இது தமிழ் ⚡ AMP

மூக்குத்தி அம்மன் 2 – மஹாசக்தி விமர்சனம்

By Dinesh R | Nov 07, 2026

அருமையான கலாச்சார ஃப்யூஷனை எக்ஸ்ப்ளோர் செய்துள்ளார் சுந்தர்.சி. இல்லுமினாட்டிகள் வழிபட்ட சாத்தானுக்கும் (Baal), தமிழகக் காவல் தெய்வங்களுக்கும் சண்டை நடந்தால் எப்படியிருக்கும் என்பதுதான் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

போலீஸ் கான்ஸ்டபிளான சக்திக்கு, மைலாஞ்சிக்குச் செல்லும்படி துர்கனவுகள் வந்தவண்ணம் உள்ளன. மாற்றல் வாங்கிக் கொண்டு மைலாஞ்சி செல்லும் சக்தி, கருவறையில் அம்மன் இல்லாமல் புதைந்து கிடைக்கும் கோயில் ஒன்றை எதிர்பாராதவிதமாகக் கண்டுபிடிக்கிறார். அதே சமயம், இரண்டாயிரம் வருடங்கள் ஜீவ சமாதியில் இருந்த சாத்தான் வழிபாட்டாளரான சூனியக்காரி பைரவி கண் விழிக்கிறார். கோயில் கருவறையில் அம்மன் சிலை ஏன் இல்லை, கான்ஸ்டபிள் சக்தி யார், 2000 வருடமாக எதற்காக பைரவி காத்திருந்தார் முதலிய கேள்விகளுக்குப் பதில் படத்தின் கதை.

வில்லியாக ரெஜினா கசாண்ட்ராவும், வில்லனாக துனியா விஜயும் நடித்துள்ளனர். காதலுக்காக எந்த எல்லைக்கும் போகும் ஒரு காதல் ஜோடி, தெய்வத்தையே எதிர்க்கத் துணிகின்றனர். இவர்கள் இருவருக்கிடையே மலரும் காதல்தான் படத்தின் அச்சாணி. ஆனால், அந்த கெமிஸ்ட்ரி முழுமையாகத் திரையேறவில்லை.

Spoilers ahead in this para. மஹாசக்தி எனத் தலைப்பு வைத்ததற்காகவாவது, நயன்தாராவைச் சக்தி மிகுந்தவராகக் காட்டியிருக்கலாம். பெயரில் மட்டுமே சக்தியுள்ளது. இரண்டு சிறுவர்களைத் தீயிலிட்டு நரபலி அளிக்கும் பொழுதும், நாயகிக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் அம்மன் விழிக்கவில்லை. நாயகியையே கொல்ல வருகின்றனர். அம்மன் அப்பொழுதும் விழிக்கவில்லை. நயன்தாராவின் அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி சொல்வதால், “அக்கா அம்மன்”கள் இருவரை உதவிக்கு அழைக்கிறார். பொதுவாக க்ளைமேக்ஸில், அம்மனின் அருள்/ பாதுகாப்பு வேண்டி, பாட்டு பாடுவார் குஷ்பு. இப்படத்தில், அம்மன்களாகவே வரும் குஷ்புவும் சினேகாவும், மூக்குத்தி அம்மனை எப்படியாவது விழிக்க வைக்கப் பாட்டுப் பாடுகின்றனர். சக அம்மன்களே வந்து பாடியும், மஹாசக்தியான மூக்குத்தி அம்மன் ஆகப்பட்டவர், எம்.ஜி.ஆர். போல் சாத்தானிடம் முதலில் இரண்டு அடி வாங்கிய பின்னே ஃபார்ம்க்கு வருகிறார். அடுத்த ஷாட்டில் படம் சுபமாக முடிந்து விடுகிறது.

