இது தமிழ் ⚡ AMP

மகுடம் விமர்சனம் | Magudam review

By Dinesh R | Aug 15, 2026

ஊருக்கு நல்லது செய்யும் ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, அவ்வொருவரைத் தவறாக நினைத்து ஒதுங்கி வாழும் அவரது மகன்தான் அடுத்து தலைமையேற்று ஊருக்குக் காவலாக இருக்கவேண்டுமென மகுடம் சூட்டுகின்றனர் மக்கள்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கிருபாவின் குடும்பத்திற்கு ஒரு கார் வாங்க வேண்டும் என்பது ஆசை. பொருளாதாரச் சூழல் உவப்பாக இல்லாத சூழலிலும், ஒரு பயன்படுத்தப்பட்ட BMW காரை வாங்குகிறார் கிருபா. அந்தக் கார், கிருபா மறக்க விரும்பும் அவரது பால்யத்துடன் மீண்டும் தொடர்பை உருவாக்கிப் பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. அவருக்கு ஏற்படும் இழப்பு என்ன, அது அவரை எங்கு இட்டுச் செல்கிறது என்பதே படத்தின் கதை.

இந்தப் படத்திற்கு, 185 நிமிடங்கள் கால அளவு என்பது ரொம்பவே அதிகம். படத்தொகுப்பாளர் N.B.ஸ்ரீகாந்த் மிகக் கறாராகப் படத்தின் நீளத்தைக் கட்டுக்குள் வைத்திருந்திருக்கலாம். கிருபாவின் நண்பராக வரும் அர்ஜெய்க்கு ஒரு பில்டப் காட்சி வருகிறது. ஆனால் அதன் பின் அர்ஜெயைப் படத்தில் பயன்படுத்தவே இல்லை. ஜெயப்பிரகாஷைப் பொருந்தாத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளனர். ஜான் விஜயின் மிகை நடிப்புடன், அவரது பொருத்தமில்லாத ஒப்பனையும் இணைந்து கொண்டு சதி செய்கிறது.  முதற்பாதியில், கதைக்குள் போக எந்த அவசரமும் காட்டாமல், கிருபாவின் குடும்பத்தைப் பற்றிய அறிமுகத்தை மிகச் சாவகாசமாக ஒரு நெடுந்தொடருக்கான இலக்கணத்தோடு நீட்டி முழக்கியுள்ளனர்.

நாயகன் கிருபா, தன் மாமனார் தம்பி ராமையாவின் குதிரை கனைப்பது போன்ற சிரிப்பை செல்பேசியில் ரிங் டோனாகப் பயன்படுத்துகிறார். சுவாரசியமற்ற திரைக்கதை படத்தின் மிகப்பெரும் பின்னடைவு. திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் விஷால். மார்க் ஆண்டனி படப் பாதிப்பு நிறையத் தெரிகிறது. ஆனால், அப்படத்தின் வெற்றிக்கு, விஷாலின் கெட்டப்புகள் அல்ல, திரைக்கதையே மிகப் பெரிய பங்கு வகித்தது. இப்படத்திலும் விஷால் 3 கெட்டப்களில் தோன்றுகிறார். லிங்கா எனும் வயது முதிர்ந்த கெட்டப்பில், கிருபாவை விட இளமையாகத் தெரிகிறார் விஷால். மீன் விற்கும் தாய்மார்களைக் கொண்டு ஒரு களேபரமான க்ளைமேக்ஸை யோசித்துள்ளார் விஷால்.

விஷாலின் மகளாக க்யூட்டான சிறுமி மாயா ப்ரேம் அற்புதமாக நடித்துள்ளார். விஷாலின் மகனாக நடித்துள்ள அஷ்வின் மாதவனும் சிறப்பாக நடித்துள்ளார். முதற்பாதியில் துஷாரா விஜயன் வந்தாலும், மனதில் நின்று படத்தில் சற்றேனும் பார்வையாளர்களை ஆசுவாசப்படுத்துவது அன்னப்பூரணியாக நடித்துள்ள அஞ்சலிதான். பிரதான வில்லன் யாரென்றே சொல்லாமல் கடைசி வரை சஸ்பென்ஸாகக் கொண்டு சென்று ஒரு வில்லனைக் க்ளைமேக்ஸில் கொண்டு வருகின்றனர். அவரை வில்லனாகவே ஏற்க முடியாததால், ஹீரோவின் ஆக்‌ஷனும், தாய்மார்களின் ஆவேசமும் விழலுக்கு இறைத்த நீராகி விடுகிறது. நடிகர் விஷாலுக்கு மகுடம் சூட்ட நினைத்துப் பார்வையாளர்களைப் பலிகடாவாக்கியுள்ளார்  இயக்குநர் விஷால்.