இது தமிழ் ⚡ AMP

“கட்டில் – நினைவுகளின் வலியைப் பதிந்துள்ள திரைப்படம்” – கவிப்பேரரசு வைரமுத்து

By Dinesh R | Nov 07, 2023

Maple Leafs Productions தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்” ஆகும். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத் திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவினில் தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இவ்விழாவினில் பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, “தம்பி கணேஷ்பாபு என் பாசத்துக்குரியவர், நேசத்துக்குரியவர். ஒரு நேசத்தை எப்படி எடை போடுவது? அதை காலம் காட்டிக் கொடுத்து விடும். நேரம், தோல்வி, வெற்றி எல்லாம் தாண்டி என்னோடு கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாகப் பயணித்து வருகிறார். அவர் என் அன்புக்குரியவர். கட்டில் மாதிரியான சிறு படங்கள் ஓடினால் தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது. இது மாதிரி படங்களில் தான் புதிய கலைஞர்கள் நமக்குக் கிடைப்பார்கள். பெரிய படங்கள் திட்டமிட்டுப் பார்க்க வைக்கப்படுகிறது, துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் கணேஷ்பாபு புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறார். சிறு படங்கள் தான் நம்மைச் சிறகடித்துப் பறக்க வைக்கும், நம் சிந்தனையை வளர்க்கும். பழைய படங்களின் போஸ்டர் பார்த்தால் அதில் எல்லாருமே, பெண்களும் முக்கியமாக இடம் பெற்றிருப்பார்கள். ஆனால், இப்போது சினிமாக்களில் பெண்களின் படங்களைப் பார்க்க முடிகிறதா? பெண்ணுக்குச் சரிசமமான இடம் தந்த சினிமா தான் தமிழ் சினிமாவின் பொற்காலம், அந்தப் பொற்காலத்தை தன் கட்டில் மூலம் மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார் கணேஷ்பாபு. இது மாதிரியான சின்ன படங்கள் ஜெயிப்பதுதான் மக்களுக்கு மகிழ்வைத் தரும். என் போல் சமூகச் செயற்பாட்டாளர்கள் அதைத் தான் ஆசைப்படுகிறோம். கண்ணதாசன், வாலி இருந்தபோது அவர்களோடு போட்டி போட்டு அவர்களோடு நான் நின்றேன். அவர்களை ஜெயிக்க முடியாது எனத் தெரியும். ஆனால் அவர்களோடு நானும் இருக்கிறேன் என நின்றேன். அது மட்டும் போதுமா? இப்போது நான் மதன்கார்கியோடு போட்டி போடுகிறேன். அவரை ஆஸ்திரேலியாவிற்குப் படிக்க அனுப்பினேன், விஞ்ஞானம் படித்துவிட்டு வந்து பேராசிரியர் ஆனார். ஆனால் எனக்குப் போட்டியாக வருவார் என நினைக்கவில்லை. இந்தப் படத்தில் அருமையான வரிகள் தந்துள்ளார். அவருக்கு இந்தப் படத்திற்குத் தேசியவிருது கிடைக்க வாழ்த்துக்கள். கணேஷ்பாபு நினைவுகளின் வலியை இப்படம் மூலம் பதிவு செய்துள்ளார் அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

கே. எஸ். ரவிக்குமார், “வைரமுத்து சாருக்குப் பிறகு யார் பேசினாலும் எடுபடாது. வைரமுத்து என் 25 படங்களுக்குப் பாட்டு எழுதியிருப்பார். நீண்ட காலத்திற்குப் பிறகு அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இன்று கிடைத்துள்ளது. மகிழ்ச்சி. தேவா என் படங்களுக்கு இசையமைக்கும்போது கீபோர்டில் எப்போதும் ஶ்ரீகாந்த் தேவா தான் இருப்பார். இப்போது அவர் புகழ் பெறுவது மகிழ்ச்சி. இயக்குநர் நடிகர் EV.கணேஷ்பாபு என் படத்தில் நடித்திருக்கிறார். நடிகராக நீண்ட நாட்கள் அனுபவம் மிக்க இவர், இப்படி ஒரு படம் தயாரித்து, இயக்குநராகியிருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

தொழில்நுட்பக் குழு:

>> தயாரிப்பு – Maple Leafs Productions.
>> கதை, திரைக்கதை, வசனம், படத்தொகுப்பு – B.லெனின்
>> தயாரிப்பு, இயக்கம் – இ.வி.கணேஷ்பாபு
>> பாடல் – கவிப்பேரரசு வைரமுத்து, மதன்கார்க்கி
>> ஒளிப்பதிவு – வைட் ஆங்கிள் ரவிசங்கர்
>> இசை – ஶ்ரீகாந்த் தேவா
>> மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா (AIM)