இந்தப் பத்தியும் spoiler-க்காக ஒதுக்கப்படுகிறது. இரண்டாயிரம் வருடத்திற்கு முன் வரும் ஃப்ளாஷ-பேக் மூக்குத்தி அம்மன் இன்னும் வொர்ஸ்ட். ஒரு பக்கம், சாத்தானுக்கு நரபலி கொடுத்து ரெஜினா சக்தியைப் பெறுகிறார். இவர் படத்தின் வில்லி. நிற்க. வல்லப நாட்டின் மகாராணியான அபிநயா, தன் கழுத்தை அறுத்துக் கொண்டு குழந்தையைக் காக்க வேண்டிக் கொள்கிறார். சாத்தானைப் போலவே அம்மனும் பலி வாங்கிக் கொண்டே வினை புரிகிறார். ஷ்ஷ்ப்பாஆஆ.. சரி அபிநயா பக்திப் பித்தில் உயிரை மாய்த்துக் கொண்டார், அதற்கு அம்மன் என்ன பண்ணுவார்ன்னு கேள்வி எழலாம். அபிநயாவின் குழந்தையைக் காப்பாற்ற ஒரு குயவர் கிராமமே போராடும். துனியா விஜயின் ஆட்களால் அக்கிராமத்தில் அனைவரும் சாவார்கள். அதில் எல்லாம் அக்கறை கொள்ளாத அலங்கார பூஷிதையான அம்மன், குழந்தையை மட்டுமே காப்பார். ஒரு உயிர் பலிக்கு ஓர் உயிரைத்தான் காப்பாற்றும் ஸ்ட்ரிக்ட் அம்மனாக இருக்கார். சரி இதோடு முடியும் எனப் பார்த்தால், ‘நான் கவனக்குறைவா ஒரு தப்பு பண்ணிட்டேன். அதனால் நான் மறையப் போகிறேன்’ என அவரது காவலை நம்பியிருக்கும் ஊரை அம்போவென 2000 வருடத்திற்கு டீலில் விட்டுவிடுகிறார்.

இப்படியாக லாஜிக் பார்க்காமல், விஷுவல் மேஜிக் மட்டுமே போதும் என்பவர்களுக்கான படம் இது. தெய்வ சக்தியும், தீய சக்தியும் நேருக்கு நேர் மோதும் தருவாயில், சுந்தர்.சி-க்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வு விழித்துக் கொண்டு, யோகிபாபு, சிங்கம்புலி, லொள்ளு சபா சுவாமிநாதன், ஊர்வசி, மைனா நந்தினி முதலியவர்களைக் கொண்டு, நேரம் கடந்து ப்ரீ-க்ளைமேக்ஸில் ஒரு நகைச்சுவை அத்தியாயத்தை வைத்துள்ளார் சுந்தர்.சி. இது போன்ற காட்சிகளில் அவரொரு மாஸ்டர் என்றாலும், மையக்கதையோடு ஒட்டாததால் வயிற்றைப் பதம் பார்க்கத் தவறிவிடுகிறது.

ஐடியாவாக, ‘அட’ போட வைக்கும் கருவைச் சுவாரசியமான திரைக்கதையாக மாற்றாமல், அப்படியே படமாக்கியுள்ளார் சுந்தர்.சி. இராமாயணத்தில், யாஷ் எப்படி இலங்கையைக் கைப்பற்றுகிறாரோ, அச்சு பிசகாமல் அதே போல் எதிரிப்படைகளை வெல்கிறார் வில்லன் துனியா விஜய். ஆனால், சரியான இடத்தில் இந்தக் காட்சியைப் பொருத்தாததால், முன்னதைப் போல் தாக்கத்தை உருவாக்கத் தவறிவிடுகிறது. கிராஃபிக்ஸ், பிரம்மாண்ட மேக்கிங் போன்றவற்றில் முழுமையான கவனத்தைச் செலுத்தி அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளது படக்குழு. நயன்தாரா ஊருக்குள் வரும்போது அய்யனார் சிலையும், கோபுரங்களில் உள்ள சிலைகளும் ரியாக்ட் செய்வது போன்று பார்த்துப் பார்த்து விஷுவல்களைச் செதுக்கியுள்ளனர். ஆனால் திரைக்கதையின் போதாமையால், அவை விழலுக்கு இறைத்த நீராகிவிடுகிறது.