இது தமிழ் ⚡ AMP

கெவி விமர்சனம் | Gevi review

By Dinesh R | Jul 17, 2025

கெவி என்றால் ஆழமான பள்ளத்தாக்கு எனப் பொருள். கொடைக்கானலுக்குக் கீழுள்ள ஒரு மலைப்பகுதியில், பாண்டிய தேசத்தைச் சேர்ந்த மக்கள் குடி புகுகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில், குளிர் பிரேதசங்களைத் தேடும் முயற்சியில், கெவி மக்களின் உதவியோடு கொடைக்கானலைக் கண்டடைகின்றனர் வெள்ளையர்கள். அவர்களின் வரவிற்குப் பிறகு, வெள்ளகெவி என்று அப்பகுதி அழைக்கப்படுகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சாலை வசதியற்ற கெவியில் வாழும் மக்கள் மிகவும் துயருகின்றனர். ஓரிரவு, கொடி சுற்றிக் கொள்வதால் கர்ப்பிணியான மந்தாரை மிகவும் அவதியுறுகிறார். ஊரே ஒன்று கூடி, மந்தாரையை டோலியில் தூக்கிக் கொண்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்குச் செல்கின்றனர். அதே இரவில், சாலை வசதி கேட்டுக் கோபப்பட்டான் என்பதற்காக மந்தாரையின் கணவனான மலையனைக் காவல்துறையினர் அடித்துக் கொல்ல முயற்சி செய்கின்றனர். அந்த இரவு எப்படி விடிகிறது என்பதுதான் படத்தின் முடிவு.

படக்குழுவினர் மிரட்டியுள்ளனர். படத்தைத் தயாரித்துள்ள ஜெகன் ஜெய சூர்யா தான் படத்தின் ஒளிப்பதிவாளர் கூட! நட்சத்திரங்கள், தீப்பந்தங்கள், டார்ச் லைட் என மிகக் குறைவான ஒளியில் இருளின் அடர்த்தியையும், மந்தாரையின் மரண அவஸ்தையையும் மிக raw-வாகத் திரையில் கொண்டு வந்துள்ளார். ட்ரோன் ஷாட் முதல், சின்னச் சின்ன ஷாட் வரை மிக நேர்த்தியாக எடுத்துள்ளார். ஹரிகுமரனின் படத்தொகுப்பு ஒளிப்பதிவாளரின் உழைப்பிற்கு முழுமையாக நியாயம் செய்துள்ளது. கரடு முரடாக மேல்நோக்கிச் செல்லும் மலைப்பாதையில், மந்தாரையைக் காப்பாற்ற அந்த ஊர்மக்கள் போடும் ஓர் அசுரத்தனமான முயற்சியைக் காணும்போது மயிர்கூச்செரிப்பு எழுகிறது. இன்னொருபுறம், மலையனை மிருகத்தனமான நையபுடைக்கின்றனர் காவல்துறையினர்.

அரசு மருத்துவரின் அலட்சியம், உதவி ஆய்வாளரின் அதிகாரத் திமிர், தங்களில் ஒருவரைக் காக்கத் திரளும் ஊர்மக்கள் என படம் மனித உணர்வுகளை ஆழமாகத் தொட்டுச் செல்கிறது. போஸ்ட்மேனாக நடித்துள்ள உமர் ஃபாரூக், மந்தாரையின் தம்பியாக நடித்துள்ள விவேக் மோகன், கம்பவுண்டராக நடித்துள்ளவர், மருத்துவச்சியாக வரும் பாட்டி, ஊர் மக்கள் என அத்தனை பேரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியின் ‘ஜல்லிக்கட்டு (2019)’ படத்திற்கு இணையானதொரு மேக்கிங்கைத் தந்துள்ளார் இயக்குநர் தமிழ் தயாளன். பாலசுப்ரமணியத்தின் பின்னணி இசையும், கிருபாகரன் ஏசய்யாவின் வசனங்களும், கெவி மக்களின் வலியை சற்று அழுத்தமாகவே பதிந்துள்ளது.

மலையனாக நடித்துள்ள ஆதவன் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளார் மந்தாரையாக நடித்துள்ள ஷீலா ராஜ்குமார். உதவி ஆய்வாளராக சார்லஸ் வினோத், பயிற்சி மருத்துவராக ஜேக்குலின் லைடியா, செவிலியராக ஜீவா சுப்ரமணியன் என நடிகர்கள் தேர்வு அனைத்துமே கனகச்சிதம்.

படத்தை முடித்துள்ள கடைசித் திரைச்சட்டகத்தில், ஓட்டுக்காக மட்டுமே வெள்ளகெவி மக்களை அரசாங்கம் ஐந்தாண்டுக்கு ஒருமுறை அணுகுகிறது எனச் சொல்ல வந்த மையக் கருத்தை மிகப் பிரமாதமாகக் காட்டியுள்ளார் அறிமுக இயக்குநர் தமிழ் தயாளன்.