இது தமிழ் ⚡ AMP

முஸ்தபா முஸ்தபா விமர்சனம் | Mustafa Mustafa review

By Dinesh R | Mar 07, 2026

முப்பது வருடங்களுக்கு முன் வெளியான ‘காதல் தேசம் (1999)’ படத்தில், நட்பின் மேன்மையையும் இணக்கத்தையும் எடுத்தியம்பும் பாடலின் தொடக்கச் சொற்கள் ‘முஸ்தபா முஸ்தபா’ ஆகும். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வந்த அப்பாடல் நட்பிற்கான பாடலாக மிகவும் பிரசித்தி பெற்றது. இப்படத்தின் பிரதான கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஆழமான நட்பினைச் சொல்லும் விதமாக இத்தலைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

டிவி சேனலில் வேலை செய்யும் கார்த்திக், எப்பொழுதோ ஒரு திரைப்படத்தில் ஒருநாள் மட்டுமே நடித்த ஒரு மார்க்கமான காட்சி, ஆபாச (porn) இணையதளத்தில் வெளியாகிவிடுகிறது. இன்னும் இரண்டு நாட்களில் காதலியோடு திருமணம் என்ற நிலையில், நண்பன் வாசுவுடன் இணைந்து, அந்த வீடியோவை நீக்க படாதபாடுபடுகிறான் கார்த்திக். வாசுவும் கார்த்திக்கும் அந்த வீடியோவைக் கல்யாணத்திற்கு முன் நீக்கினார்களா இல்லையா என்பதுதான் கலகலப்பான படத்தின் முடிவு.

ஹேக்கர் சிட்டியாகக் கருணாகரன் நடித்துள்ளார். வீடியோவை நீக்குவது ஒரு விஷயமே இல்லையென நண்பர்களின் பொறுமையை அசால்ட்டாகச் சோதிக்கிறார். கண்டதும் காதலில் விழும் கார்த்தியாக சதீஷ் நடித்துள்ளார். பல பொய்களைச் சொல்லிக் காதலியிடம் சிக்கிக் காலில் விழுந்து படாதபாடுப்பட்டுத் திருமணம் வரை வந்துவிட்ட பின், வீடியோவால் கார்த்திக் படும் அவஸ்தையைச் சரியாக நடிப்பில் கொண்டு வந்துள்ளார் சதீஷ். படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளது வாசுவாக நடித்துள்ள சுரேஷ் ரவிதான். அவர் இயல்பாய்ப் போகிற போக்கில் தரும் டைமிங் கவுன்ட்டர்ஸ் ரசிக்க வைக்கின்றன. மானஸா செளத்ரியும், மோனிகா சின்னகொட்லாவும் தங்களது பாத்திரங்களைப் பழுதில்லாமல் நடித்துள்ளனர்.

சூழ்நிலைக் கைதியைப் போல் வசமாகச் சிக்கிக் கொள்ளும் ஒருவனின் அவஸ்தையையும், அதிலிருந்து மீள அவன் மேற்கொள்ளும் முயற்சியையும் கலகலப்பாகச் சொல்லியுள்ளார் இயக்குநர் பிரவீன் சரவணன். இப்படம், விஜய் தேவரகொண்டாவின் தயாரிப்பில் வெளியான ‘Meeku Maathrame Cheptha (2019)’ எனும் தெலுங்குப் படத்தின் மீள் உருவாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.