இது தமிழ் ⚡ AMP

லத்தி விமர்சனம்

By Dinesh R | Dec 24, 2022

கான்ஸ்டபிள் முருகானந்தம், ஹாலிவுட் ஹீரோவிற்கு இணையாக ஒரு மிஷனைக் கையிலெடுத்துச் சாதித்து முடிக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சஸ்பெண்டில் இருக்கும் முருகானந்தத்திற்கு, அவரது லத்தி சார்ஜ் திறமைக்காக மீண்டும் வேலை கிடைக்கிறது. ‘இனி லத்தியால் யாரையும் அடிப்பதில்லை’ எனத் தீர்மானிக்கும் முருகானந்தம், அதன் பின் சுமார் நூற்றைம்பது பேரை அடி வெளுக்கிறார். சரியாகச் சொல்வதனால், என்கவுன்ட்டர் செய்வதை ஹீரோயிசமாகக் கருதும் கோலிவுட்டின் சூப்பர் காப்பாகவே மாறிவிடுகிறார்.

நர்ஸ் கவிதாவாக வரும் சுனைனாவின் தேர்ந்த நடிப்பால், படத்தின் முதற்பாதி அழகாகிறது. நன்றாக நடிக்கும் அவரை உபயோகித்துக் கொள்ள தமிழ் சினிமா காட்டிவரும் சுணக்கம் துரதிர்ஷ்டவசமானது. முருகானந்தத்தின் மகன் ராசுவாக மாஸ்டர் லிரிஷ் ராகவ் நன்றாக நடித்துள்ளார்.

ஒரு பெண், வன்புணரப்பட்டுக் கொலை செய்யப்படுகிறாள். அதைச் செய்தது யாரென மர்மமாகவே இருக்க, விஷால் அதைக் கண்டுபிடிக்கிறார். வில்லனான ரமணா, எவ்வித வேறுபாடுமில்லாத, பலமுறை பார்த்துப் பழக்கப்பட்ட கதாபாத்திரமாக உள்ளார். இரண்டாம் பாதியில், நூற்றுக்கணக்கான மனிதர்கள், விஷாலையும், அவரது மகனையும் கொல்ல ரமணாவிற்காக ஒன்று கூடுகின்றனர். விஷாலும் சளைக்காமல், அத்தனை பேரையும் காலி செய்கிறார். மகன் பிடிபட, விஷால் கத்தியால் குத்துபட, கொஞ்ச நேரம், ‘மகனே!’ என அரற்றும் விஷாலின் கைக்கு லத்தி கிடைத்து விடுகிறது. நாயகன் தூரமாக எங்கேயோ இருக்கும்போது, வில்லன்கள் மற்றும் அடியாட்கள் கைகளில் துப்பாக்கிகள் இருக்கின்றன. அருகில் இருக்கும்போதோ, வில்லன்கள் மற்றும் அடியாட்கள் கையில், கத்தியும் இரும்புக்கம்பிகளும் மட்டுமே இருக்கின்றன.

படத்தின் கதையை நான்கே வார்த்தைகளில் சொல்லும்விதமாக, ‘விஷால் இன் லத்தி சார்ஜ்’ என்ற தலைப்பில், படத்திற்குச் சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளனர்.