வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இப்படத்தின் இந்தச் சாதனையைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் 50 ஆவது நாள் வெற்றி விழாவையும், நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியையும் நடத்தினர். படத்தின் வெற்றிக்காக உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவைச் சேர்ந்தவர்களைக் கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு நினைவுப் பரிசுகளாக ஷீல்டுகள் மற்றும் பதக்கங்களை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.
இந்நிகழ்வினில் பேசிய இயக்குநர் செல்லா அய்யாவு, “கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்குப் பூஜை போட்டு படப்பிடிப்பைத் தொடங்கினோம். இன்று செப்டம்பர் 3-ஆம் தேதி, படம் வெளியாகி 50 நாட்கள் ஓடிய வெற்றியைக் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு படம் தொடங்கி, ஒரு ஆண்டுக்குள் வெளியாகி, 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடுவது பெரிய விஷயம். முன்பெல்லாம் 100, 175, 200 நாட்கள் ஓடிய படங்களின் விளம்பரங்களைப் பத்திரிகைகளில் பார்ப்பது வழக்கம். காலப்போக்கில் திரையரங்கு வெளியீட்டு முறைகளும், ரசிகர்கள் படம் பார்க்கும் தளங்களும் மாறிவிட்ட நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ 50 நாட்களைக் கடந்துள்ளது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்தப் படத்தின் மீது ஆரம்பம் முதலே விஷ்ணு விஷால் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். கதை எழுதுவதிலிருந்து நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்வது, படப்பிடிப்பு, தயாரிப்பு, வெளியீடு மற்றும் விளம்பரப் பணிகள் என ஒவ்வொரு கட்டத்திலும் அவர் தீவிரமாகச் செயல்பட்டார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் இந்தப் படத்தை வெற்றிபெறச் செய்ய முழுமையான ஈடுபாட்டுடன் உழைத்தார். இந்தப் படம் இன்று பெற்றுள்ள வெற்றியில் அவருடைய பங்கு மிக முக்கியமானது. அவருக்கு எனது சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், ‘கட்டா குஸ்தி’ ஒரு பிராண்டாக உருவாக முக்கியமான அடையாளமாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமியின் பங்களிப்பும் மிகப்பெரியது” என்றார்.
விஷ்ணு விஷால், “இந்த விழாவில் கலந்து கொண்ட ரம்யா கிருஷ்ணன் மேடத்திற்கும் எனது சிறப்பு நன்றி. 15 நிமிட சிறப்புத் தோற்றம் என்று முதலில் அவரிடம் கூறினேன். காட்சிகளை அனுப்பிப் படிக்கச் சொன்னபோதும், என் மீதான அன்புக்காகவே அவர் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தப் படத்தின் உயிர்நாடியாக இருந்த ஜாராவை ரசிகர்கள் திரையரங்குகளில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். அவரும் இந்த வெற்றியின் முக்கியமான பகுதியாக இருக்கிறார். இந்த வெற்றியைக் கொண்டாட அனைவரும் ஒன்றாக இருப்பது கூடுதல் மகிழ்ச்சி. ஐசரி கணேஷ் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த வெற்றியை 50ஆவது நாளில் கொண்டாடுவோம் என்று நான் அவரிடம் உறுதியளித்திருந்தேன். தொடர்ந்து எங்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கும், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சிறப்பாக நடத்தி இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக எடுக்கும் முயற்சிக்கும் நன்றி. சினிமாவில் வெற்றி கிடைப்பது எளிதான விஷயம் அல்ல; அது அரிதாகக் கிடைக்கும் ஒன்று. அப்படி ஒரு வெற்றி கிடைக்கும்போது அதை முழுமையாகக் கொண்டாட வேண்டும் என்பதே என் எண்ணம். இந்த வெற்றியை மிகச் சிறப்பாகக் கொண்டாடும் ஐசரி சாருக்கு மீண்டும் நன்றி. இந்த நிகழ்வை சிறப்பிக்க வந்த ராஜ்மோகன் சாருக்கும் நன்றி. அதேபோல், பிரபுதேவா சார் சிறுவயதில் இருந்தே எனது மனதின் மிகப்பெரிய இடத்தில் இருப்பவர். ‘சிக்கு புக்கு’ பாடலுக்கு நடனமாடி பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேன். ஒரு காலத்தில் நடனக் கலைஞராக வேண்டும் என்பதே எனது ஆசை. கால் காயம் காரணமாக அந்தப் பயணத்தைத் தொடர முடியவில்லை என்றாலும், பிரபுதேவா சார் எனது சிறுவயது முன்னுதாரணமாக இருந்தார். அவரது பாடல்களையும் நடனங்களையும் பின்பற்றி வளர்ந்தவன் நான், இன்று அவர் இந்த விழாவில் கலந்து கொண்டது மிகப்பெரிய மகிழ்ச்சி.
செல்லா எனக்கு எப்போதுமே மிகவும் ஸ்பெஷலான இயக்குநர். எனது திரைப்பயணத்தில் ஒரு இயக்குநருடன் நீண்ட பயணம் அமைந்தது என்றால் அது செல்லாவுடன்தான். அவரது வளர்ச்சி மிகவும் இயல்பாகவும் அழகாகவும் அமைந்து வருகிறது. அவர் இன்னும் நீண்ட காலம் இதேபோன்று சிறப்பான வெற்றிகளைப் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். குறிப்பாகக் குடும்ப ரசிகர்களைத் திரையரங்குகளுக்கு அழைத்து வரும் இதுபோன்ற படங்களை தொடர்ந்து உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட இயக்குநர்கள் தற்போது மிகவும் குறைவாக இருக்கிறார்கள். நல்ல குடும்பப் படங்களைத் தொடர்ந்து கொடுங்கள். ‘கட்டா குஸ்தி 3’ படத்தையும் விரைவில் உருவாக்கலாம். வேல்ஸ் நிறுவனம் சார்பில் தொடர்ந்து கிடைத்து வரும் ஆதரவுக்கும் குஷ்மிதாவுக்கும் எனது நன்றி. இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி” என்றார்.