இது தமிழ் ⚡ AMP

லட்கி – இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படம்

By Dinesh R | Jul 11, 2022

ஆர்ட்சீ மீடியா ப்ரொடக்‌ஷன் மற்றும் இந்தோ – சைனீஸ் கோ ப்ரொடக்‌ஷன் நிறுவனங்கள் தயாரிப்பில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘லட்கி (Ladki)’. நாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தமிழில் “பொண்ணு” என்ற பெயரில் வெளியாகிறது. மார்ஷியல் ஆர்ட்ஸ் வீராங்கனை பூஜா பலேகர் முதன்மை பாத்திரத்தில், சண்டைக் காட்சிகளில் அசத்தியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ராம் கோபால் வர்மா, “இந்தப் படம் எனக்கு மிகவும் சவாலான மனதிற்குப் பிடித்த படம். கல்லூரி நாட்களில் இருந்தே ப்ரூஸ் லீ, என் இதயத்திற்கு நெருக்கமானவராக இருந்துள்ளார். அவர் படங்களை நான் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறேன். அவரின் படங்கள் போல் இந்தியாவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் வந்ததில்லை. நான் இயக்குநராக வந்த பிறகு மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் எடுக்கலாம் என நினைத்தேன். ஆனால் அது தள்ளிப்போனது. இறுதியாக இந்தப் படம் எடுக்க நினைத்த போது ப்ரூஸ் லீயின் உருவம் என் மனதில் வந்து போனது. அவர் மிக ஒல்லியான உருவம் கொண்டவர், ஆனால் திரையில் அவர் தரும் மேஜிக் அற்புதமானது. அதே நேரம் ஒரு பெண்ணை வைத்து எடுத்தால் என்ன என எனக்குத் தோன்றியது. பலரைத் தேடிக் கடைசியாக பூஜா பலேகர் குறித்து கேள்விபட்டு சந்தித்தேன். அவரின் திறமைகள் பார்த்து வியந்தேன். அவரின் வீடியோவை மார்ஷியல் ஆர்ட்ஸ் பிறப்பிடமான சைனாவின் ஒரு கம்பெனியிடம் காட்டினேன். அவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். பிறகு இந்தப் படத்தை அவர்களுடன் இணைந்து தயாரித்தேன். கோவிட் காரணங்களால் இந்தப் படம் தாமதமாகிவிட்டது.

இந்தப் படத்தை ஒரே நேரத்தில் அனைத்து மொழியிலும் வெளியிட வேண்டும் என திட்டமிட்டோம். ஹைதராபாத்தில் ப்ரூஸ் லீயின் ‘என்டர் தி டிராகன்’ திரைப்படம் பார்க்க என்னிடம் பணம் இல்லை. ஆனால் இப்போது என்னுடைய மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் அதே தியேட்டரில் வெளியாகவுள்ளது மகிழ்ச்சி. என் கனவு இப்போது நனவாகியிருப்பது சந்தோஷம்” என்றார்.

நடிகை பூஜா பலேகர், “நான் இந்தப் படத்திற்காக இங்கு வந்ததில் சந்தோசமடைகிறேன். போன முறை நான் சென்னை வந்த போது தற்காப்பு கலை வீரராக வந்தேன். இன்று நடிகையாக இங்கு வந்துள்ளேன். ராம் கோபால் வர்மா சார் உடைய படத்தில் நான் நடித்தது, எனக்குக் கனவு போல் உள்ளது. நான் ராம் கோபால் வர்மா சாரின் ரசிகை. இன்று அவரது இயக்கத்தில் ஒரு தற்காப்புக் கலை படத்தில் நடிப்பதில் பெருமை அடைகிறேன். இந்தப் படம் சீனாவில் 40,000 திரைகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக நான் அழைக்கப்பட்ட போது, எனது சண்டை முறைகள் அவருக்குப் பிடித்திருந்தது. பின்னர் சில பயிற்சிகளைச் செய்தேன். அதன் பிறகு படப்பிடிப்பு துவங்கியது. எனக்கு நடிப்பில் முன் அனுபவம் எதுவும் இல்லை. இயக்குநர் ராம் கோபால் வர்மா சார் தான், எனக்கு எல்லா உணர்வுகளையும் வெளியே கொண்டு வர உதவினார்.

நான் ப்ரூஸ் லீ உடைய ரசிகை. படத்திலும் அப்படியொரு கதாபத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி. இந்தப் படம் கண்டிப்பாகப் பார்வையாளர்களுக்குச் சிறந்த அனுபவமாக இருக்கும்” என்றார்.

குருபரன் இன்டர்நேஷ்னல் நிறுவனம் இத்திரைப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

தொழில்நுட்பக் குழு:

>> இயக்கம் – ராம் கோபால் வர்மா
>> ஒளிப்பதிவு – ரமேஷ்
>> இசை – பால் பிரவீன் குமார்
>> படத்தொகுப்பு – கமல்
>> கலை இயக்கம் – மதுகர் தேவார
>> சண்டைப் பயிற்சி – பூஜா & ராம் கோபால் வர்மா
>> மக்கள் தொடர்பு – தியாகராஜன்
>> தயாரிப்பு – ஆர்ட்சீ மீடியா ப்ரொடக்‌ஷன் & இந்தோ – சைனீஸ் கோ ப்ரொடக்‌ஷன்
>> தமிழக வெளியீடு – குருபரன் இன்டர்நேஷ்னல்