இது தமிழ் ⚡ AMP

Indian Penal Law (IPL) விமர்சனம்

By Dinesh R | Dec 02, 2025

ரேசிங் ஸ்டார் TTF வாசனை முதன்மை நாயகனாக முன்னிறுத்தி, உண்மைச் சம்பவங்களின் இன்ஸ்பயராகப்பட்டு உருவாகியுள்ளது IPL திரைப்படம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

எளிய குடும்பப் பின்னணி கொண்டவர் கிஷோர். மனைவி அபிராமி, ஒரு தங்கை ஒரு மகள் என வாழ்ந்து வரும் அவர் கால் டாக்ஸி ஓட்டி வருமானம் ஈட்டி வருகிறார். அவரது தங்கை வீட்டிலிருந்து ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் போது, டெலிவரி பையனான TTF வாசன் மீது காதல் கொள்கிறார். TTF வாசனும், “பொண்ணு நல்லாயிருக்காளே!” எனக் காதலிக்கத் தொடங்குகிறார். இச்சூழலில் காவல்துறை ஆய்வாளரான போஸ் வெங்கட் ஒரு இளைஞனைச் சிரையில் அடித்துக் கொன்றுவிடுகிறார். கொன்றதற்கான காரணம் அந்த இளைஞன் ஃபோனிலிருந்த வீடியோ. அந்த வீடியோ என்ன, அந்த வீடியோ சர்ச்சைக்குள் கிஷோர் குடும்பம் எப்படி வந்தது, கிஷோர் குடும்பத்தை TTF எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை.

கதையின் நாயகனாக இல்லாமல் கதையில் ஒரு நாயகனாக வலம் வருகிறார் TTF வாசன். படத்தின் முதல் காட்சியிலேயே, “பைக் வேகமாக ஓட்டாதீங்க” என அட்வைஸ் செய்கிறார். நீதி வெல்லும் என தவெக தலைவர் போல் பதிவு மட்டும் போடாமல் அதற்காகப் போராடவும் செய்கிறார். ஆனால் அவருக்கு நடிப்புத்தான் வருவேனா என அடம்பிடித்துள்ளது. கிஷோர், அபிராமி மட்டுமே படத்தின் ஆன்மாவாக உள்ளனர். போஸ் வெங்கட் கூடுமான வரை நல்ல வெறுப்பைச் சம்பாதிக்கும் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்திப் போயுள்ளார்.

அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் ஒரு பாடல் கொண்டாட்டத்திற்கு ஏற்றவாறு உள்ளது. ஒரு பாடல் ஃபீல் குட் ரகம். பின்னணி இசை ஓகே ரகம். ஒளிப்பதிவாளர் பிச்சுமணி ஓரளவு நல்ல நல்ல ஷாட்களை கம்போஸ் செய்துள்ளார்.

இயக்குநர் கருணாநிதி முன்பாதியை ஒரு மாதிரியாகவும், பின்பாதியை ஒரு மாதிரியாகவும் கலந்து வைத்துள்ளார். ஒப்பீட்டளவில் பின்பாதி ஒருமாதிரி ஒகே எனச் சொல்லமளவில் உள்ளது. சொல்லப்படும் கருத்தும், விறுவிறுவென நகரும் வேகமுமே அதற்குக் காரணம். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்த காவலரின் பெயர் முத்துக்கருப்பன். இந்தப் படத்தில் போஸ் வெங்கட்டின் பெயரும் முத்துக்கருப்பனே! மேலும் கொடநாடு வாட்ச்மேன் கொலை மேட்டரும் படத்திலுள்ளது. இதெல்லாம் இந்தப் படத்தில் எதற்கென்று கடைசி வரை தெரியவில்லை. ஒட்டுமொத்த திரைக்கதையாகப் படம் ஈர்க்கவில்லை. எழுத்தில் இன்னும் முதிர்ச்சியையும், மேக்கிங்கில் கூடுதல் கவனத்தையும் செலுத்தியிருந்தால் படம் நெகட்டிவ் கமென்ட்ஸைத் தாண்டி ஹார்ட்டீன் அள்ளியிருக்கும்.

– வெண்பா தமிழ்