இது தமிழ் ⚡ AMP

“உண்மைக் கதைகளைத் திரைப்படமாக்குவது சவாலான விஷயம்” – சுரேஷ் ராஜகுமாரி

By Dinesh R | Mar 14, 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் LK அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் சிறை ஆகும். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்தப் படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 23 அன்று ZEE 5 ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், அதிலும் பெரும் வரவேற்பைப் பெற்று பார்வையாளர்களின் பாராட்டுகளைக் குவித்தது. இந்நிலையில், படம் வெளியாகி 75 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் வரவேற்பைக் குவித்து வருகிறது. பொதுமக்கள், சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்ற இந்த படம், கடந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் கொண்டாடப்பட்டது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற “சிறை” திரைப்பட வெற்றிவிழாவில், படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நினைவாக வெற்றிக் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வினில் பேசிய இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, “ஒரு காட்சியை எடுக்கும் போது அது எப்படி வரும் என்று தெரியாமல் இருந்தாலும், நம்பிக்கையுடன் அதை எடுப்போம். அந்த நம்பிக்கையில்தான் இந்தப் படம் முழுவதும் உருவானது. இப்படிப்பட்ட உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளை திரைப்படமாக உருவாக்குவது மிகவும் சவாலான விஷயம். ஏனெனில் ஒரு உண்மைச் சம்பவத்தை அப்படியே திரையில் காட்டினால் அது சினிமாவாக வேலை செய்யாது. அதே நேரத்தில் சினிமாவாக மாற்றும் போது அதன் உண்மைத் தன்மையும் காப்பாற்ற வேண்டும். அந்த சமநிலையை வைத்துப் படம் உருவாக்குவது மிகவும் கடினமான ஒரு செயல்முறை.

இப்போது பலர் மலையாள சினிமாவை எடுத்துக்காட்டாகக் கூறுகிறார்கள். ஆனால் அந்த மாதிரியான படங்களை நம் திரையரங்குகளில் ஓட வைப்பது சுலபமல்ல. பல நேரங்களில் அந்த வகை படங்களை நாம் ஓடிடியில் பார்த்துப் பாராட்டுகிறோம். ஆனால் தமிழ் ரசிகர்கள் திரையரங்கில் ரசிக்கும் வகையில் ஒரு படமாக உருவாக்குவது மிகவும் முக்கியமானது.

அந்த முயற்சியில் எங்கள் குழுவில் உள்ள அனைவரும் பெரிய ஆதரவாக இருந்தார்கள். ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் இந்தப் படத்தைச் சிறப்பாக உருவாக்க உழைத்தார்கள்.

தயாரிப்பாளர் லலித் சார் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். இந்தக் கதையை நம்பி, அதில் தனது மகனையும் அறிமுகப்படுத்தும் அளவுக்கு அவர் வைத்திருந்த நம்பிக்கை மிகவும் பெரிய விஷயம். ஒரு புதிய இயக்குநரையும், ஒரு புதிய முயற்சியையும் நம்பி இந்தப் படத்தைத் தயாரித்தது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது.

இந்தப் படத்தின் வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்படிப் பட்ட கதைகளை நம்பி எடுத்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணமாக இருக்கிறது. மேலும் இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை செய்துள்ளனர். அவர்களின் உழைப்பால் தான் இந்தப் படம் இந்த அளவிற்கு வந்துள்ளது. இந்தப் படம் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படவில்லை. ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவிய பாராட்டுக்களால் தான் மக்கள் அதிகமாக வந்து பார்த்தார்கள். அந்த வார்த்தைகள் மூலம் பரவிய வரவேற்பு இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது” என்றார்.