இது தமிழ் ⚡ AMP

இரண்டு நாட்களில் உருவான ‘ஜீவி 2’ கதை

By Dinesh R | Apr 23, 2022

வெங்கட்பிரபு, சிம்பு கூட்டணியில் மாநாடு என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன், தற்போது ராம் இயக்கத்தில் நிவின்பாலி, அஞ்சலி நடிப்பில் உருவாகும் படத்தைத் தயாரித்து வருகின்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அதே சமயம் இன்னொரு பக்கம் மாநாடு படத்திற்குப் பின் ஜீவி-2 என்கிற படத்தையும் சத்தமில்லாமல் தயாரித்து முடித்து விட்டது.

கடந்த 2019இல் நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இயக்குநர் VJ கோபிநாத் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது.

“ஜீவி படத்தின் கதையே தொடர்பியல் விதியை மையப்படுத்தித் தான் உருவாக்கப்பட்டிருந்தது. எங்கோ ஏதோ ஒரு இடத்தில் ஒருத்தர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் திரும்பவும் இன்னொரு இடத்தில் வேறு ஒருவருக்கு நடப்பதற்கு நிச்சயம் ஒரு தொடர்பு இருக்கும். அதைத் தெரிந்து கொண்ட நாயகன் அந்த நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்வார்.

இந்தத் தொடர்பியல் விதி அத்துடன் முடிந்து விட்டதா, இல்லை மீண்டும் தொடருமா என ஹீரோவின் நண்பன் கேட்கும் கேள்வியில் தான் இந்த இரண்டாம் பாகத்தின் கதை தொடங்குகிறது.

மீண்டும் இவர்கள் வாழ்வில் தொடர்பியல் விதி விளையாடியதா, அதன்மூலம் என்னென்ன பிரச்சனைகள் உருவாகின, அதை நாயகன் எப்படி எதெகொள்கிறார் என ஜீவி 2 படத்தின் கதை பயணிக்கிறது” என்கிறார் இயக்குநர் VJ கோபிநாத்.

ஜீவி முதல் பாகத்தின் கதையையும் வசனத்தையும் கதாசிரியர் பாபு தமிழ் எழுதியிருந்தார். ஆனால், இந்த இரண்டாம் பாகத்திற்கான கதையை இயக்குநர் VJ கோபிநாத்தே எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகக் காரணமான சுவராஸ்யமான சூழல் குறித்து கோபிநாத், “ஜீவி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலுக்காக ஒரு கதை எழுதி அவரிடம் ஒப்புதலும் வாங்கி இருந்தேன். ஆனால் கடந்த இரண்டு வருட காலத்தில் கொரோனா தாக்கம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது.

ஏற்கெனவே தான் நடித்து வந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் தாமதமாக, ‘அதற்குள் சின்னதாக ஒரு படம் பண்ணிவிட்டு வந்து விடுங்களேன்’ எனக் கேட்டுக்கொண்டார் விஷ்ணு விஷால்.

அப்போது தான் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் கார்த்திகேயன் என்னிடம், ‘நீங்கள் ஜீவி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை உருவாக்குங்கள்’ எனக் கூறினார்.

ஆனால் இரண்டாம் பாகத்திற்கான எந்த ஒரு யோசனையும் இல்லாமல் தான் முதல் பாகத்தை உருவாக்கி இருந்தோம். கதாசிரியர் பாபு தமிழிடம் இந்த இரண்டாம் பாக ஐடியா பற்றி சொன்னபோது, ‘நிச்சயமாக இரண்டாம் பாகத்திற்கான வாய்ப்பே இல்லை. அதிலும் உடனடியாக கதை உருவாக்குவதற்கான சாத்தியமும் இல்லை’ எனக் கூறிவிட்டார். ஆனால் தயாரிப்பாளர் கார்த்திகேயன் விடாப்பிடியாக என்னை உற்சாகப்படுத்தவே, அவரிடம் 15 நாட்கள் அவகாசம் கேட்டேன். ஆனால் இரண்டே நாட்களில் இந்தப் படத்தின் கதையை எழுதி முடித்தேன்” என்றார் கோபிநாத்.

அந்த சமயத்தில் இவரை உற்சாகப்படுத்திய தயாரிப்பாளர் கார்த்திகேயன் சமீபத்தில் வெளியான கிளாப் படத்தைத் தயாரிப்பதில் பிஸியாக இருந்தார்,

மேலும் இயக்குநர் VJ கோபிநாத் ஜீவி-2 படத்திற்கான கதையைச் சுவாரசியமாக உருவாக்கியுள்ளார் என செய்திகள் பரவ ஆரம்பிக்கவே, எதிர்பாராதவிதமாக “மாநாடு” படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் கைகளுக்கு இந்தப் படம் சென்றது.

முதல் பாகத்தில் நடித்த வெற்றி, கருணாகரன், அஸ்வினி சந்திரசேகர், ரமா, ரோகிணி, மைம் கோபி, ‘அருவி’ திருநாவுக்கரசு என அனைவருமே இந்தப் படத்திலும் தொடர்கிறார்கள்.

அதே போல ஒளிப்பதிவாளர் பிரவீண் குமார், இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி, படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் என அதே வெற்றி தொழில்நுட்பக் கூட்டணி தான் இந்தப் படத்திலும் இணைந்து பணியாற்றுகின்றனர்.

படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.

நடிகர்கள்:

>> வெற்றி
>> கருணாகரன்
>> அஸ்வினி சந்திரசேகர்
>> ரமா, ரோகினி
>> மைம் கோபி
>> ‘அருவி’ திருநாவுக்கரசு

தொழில்நுட்பக் குழு:

>> தயாரிப்பு – வி ஹவுஸ் புரொடக்சன்
>> தயாரிப்பாளர் – சுரேஷ் காமாட்சி
>> இணை தயாரிப்பு -வெற்றிகுமரன், நாகநாதன் சேதுபதி
>> எழுத்து இயக்கம் – V J.கோபிநாத்
>> இசை – கே.எஸ்.சுந்தரமூர்த்தி
>> ஒளிப்பதிவு – பிரவீண் குமார்
>> படத்தொகுப்பு – பிரவீண் கே.எல்
>> சண்டைப் பயிற்சி – சுதேஷ்
>> மக்கள் தொடர்பு – A.ஜான்