இது தமிழ் ⚡ AMP

கொலைச்சேவல் விமர்சனம் | Kolai Seval review

By Dinesh R | Mar 14, 2026

கர்ப்பிணியாக இருக்கும் அனுசுயாவைக் காளி தன் குலதெய்வமான நிறை சூலியை வழிபட அழைத்துச் செல்கிறான். அப்பயணம் கொட்டுக்காளியை நினைவுறுத்துவதாக உள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

படம் தொடங்கியதுமே, ஓர் அமானுஷயத்திற்குத் தயார்ப்படுத்துகிறது சாந்தனின் பின்னணி இசை. P.G.முத்தையாவின் ஒளிப்பதிவு படத்தின் பெரும்பலம். குறிப்பாக இசையுடன் இணைந்து ட்ரோன்ஸ் ஷாட் ஏதோ ஒரு சம்பவத்திற்குப் பார்வையாளர்களைத் தயார் செய்து கொண்டே உள்ளது. கார்த்திக் தாமோதரனின் ஒலி வடிவமைப்பு, மலைக்காட்டில், ஓடை சலசலப்பில் இருக்கும் உணர்வைத் துல்லியமாக ஏற்படுத்த உதவியுள்ளது. இசையும் ஒலியும் ஏற்படுத்தும் ஓர் அழுத்தத்தில் இருந்து நாயகனின் நண்பன் குமாராக நடித்துள்ள பால சரவணனே காப்பாற்றுகிறார். இதற்கே, லப்பர் பந்து போல் தனித்துவமான பாத்திரப்படைப்பாக இல்லாவிட்டாலும், ‘என்னையே இந்தக் குடும்பம் வேலை வாங்குது’ என ஒப்பேத்தும் வசனத்தைக் கொண்டு மட்டுமே ரசிக்க வைக்கிறார்.

படத்தைக் கொஞ்சமேனும் ரம்மியமாக்குவது அனுசுயாவாக நடித்துள்ள தீபா பாலுவே! ஜியோ ஹாட்ஸ்டரின் ‘ஹார்ட் பீட்’டில் மருத்துவர் ரீனாவாக மனதைக் கொள்ளை கொண்ட தீபா பாலு, இப்படத்திலும் அதையே செய்கிறார். ஃபிளாஷ-பேக் காதல் காட்சிகள் மிகவும் ஃப்ரெஷாக இருக்க தீபா பாலுவே காரணம். அழுகை, காதல், இனம் புரியா கலக்கம், பயம் என எந்த உணர்ச்சியாக இருந்தாலும் மிக அற்புதமாக வெளிப்படுத்துகிறார். கலையரசன், அவருக்கென்றே ஒதுக்கப்பட்ட காளி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் கோர முடிவை, குறிப்பாக அது காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதத்தை ஜீரணிக்க ஒரு பெரும் மன திராணி தேவைப்படுகிறது. சாதி அவ்வளவு லேசில் அழியாது என்பதை நேரடியாகவும், மிக ராவாகவும் காட்டியுள்ளார் V.R.துதிவாணன்.