இது தமிழ் ⚡ AMP

Hi :) விமர்சனம்

By Dinesh R | Aug 28, 2026

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ‘யாரடி நீ மோகினி’ படப்பாணியில் ஒரு படம் தர முயற்சி செய்துள்ளது தயாரிப்பாளர் மற்றும் நடிகை நயன்தாராவின் குழு.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ரஜினி ரசிகனாகவும், கமல் ரசிகையாகவும் நிறைய முரண்களோடு இருக்கும் கவினும் நயன்தாராவும் ஒன்று சேர்வது தான் கதையின் ஒருவரிக்கதை. காதல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதை வாழ்வின் லட்சியமாகக் கொண்டுள்ள கவின் ஊரைவிட்டு ஓடி வந்துவிடுகிறார். இன்னொரு புறம் தன் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடிவருகிறார் நயன். இருவரும் சென்னையில் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பைக் காலம் அல்ல, பழைய ஃபார்மட்டிலான திரைக்கதை வழங்குகிறது. அதன்பின் இந்த ஜோடி எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பது படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகியாக நயன்தாரா, பார்வையாளர்களுக்கு மிகவும் பரீச்சயமான அவரது வழக்கமான நடிப்பையே மீண்டும் அள்ளித் தெளித்துள்ளார். ஒருசில எமோஷ்னல் ஏரியாக்களில் மட்டும் ஸ்கோர் செய்கிறார். கவின் அளவறிந்து நடித்துள்ளார். இருப்பினும் நயன்தாராவை ஒரு சக கலைஞர் மனப்பான்மையில் அணுகாமல், ரசிக மனப்பான்மையிலே திரையிலும் அணுகியுள்ளாரோ எனத் தோன்றுகிறது. பிரபு, சுஹாசினி கூட்டணிக்கென்று படத்தில் ஒரு வலுவான கதையுள்ளது. அவர்களும் நன்றாக நடித்துள்ளனர். ஆனாலும் திரைக்கதை ஓட்டத்தில் அவை உயிர்ப்போடு இல்லை. ஆதித்யா கதிரின் நகைச்சுவை நிச்சயமாகப் படத்திற்கு எனர்ஜி சேர்த்துள்ளது. மறைந்த இயக்குநர் கே.பாக்கியராஜ் பேர் சொல்லும் படி ஸ்கோர் செய்துள்ளார். ராதிகா சரத்குமார்க்குப் போதிய வாய்ப்பைப் படம் வழங்கவில்லை

ஒளிப்பதிவைச் செய்துள்ள ராஜேஷ் சுக்லா, கண்களைக் கவரும் வண்ண ஒளிகளால் தோரணம் கட்டியுள்ளார். ஜென் மார்ட்டின் இசையில் பாடல்களை ரசிக்க முடிகிறது. பின்னணி இசையும் பரவாயில்லை.

மிகவும் பழைய பழகிய கதை என்றாலும் திரைக்கதையில் சின்னச்சின்ன ஐடியாக்களை வைத்திருக்கிறார் இயக்குநர் விஷ்ணு எடவன். ஆனால் ஒட்டுமொத்த படத்தையும் தாங்குவதற்கு அந்த ஐடியாக்கள் போதவில்லை. கவின் நயன்தாராவிடம் காதலைச் சொல்லாமல் விழுங்கித் திரிவது தான் பின்பாதி படம். அப்படியானால் அதற்கான லாஜிக்-ஐ எவ்வளவு ஸ்ட்ராங்காக வைத்திருக்க வேண்டும்? அங்குத் தவறி விடுகின்றனர். இருப்பினும், ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் சுவாரசியமான காட்சிகள் படத்தை ரசிக்க வைக்கிறரு.

– வெண்பா தமிழ்