இது தமிழ் ⚡ AMP

கிருஷ்ணர் ஆன்த்தம் – தமிழர் திருநாள் இசைப் பரிசு

By Dinesh R | Jan 14, 2022

தமிழ்த் திரையிசை ரசிகர்களிடையே ‘மாயோன்’ படத்தில் இடம்பெற்ற ‘மாயோனே..’ எனத் தொடங்கும் முதல் பாடலுக்குப் பெரும் வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர், இந்தப் படத்தில் இடம்பெறும் ‘சிங்கார மதன மோகனா..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலை வெளியிட்டிருக்கிறார்கள்.

டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதித் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மாயோன்’. இதில் சிபி சத்யராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான இப்படத்தின் சிங்கிள் ட்ராக் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது இந்தப் படத்தில் இசைஞானி இளையராஜா எழுதி, இசையமைத்த ‘சிங்கார மதன மோகனா..’ எனத் தொடங்கும் பாடலைப் பின்னணி பாடகி ஸ்ரீநிதி ஸ்ரீ பிரகாஷ் பாடியிருக்கிறார்.

மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை, திருவெம்பாவை பாசூரங்களைப் பாடி மக்கள் இறைவனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து தை திருநாளாம் பொங்கல் திருநாளைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு ஏற்றவகையில் அனைவரின் இல்லத்திலும் ஒலிக்கக் கூடிய பாடலாக ‘சிங்கார மதன மோகனா..’ பாடல் உருவாகியிருக்கிறது.

நாம சங்கீர்த்தனம் பாணியில் தயாராகியிருக்கும் இந்த கிருஷ்ண பகவானைப் பற்றிய பக்தி பாடலைக் கேட்கும் பொழுதே இணைந்து பாடவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகிறது. இந்தப் பாடல் பொங்கல் திருநாளன்று இணையத்தில் வெளியாகிறது.

இளைய தலைமுறையினரிடத்தில் ‘லவ் ஆன்த்தம்’, ‘யூத் ஆன்த்தம்’, ‘ப்ரண்ட்ஸ் ஆன்த்தம்’, ‘பார்ட்டி ஆன்த்தம்’, ‘ராக் ஆன்த்தம்’ போன்ற பல ஆன் த்தம் பாடல்கள் பெற்ற வரவேற்பை, பாடகி ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாசின் ஆன்மிகக் குரலில் வெளியாகியிருக்கும் ‘சிங்கார மதன மோகனா..’ எனத் தொடங்கும் ‘கிருஷ்ணர் ஆன்த்தம்’ பாடலும் பெறும் என திரையிசை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

தமிழ் திரையிசை உலகில் கிருஷ்ணரைப்பற்றிய பாடலாக ‘முகுந்தா..முகுந்தா..’ என்ற தசாவதார பட பாடல் இடம்பிடித்திருந்தது. பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் ‘சிங்கார மதன மோகனா.. ’என்ற பாடல் விரைவில் அனைவரின் மனதிலும், கிருஷ்ண பகவானைப் பற்றிய ஒப்பில்லா துதிப் பாடலாக இடம்பிடித்து புதிய சாதனையைப் படைக்கும்.