இது தமிழ் ⚡ AMP

மன்சூர் அலி கானின் மாறுபட்ட வேடத்தில்

By Dinesh R | Jan 10, 2018

“கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா” எனும் படத்தில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தராஜன், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் 6 இயக்குநர்கள், 4500 துணை நடிகர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் மூலம் பின்னணி பாடகர் மனோவின் மகன் ரத்திஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். மேலும், ‘மஸ்காரா’ அஸ்மிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இதில் கே.பாக்யராஜ் போலீஸ் அதிகாரியாகவும், மன்சூர் அலிகான் காட்டுவாசித் தலைவராகவும், ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் அரசியல்வாதியாகவும் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்திய இப்படத்தில் திரில்லர், ஆக்ஷன், திகில் கலந்து உருவாக்கி இருக்கிறார்கள். பெரும்பாலான படப்பிடிப்பு மலைப்பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

தற்போது இருக்கிற அரசியல் சூழலை மறைமுகமாக கிண்டல் செய்து பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், “இந்தப் படத்தின் இயக்குநர் ரசாக் நிறைய கஷ்டப்பட்டார். ஏனென்றால் 6 இயக்குநர்களை ஒன்றாக வைத்து வேலை வாங்குவது சாதாரண காரியமில்லை. எங்கள் எல்லோரிடமும் அழகாக வேலை வாங்கி, மிரட்டலான ஒரு காமெடி படத்தை எடுத்திருக்கிறார். இப்போதெல்லாம் படம் எடுப்பதை விட, கட்சி ஆரம்பிப்பதே சுலபமென்றாகிவிட்டது. நான் கூட ஒரு கட்சி தொடங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். படம் எடுப்பதற்கும், கட்சி தொடங்குவதற்கும் பட்ஜெட் தான் இங்கு பிரச்சனையாக இருக்கிறது. அதனால் தான் என் யோசனையை தள்ளி வைத்து விட்டு நடிப்பில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்” என்று பேசினார்.

தனது அனுபவத்தைப் இயக்குநர் கே.பாக்யராஜ் பகிர்ந்து கொண்ட போது, “முன்னமே வைக்கப்பட்ட இந்த படத்தின் தலைப்பு, இப்போது நடந்துகொண்டிருக்கிற சம்பவங்களோடு அப்படியே பொருந்தும் வகையில் இருக்கிறது. காரணம், இப்போது சினிமாவில் இருப்பவர்கள் எல்லாம் அரசியலை நோக்கிக் கிளம்பிக் கொண்டிருக்கிற காலம் இது. எனவே இந்த ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ என்கிற தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

எனக்கு இந்தப் படத்தில் ஆச்சரியம் என்னவென்றால், எப்படி இவ்வளவு நடிகர்களிடம் ரசாக் வேலை வாங்கினார் என்பது தான். அதுவே மிகப்பெரிய அட்வென்ச்சர் அனுபவம் தான். அதை விட அட்வெஞ்சர் படத்திற்கு ப்ரொட்யூஸ் செய்வது. படப்பிடிப்புத் தளங்களில் மிகச் சாதாரணமாகத் தான் இருந்தது. அதையே திரையில் பார்க்கும் போது மிகப் பிரம்மாண்டமாய் இருக்கிறது. இப்போதெல்லாம் படம் எடுப்பதை விட, தியேட்டருக்குக் கொண்டு வருவது தான் பெரிய வேலையாக இருக்கிறது. விரைவில் இந்தப் படம் திரைக்கு வந்து நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்”என்றார்.

படக்குழு:

>> ஒளிப்பதிவு – ஸ்ரீதர்
>> இசை – ஸ்ரீகாந்த்
>> படத்தொகுப்பு – ராஜ்குமார்
>> பாடல்கள் – யுக பாரதி, ரசாக், திலகா
>> பாடகர் – கானா பாலா, ஹரிஷ் ராகவேந்திரா, பாலக்காடு ஸ்ரீராம், மன்சூர் அலிகான், முகேஷ், டாக்டர் நாராயணன்
>> தயாரிப்பு – ஹெவன் எண்டர்டெய்ன்மெண்ட்
>> எழுத்து & இயக்கம் – ரசாக்