இது தமிழ் ⚡ AMP

காலேஜ் ரோடு விமர்சனம்

By Dinesh R | Dec 31, 2022

கல்வியென்பது நமது தேவையன்று; அது ஒவ்வொருவரின் உரிமை என்பதை கமர்ஷியலுடன் சொல்லியுள்ளது காலேஜ் ரோடு திரைப்படம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சென்னையில் மிகப்பெரிய கல்லூரியில் முதலாமாண்டு மாணவராக சேர்கிறார் லிங்கேஷ். வங்கிகளின் பாதுகாப்பை மேன்மைப்படுத்தும் ப்ராஜெக்ட் ஒன்றைக் கண்டுபிடித்துள்ள லிங்கேஷ், அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சி செய்கிறார். அதே சமயம் சென்னையின் முக்கிய வங்கிகளில் கொள்ளை நடக்கிறது. ஒருபுறம் அதற்கான விசாரணைகள் நடக்கின்றன. நாயகன் லிங்கேஷ், வங்கிக் கொள்ளைச் சம்பவங்களுடன் எப்படி தொடர்புப்படப்படுகிறார் என்பதையும், வங்கிக் கொள்ளைக்கான காரணமென்ன என்பதையும், கல்வி எப்படியானவர்களின் கைகளில் சிக்கியுள்ளது என்பதையும், பல அதிரடி திருப்பங்களோடு விரிவாகப் பேசுகிறது படத்தின் திரைக்கதை.

முதன்மை நாயகனாக லிங்கேஷ், இந்தப் படத்தில் மிக முதிர்ச்சியான நடிப்பை நன்றாக வழங்கியுள்ளார். உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு அவரது இயல்பான நடிப்பு மேலும் அழுத்தம் கொடுக்கிறது. நாயகியின் பாத்திரம் சிறியது என்றாலும் கொடுத்த வேலையைக் குறைவின்றிச் செய்திருக்கிறார். லிங்கேஷின் கிராம நண்பர்களாக வரும் நால்வரும் நல்ல தேர்வு. கல்லூரி நண்பராக வருபவரின் பாத்திரமும், அவரின் நடிப்பும் அருமையாக அமைந்துள்ளது. நகைச்சுவைக்கென தனி ட்ராக் இல்லாமல் கதையோடே இணைத்துள்ளார் இயக்குநர்.

இளமை துள்ளலுடன் ஆரம்பிக்கும் முன்பாதியில், ஒளிப்பதிவாளர் வண்ணங்களை அழகாக இணைத்து, காட்சிபூர்வமாகப் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். படத்தில் வரும் மிக முக்கியமான ப்ளாஷ்-பேக் காட்சிகளில்ல் பின்னணி இசை அருமையாக அமைந்துள்ளது.

சாமானியர்களுக்குக் கல்வி எட்டாக்கனி ஆகிவிடக்கூடாது எனும் கருத்தைத் தன் முதல் படத்திலே அக்கறையோடு பதிவு செய்த இயக்குநர் ஜெய் அமர் சிங் பாராட்டுக்குரியவர். சிறிய பட்ஜெட்டிலும் இவ்வளவு பிரம்மாண்டத்தையும் நம்பகத்தன்மையையும் மேக்கிங்கில் கொண்டு வந்தது நிச்சயமாக ஆச்சரியம் தரும் உழைப்பு. ஒரு நற்கருத்தைத் தாங்கி வந்துள்ள காலேஜ் ரோடு, கவனத்தை ஈர்க்கும் முக்கியமான படமாக வருடயிறுதியில் வந்துள்ளது.