்தப் படத்தில் முக்கியமான சோஷியல் மெசேஜ் இருக்கிறது. இதனை க்ரைம் திரில்லர் ஜானரில் சொல்ல முடியும் என்பதை முதன்முதலாக முயற்சித்து இருக்கிறோம். அந்த வகையில் இது முதல் முயற்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தப் படத்தின் அனைத்து பணிகளையும் 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவு செய்தோம். அதன் பிறகு இப்படத்தினை நேர்த்தியாக செதுக்குவதற்கு ஓராண்டு காலம் எடுத்துக் கொண்டோம். ஏனெனில் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்” என்றார்.

சண்டைப் பயிற்சி இயக்குநர் நூர், “ஆக்ஷன் காட்சிகளில் டூப் எதுவும் வேண்டாம் என்று சொல்லி வில்லனாக அறிமுகமாகும் மகேஸ்வரன் தேவதாஸ் அவரே நடித்தார். நான்காவது மாடியில் இருந்து குதிப்பது போன்ற ஒரு காட்சியைப் படமாக்கும் போது டூப் வைத்துக் கொள்ளலாம் என்று விவாதித்தோம். ஆனால், ‘அதனை நானே செய்கிறேன்’ என்று சொல்லி துணிச்சலுடன் நடித்தார். இந்தக் காட்சியின் போது அவர் ஒரே நாளில் பயிற்சி எடுத்துக் கொண்டு நடித்தார். இதன் மூலம் நடிப்பின் அவருடைய அர்ப்பணிப்பும் ஆர்வமும் தெரிந்தது” என்றார்.

இயக்குநர் அனீஸ் அஷ்ரஃப், ”நான் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணிபுரிந்திருக்கிறேன். மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘பிசாசு’ திரைப்படத்தை கன்னடத்தில் ‘ராட்சசி’ என்ற பெயரில் இயக்கி இருக்கிறேன். தமிழில் முதன் முதலாக நான் இயக்கி இருக்கும் படம் இது. படத்தின் பெயர் ‘சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம்’. தமிழில் எனக்கு இது முதல் பக்கம். என்னுடைய தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாசுக்கும் இதுதான் முதல் படம். எனக்கு சிங்கப்பூரில் உள்ள ஒரு நண்பர் வாயிலாகத் தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் ஃபோன் மூலம் அறிமுகமானார்.

முதல் பக்கம் என்பது கதைக்குப் பொருத்தமானதாக இருந்ததால் வைத்திருக்கிறோம். சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் என்பது சென்னையில் நடைபெற்ற ஒரு குற்றச்சம்பவத்தின் முதல் பக்கத்தில் இடம் பிடித்திருக்கும் தகவல் என வைத்துக் கொள்ளலாம்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் பணியாற்றிய போது அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட ஒரு விஷயம் என்னவெனில், அவர் ஒரு கதையை விவாதிக்கத் தொடங்குவதற்கு முன் சோஷியல் மெசேஜ் ஒன்றைத் தீர்மானித்து, அதை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என முடிவு செய்வார். இதற்காகத்தான் அவர் கதையையும், காட்சிகளையும், திரைக்கதையையும் உருவாக்குவார். அதனால் தான் நானும் இந்தப் படத்தில் ஒரு சோஷியல் மெசேஜை வைத்து கதையையும் திரைக்கதையையும் உருவாக்கி இருக்கிறேன்” என்றார்.

நாயகன் வெற்றி, “’சென்னை பைல்ஸ் – முதல் பக்கம்’ படத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று என்னைத் தேர்வு செய்த இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. அவருடைய குறும்படத்தைப் பார்த்தேன். பார்த்ததும் நம்பிக்கை பிறந்தது. அதில் அவருடைய திறமை பளீச்சிட்டது. அதேபோல் சொன்ன நாட்களில் சொன்னபடி படப்பிடிப்பை நிறைவு செய்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு உணர்வுப்பூர்வமான க்ரைம் த்ரில்லர் படத்தை உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.