இது தமிழ் ⚡ AMP

ஜாக் – ராணுவ நடவடிக்கைகளை மையப்படுத்திய படம்

By Dinesh R | Sep 11, 2018

முன்பெல்லாம் விலங்குகளை வைத்து மிகக்குறைந்த பொருட்செலவில் இயக்குநர் ராமாநாராயணன் போன்றவர்கள் எடுத்த படங்கள் வசூலை வாரிக்குவித்தன. சமீப காலங்களில் குறைந்திருந்த இந்தப் போக்கு, தற்போது மீண்டும் வந்திருக்கிறது. விலங்குகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்கள் மிகப்பெரிய வசூலை ஈட்டித் தருகின்றன. இதனைத் தொடர்ந்து பல இயக்குநர்கள் இந்த ஜானரில் படங்கள் இயக்கத் துவங்கியிருக்கிறார்கள்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

திருடன் போலீஸ், ஒரு நாள் கூத்து, புரூஸ்லீ, சர்வர் சுந்தரம், ஆகிய படங்களைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் ‘வான்’ படத்தைத் தயாரிக்கும் கெனன்யா ஃபிலிம்ஸ் அடுத்து ஒரு நாயை மையமாக வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கிறது.

புரூஸ்லீ படத்தை இயக்கிய பிரஷாந்த் பாண்டிராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். ‘ஜாக்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார்.

இது குறித்து தயாரிப்பாளர் செல்வக்குமார் கூறும்போது, “இது ராணுவ நடவடிக்கைகளை மையப்படுத்திய படம். எங்கள் நிறுவனத்தில் அனைத்து விதமான படங்களையும் எடுப்பது என்பதில் நான் உறுதியாக இருந்திருக்கிறேன். இதுவரை விலங்குகளை வைத்து எந்தப் படத்தையும் நாங்கள் எடுத்ததில்லை. இந்தக் கதையை பிரஷாந்த் என்னிடம் சொன்னபோது, இந்தப் படம் தேசிய அளவில் கவனம் பெறும் என உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தேன். அசோக் செல்வன் எந்த வகை படமாக இருந்தாலும் எளிதாகப் பொருந்தி விடுகிறார். ராணுவ வீரருக்குண்டான உடல் அமைப்பும் அவருக்கு இருக்கிறது. கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளுக்குப் பொறுப்பேற்க, நடன இயக்குநராகப் பாபா பாஸ்கர் என படத்தின் மதிப்பைக் கூட்டும் வகையில் மிகத் திறமையான கலைஞர்களைப் படத்துக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறோம். கோடை விடுமுறைக்குப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

படத்தின் இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ் கூறும்போது, “ஜாக் என்ற தலைப்பு, சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வாய்ப்புள்ளது. இந்தக் கதையைச் சில காலம் முன்பே எழுதிவிட்டேன். இது ராணுவத்துக்குப் பயிற்சி கொடுக்கப்பட்ட ஒரு நாயைப் பற்றிய கதை என்பதால் கதைக்கு நிறைய ஆராய்ச்சி தேவைப்பட்டது. வெறும் நாயை வைத்து எடுக்கப்படும் பொழுதுபோக்கு படம் இல்லை, படத்தின் ஆதாரமே எமோஷன் தான். போர்க்காட்சிகளில் நாயகனுக்கும், நாய்க்கும் இடையே உள்ள பிணைப்பு தான் படத்தின் ஒரு முக்கிய ஹைலைட். அசோக் செல்வன் இந்தப் படத்துக்கு பிறகு நல்ல உயரத்துக்குப் போவார். நாயகி தேர்வு நடந்து வருகிறது. நல்ல தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தின் பெரிய பலம். அக்டோபர் மாதம் படப்பிடிப்புத் துவங்க இருக்கிறது” என்றார்.