இது தமிழ் ⚡ AMP

மணிகண்டா – ஆன்மிக ஆக்‌ஷன் திரைப்படம்

By Dinesh R | Oct 28, 2026

தந்த்ரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மணிகண்டா’ ஆகும். இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில், முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் ரவிமோகன் வெளியிட்டுள்ளார். ஆன்மிகம், பக்தி மற்றும் ஆக்‌ஷன் அம்சங்கள் நிறைந்த திரைப்படமாக உருவாகியுள்ளது மணிகண்டா.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

முன்னதாக “தத் த்வம் அஸி” என்ற பெயரில் படமாக்கப்பட்ட இப்படத்திற்கு, தற்போது மணிகண்டா எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. போஸ்டரில், நீல நிற ஆடையுடன் கையில் வேல் ஏந்தியபடி கம்பீரமான தோற்றத்தில் வைபவ் இடம்பெற்றுள்ளார். அவருக்குப் பின்னால் பிரம்மாண்டமான ஐயப்பன் சிலை, அதைச் சுற்றிலும் தங்க நிற ஒளியும் நெருப்புச் சுடர்களும் நிறைந்துள்ளன. விண்வெளியை நினைவூட்டும் பின்னணியும், ஆன்மிக உணர்வை வெளிப்படுத்தும் காட்சியமைப்பும் போஸ்டருக்கு பிரம்மாண்டமான தோற்றத்தை அளிக்கின்றன. ‘இறைவன் மற்றும் அவரது மக்களின் பயணம்’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக், இறைநம்பிக்கையையும் பக்தியையும் மையமாகக் கொண்ட கதைக்களத்தை உணர்த்துகிறது.

மாலை அணிந்து விரதமிருந்து, கடினமான பெரிய பாதையில் பயணித்து ஐயப்பனைத் தரிசிக்கும் பக்தர்களின் ஆன்மிகப் பயணத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. பக்தி மற்றும் நம்பிக்கையுடன் ஆக்‌ஷன் காட்சிகளும் உணர்ச்சிகரமான தருணங்களும் இணைந்த திரைப்படமாக ‘மணிகண்டா’ உருவாகியுள்ளது. ஆன்மிகப் பின்னணியில் குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

தந்த்ரா ஃபிலிம்ஸ் சார்பில் ஜே.கே. சரவணா மற்றும் எம். ராஜாராம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றுகிறார். மலையாளத்தில் கவனம் பெற்ற ‘மாளிகப்புரம்’ படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர், ‘மணிகண்டா’ படத்தை இயக்கியுள்ளார்.

வைபவ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன், ஹரீஷ் பேராடி, அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளராக பிரேம்.ஜி அமரனும், ஒளிப்பதிவாளராக யுவன் செல்வா கவனித்துள்ளனர். படத்தொகுப்பை பிரவீன் கே.எல் மேற்கொண்டுள்ளார். கலை இயக்குநராக சூர்யா ராஜீவன் பணியாற்றியுள்ளார். சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா மற்றும் சக்தி சரவணன் வடிவமைத்துள்ளனர். ஆதித்யா தங்கீராலா, நந்தகுமார் தமிழ்செல்வன், ஜே.கே. சரவணா மற்றும் ப்ருத்வி ஆதித்யா ஆகியோர் எழுத்துப் பணிகளில் இணைந்துள்ளனர். ஆன்மிகச் சூழலையும் பிரம்மாண்டமான காட்சிகளையும் திரையில் வெளிப்படுத்தும் வகையில் தொழில்நுட்பக் குழுவினர் பணியாற்றியுள்ளனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஐயப்ப பக்தர்களுக்கு உகந்த கார்த்திகை மாதத்தில், அதாவது 2026ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, ‘மணிகண்டா’ திரைப்படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருகிறது.