இது தமிழ் ⚡ AMP

“நான் சென்னைப் பையன்” – விஷ்ணு மஞ்சு | கண்ணப்பா

By Dinesh R | Jan 19, 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரம்மாண்ட சரித்திரக் காவியம் ‘கண்ணப்பா’ ஆகும். இதில், பிநடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மோகன் பாபு, சரத்குமார், மோகன்லால், அக்‌ஷய் குமார், பிரபாஸ், காஜல் அகர்வால், மதுபாலா உள்ளிட்ட இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவ்வாண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நடிகர் விஷ்ணு மஞ்சு, “நான் பிறந்து வளர்ந்தது சென்னையில் தான். தமிழ் நன்றாகப் பேசுவேன். ரொம்ப நாளாக தமிழ் பேசாததால் கொஞ்சம் பிழை இருக்கலாம். 15 வருடங்களுக்கு முன்பு நான் நடிகனாகத் தொடங்கினேன். அன்று முதல் தமிழில் படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இன்று சிவன் அருளால் என் ஆசை நிறைவேறியிருக்கிறது. அதுவும் கண்ணப்பா மூலம் நிறைவேறியது பெருமையாக இருக்கிறது.

15 வருடங்களுக்கு முன்பு இருந்தே சரத்குமார் அங்கிளுடன் படம் பண்ண வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டு இருந்தேன். இப்போது அது நடந்திருக்கிறது. என் அப்பா மீது உள்ள மரியாதை காரணமாக தான் அவர் நடித்தார். காலையில் 7 மணிக்கு மேக்கப்போடு படப்பிடிப்பில் பங்கேற்போம் என்று அவர் சொன்னார். அந்த நேரத்தை நிர்ணயம் செய்ததே அவர் தான். அவர் நினைத்திருந்தால், அந்தக் கடும் குளிரில், ‘9 மணிக்கு வருகிறேன்’ என்று சொல்லியிருக்கலாம். ஆனால், அதைச் செய்யாமல் 7 மணிக்கு மேக்கப் உடன் படப்பிடிப்பு தளத்தில் வருவார், அவரைப் பார்த்து மற்ற கலைஞர்களும் அதே நேரத்திற்கு, சிலர் அதற்கு முன்பாகவும் வந்துவிடுவார்கள்.

பிரபு அண்ணா, அவர் என் அப்பாவை அண்ணா என்று அழைப்பார். நான் அவரை அண்ணா என்று அழைக்கிறேன். நான் சிறு வயதில் அவரது வீட்டுக்கு சென்று நடனம் கூடக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அவரைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் அது குறைவாக தான் இருக்கும். அவர் நடன இயக்குநராகப் பணியாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நான் கேட்டுக் கொண்டதற்காக அவர் எங்கள் படத்தில் பணியாற்றினார். இரண்டு முறை நியூசிலாந்துக்கு அவர் வந்தார். அவருக்கு நன்றி. படம் பார்த்தால் உங்களுக்கே புரியும், நான் பிரபு அண்ணா தான் நடனம் அமைக்க வேண்டும் என்று ஏன் முடிவு செய்தேன் என்று.

இயக்குநர் முகேஷ் சார், படம் இயக்குவது இது தான் முதல் முறை. அவர் நிறைய டிவி தொடர்கள் இயக்கியிருக்கிறார். நான் பல முன்னணி இயக்குநர்களுடன் பணியாற்றியிருக்கிறேன், முகேஷ் சார் உடனான என் உறவு ரொம்பவே ஸ்பெஷல். நான் படம் தொடர்பாகக் குழப்பமாக இருக்கும் போது, எனக்குப் பெரும் உதவியாக இருந்தார். படத்தொகுப்பாளர் ஆண்டனி, ’காக்க காக்க’ படம் பார்த்தது முதல் அவருடைய ரசிகனாகி விட்டேன். அவர் ஒரு வாரத்தில் முழுப் படத்தையும் எடிட் செய்துவிடுவார். ஆனால் என் படத்தை ஒரு வருடமாக எடிட் செய்து கொண்டிருக்கிறார். கேமரா மேன் சித்தார்த், என் சகோதரர். அவர் எனக்காக இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தியை நாங்கள் தான் அறிமுகப்படுத்த இருந்தோம். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் அறிமுகமாகி விட்டார். அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். நிச்சயம் பெரிய நடிகையாக வருவார்” என்றார்.