இது தமிழ் ⚡ AMP

“தந்தையின் மனமென்பது கடவுளின் மனது” – இயக்குநர் சுப்ரமணிய சிவா | ராமம் ராகவம்

By Dinesh R | Feb 19, 2025

ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தனராஜ் கொரனானி இயக்க, சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’ ஆகும். இப்படத்தை GRR மூவிஸ் சார்பில் ரகு தமிழ்நாடெங்கும் வெளியிடுகிறார். ஓர் (அ)சாதாரண தந்தையைப் பற்றிய படமிது. ஃபிப்ரவரி 21 அன்று வெளியாகும் இப்படத்தின் முன்வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் பிருத்தவி போலவரபு, “தந்தைக்கும் மகனுக்குமான பிணைப்பைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது. இந்தப் படத்தைப் பார்த்து முடித்ததும் அப்பாவை அழைத்து, ‘ஐ மிஸ் யூ’ என படம் பார்ப்பவர்கள் சொல்வார்கள்” என்றார்.

இயக்குநர் சுப்ரமணிய சிவா, “ராமம் என்றால் புகழ்; ராகவம் என்றால் மகன். தாயாக யார் வேண்டுமானால் வாழ்ந்துடலாம். தாயின் வயிற்றில் பத்து மாதம் இருப்பதால் தாய்மை அனைவரிடமும் இருக்கு. ஒரு மனிதன் தாயாக வாழ்வது இயற்கையான விஷயம். ஆனால் ஒரு மனிதன் தந்தையாக மாறுவதென்பது தவம். 40 வயதில், ஒருவனது முகம் அவனோட தந்தை முகமாக மாறும். சின்ன வயதில் என் முகம் என் அம்மா அமுதவல்லியின் முகமாக இருந்தது. நாற்பதைத் தாண்டியதும், என் அப்பா வடிவேலுவின் முகமாக மாறிவிட்டது. பெண்மையும் அன்பும் சேரும் போது தந்தை உருவாகிறான். தந்தை மட்டுமே மகனிடம் தோற்க ஆசைப்படுவான். வேறெந்த உறவும் யாருடனும் தோற்க ஆசைப்படுவதில்லை. ராமாயணத்தில் தசரதனும் கஷ்டப்படுறான், மகாபாரதத்தில் கெட்ட பிள்ளை பெற்ற திருதுராஷ்ட்ரனும் கஷ்டப்படுகின்றான். பெரிய வெற்றி பெற்ற தந்தையின் மகன், தந்தையை வெல்ல முடியாமல் வாழ்நாளெல்லாம் கஷ்டப்படுவான். அவன் எப்படி வெற்றி பெறலாம் என்றால் நல்ல பெயர் எடுத்து ஜெயிக்கலாம்.

காந்தியை சுயசரிதையை எழுதச் சொல்றாங்க. ‘சுயசரிதை என்றால் தன் புகழைப் பாடுவது’ன்னு முன்னுரையில் எழுதுறார். ‘அது எனக்குக் கூச்சமா இருக்கு’ என்று சொல்லிவிட்டு, ‘நான் சத்தியத்தை எழுதுகிறேன்’ எனச் சொல்லியிருப்பார். காந்திக்கு 14 வயசு இருக்கும். பீடி பிடிப்பார், புலால் சாப்பிடுவார், திருடுவார். படுக்கையில் இருக்கும் அவர் அப்பாவிற்குக் கால் அமுக்கிக் கொண்டே, துளசிதாஸின் ராமாயணத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். ‘சிறந்த மகனான ராமன் பற்றியக் கதையைக் கேட்கிறோம். தான் நிறைய செய்கிறோம்’ என காந்திக்குக் குற்றவுணர்வு எழுகிறது. நேராகத் தந்தையிடம் பேச பயம். அதனால் வீட்ல இருந்து கொண்டே தந்தைக்குக் கடிதம் எழுதுறார். ‘ராமாயணம் மிகச் சிறந்த மகனைப் பற்றிய கதையா இருக்கு. ஆனா நான் நிறைய தவறு பண்றேன்’ என எழுதி போஸ்ட் பண்ணுகிறார். காந்தியின் அப்பாக்குக் கடிதம் வருது. காந்தியின் எதிரிலேயே அவரது அப்பா அந்தக் கடிதத்தைப் படிப்பார். காந்தி மூலையில நிப்பாரு. ‘அப்பா அடிப்பார்’ என காந்தி நினைக்கிறார். ஆனா காந்தியின் அப்பா அழுதுட்டே அந்த லெட்டரைப் படிப்பார். அதைப் பார்த்து காந்தியும் அழுகிறார். காந்தியை அவர் அப்பா எதுவும் கேட்காமல், அழுதுட்டே, ‘நீ போ’ என்கிறார். ‘அஹிம்சை தான் சிறந்த ஆயுதம் என நான் கண்டுபிடிச்ச இடம் இதுதான்’ என்கிறார் காந்தி.

தந்தையின் கண்ணீர் என்பது சாதாரண விஷயமில்லை. கண்ணீர் அமிர்தம் போன்றது. ஒரு ஏழைக்காகக் கண்ணீர் விட்டால் நீங்க கடவுள் ஆகிடுறீங்க. கஷ்டப்படும் மனிதனுக்காகக் குரல் கொடுத்தால் பாதி கடவுள். சத்தமிடப் பயந்து, மனதால் அங்கே நல்லது நடக்கணும் என நினைத்தால் கால் கடவுள். இறங்கித் தடுத்துட்டா முழுக் கடவுள். தந்தையின் மனம் என்பது கடவுளின் மனது. கடவுள் மாதிரி ஆகணும்ன்னா நீங்க தந்தை ஆகணும். புது இயக்குநர் தன்ராஜ் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.