இது தமிழ் ⚡ AMP

HIT: The Third Case விமர்சனம் | Hit 3 review

By Dinesh R | May 02, 2025

விசாரணையை மையமாகக் கொண்ட முதலிரண்டு பாகங்களைப் போலல்லாமல், கொஞ்சம் விசாரணை — பக்கா ஆக்‌ஷன் த்ரில்லராக ஹிட் 3-ஐ இறக்கியுள்ளார் இயக்குநர் சைலேஷ்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தலைக்கீழாகத் தொங்க விட்டு, ஒரு மனிதரின் கழுத்தை அறுத்துக் கொள்ளும் வழக்கினை அர்ஜுன் சர்க்கார் விசாரிக்கிறார். இந்தியா முழுவதும் இந்த பாணியில் பல்வேறு கொலைகள் நடப்பதைத் தெரிந்து கொள்கிறார். டார்க் நெட் மூலமாக, இந்தக் கொலைகாரர்களை இயக்குபவனைக் கண்டறியக் களமிறங்குகிறார் அர்ஜுன் சர்க்கார்.

மிருதுளா எனும் ASP பாத்திரத்தில், KGF நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மிக அழகாக ஸ்ரீநிதியின் கதாபாத்திரத்தைத் தேவையான அளவுக்கு மட்டும் கச்சிதமாக உபயோகித்துள்ளனர். ஸ்ரீநிதி ஷெட்டியின் ஃப்ளாஷ-பேக் காட்சிகள், நானியால் கவரப்பட்டுக் காவல்துறைக்குள் வந்ததென பின் கதையைச் சுவாரசியமாகச் சுருக்கமாக இணைத்துள்ளனர்.

கொடூரமான வில்லனாக ப்ரதீக் பாபர் நடித்துள்ளார். அவர் ஒரு குழந்தையைக் கையில் பிடித்து, அக்குழந்தையைக் கொல்ல ஆளைத் தேர்ந்தெடுக்கும்போது உடல் சில்லிடுகிறது. A சான்றிதழ் பெற்ற படம் என்பது ஆறுதல். உண்மையில் அச்சுறுத்தலாக இருப்பது வில்லனா நாயகனா என்பது விவாதத்திற்குரிய கேள்வி.

இரத்தக்களறியாக உள்ளது படத்தின் இரண்டாம் படம். சுமார் 150 பேர் கொல்லப்படுகின்றனர். நானி அசால்ட்டாக அர்ஜுன் சர்க்கார் பாத்திரத்தைத் திரையில் கொண்டு வந்துள்ளார். சைக்கோக்களின் உலகத்திற்குள் நுழைந்து, அவர்களை விடத் தானொரு பெரிய சைக்கோவென நிரூபித்துவிட்டு வருகிறார். நானி இல்லையேல் இந்தப் படம் ரத்த சகதியாகக் காட்சியளித்திருக்கும். நானி முழு நீள ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருந்தாலும், அவரது பக்கத்து வீட்டுப் பையன் பிம்பம், ரத்த வாடையைக் கொஞ்சம் நீர்த்துப் போக வைக்க உதவியுள்ளது.

ஹிட் 3, ரத்தம் கொப்பளிக்கும் ஆக்‌ஷன் விரும்பிகளுக்கான படம். ஹிட் நான்காம் பாகத்து நாயகனென கார்த்தியை அறிமுகப்படுத்தி ஆவலைத் தூண்டியுள்ளனர்.