இது தமிழ் ⚡ AMP

Kennedy | காயமடைந்த ஒரு மனிதனின் உலகம்

By Dinesh R | Feb 10, 2026

இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட த்ரில்லர் படமான ‘கென்னடி’ படத்தின் அதிரடியான ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது ஜீ5. சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று Zee5-இல் இந்தியப் பார்வையாளர்களுக்காகப் பிரத்தியேகமாக பிரீமியர் ஆகிறது.

‘கென்னடி’ மும்பையை மையமாகக் கொண்டு, noir பாணியில் உருவான ஒரு அதிரடியான த்ரில்லர் கதை. முன்னாள் காவலராக இருந்து ஒப்பந்தக் கொலையாளியாக மாறிய கென்னடி உதய் ஷெட்டி (Rahul Bhat) என்பவரின் இரட்டை வாழ்க்கையைப் படம் பின்தொடர்கிறது. பகலில் டாக்சி டிரைவராகவும், மறைவில் ஊழல் போலீஸ் கமிஷனர் ரஷீத் கானுக்காகக் கொலை ஒப்பந்தங்களை நிறைவேற்றுபவராகவும் வாழும் கென்னடி, தனது மகன் இழப்பினால் உண்டான வலி மற்றும் அவருடைய சிதைந்து போன குடும்பத்தின் நினைவுகளால் துரத்தப்படுகிறார். கடந்த காலத்திலிருந்து தப்பிக்க முடியாத நகரத்தில், தன்னையே தேடும் அவரது பயணம் தான் இப்படத்தின் மையம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

படத்தில் ராகுல் பட் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். சன்னி லியோனே, மோஹித் தகல்கர், மேகா பர்மன், அமீர் தல்வி, அபிலாஷ் தாப்லியால், கரிஷ்மா மோடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் கென்னடியின் இருண்ட, பிளவுபட்ட உலகத்திற்குப் பல அடுக்குகளைச் சேர்க்கிறார்கள்.

படம் குறித்து அனுராக் காஷ்யப், “‘கென்னடி’ நான் உருவாக்கிய மிகவும் தனித்துவமான படங்களில் ஒன்று. இந்தப் படத்தின் பயணம் மிக நீண்டது. ஆனால் திரைப்பட விழாக்களில் கிடைத்த ஒவ்வொரு கருத்துக்களும், நான் இந்தப் படத்தை உருவாக்கியதற்கான அர்த்தத்தைத் தந்தது. ட்ரெய்லர், வெளியில் வன்முறையுடன் இருந்தாலும், படம், உள்ளே ஆழமாக காயமடைந்த ஒரு மனிதனின் உலகத்துக்குள் உங்களை அழைத்துச் செல்லும். எந்த சமரசமும் இன்றி, படத்தை அதன் மூல வடிவிலேயே Z5 பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி” என்றார்.

நடிகர் ராகுல் பட், “கென்னடி பாத்திரத்தில் நடித்தது என்னையே மாற்றியது. கென்னடி தனிமையானவன், கோபமிக்கவன், பலவீனமானவன், எப்போதும் கடந்த காலத்திலிருந்து ஓடிக்கொண்டிருப்பவன். அவனின் மௌனத்திலும், கோபத்திலும் வாழ்வது மனதளவில் சோர்வூட்டினாலும், அந்தக் கதாப்பாத்திரம் எனக்கு மிகுந்த திருப்தியளித்தது. திரை விழா பார்வையாளர்கள் படத்தைக் கொண்டாடியது பெரும் நம்பிக்கையளித்தது. இப்போது இந்தியப் பார்வையாளர்கள் கென்னடியின் பயணத்தையும், வலியையும், அனுபவிப்பதைக் காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்றார்.

சன்னி லியோன், “‘கென்னடி’ படம் நடிகையாக என்னை முற்றிலும் வேறொரு உணர்ச்சி வெளிக்குள் தள்ளியது. சார்லி, மர்மமும் நுட்பமும் வலிமையும் ஒருசேர கொண்டவள். அவளின் பயணத்தை ஆராய்வது சவாலானதும், நிறைவைத் தருவதுமான அனுபவம். அனுராக் காஷ்யப்புடன் பணியாற்றியது, உரையாடலை விட மௌனத்தை கொண்டாடக் கற்றுக்கொடுத்தது. இதுவரை அனுபவிக்காத விதங்களில் இந்தப் படம் எனக்குப் பெரிய சவால்களைத் தந்தது. அதற்காக அனுராக் காஷ்யப்புக்கு நன்றி. பார்வையாளர்கள் இந்த இருண்ட, அழகான உலகத்தை அனுபவிப்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.