இது தமிழ் ⚡ AMP

நெஞ்சுக்கு நீதி – 50 ஆவது நாள் வெற்றி விழா

By Dinesh R | Jul 11, 2022

தயாரிப்பாளர் போனி கபூர் வழங்க, ஜீ ஸ்டுடியோஸ் & பேவியூ ப்ராஜெக்ட்ஸுடன் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சமூக அவலத்தைச் சாடும் ஓர் அழுத்தமான திரைப்படமாக, ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட இப்படம், திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்து பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்த நிலையில், படக்குழு இன்று படத்தின் 50 ஆவது நாளைப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கொண்டாடினர்.

முதலில் மேடையேறி நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் போனிகபூர் நடிகர் உதயநிதி, ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைத் தயாரிப்பாளர்கள் M.செண்பகமூர்த்தி, R.அர்ஜூன் துரை ஆகியோருக்கு தங்க செயின் அணிவித்தார். இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு மோதிரம் அளித்தார். மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பரிசுகள் அளித்தார்.

தயாரிப்பாளர் போனிகபூர், “இந்தப் படத்தின் வெற்றியை உங்களுடன் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நெஞ்சுக்கு நீதி படக்குழுவுடன் பணிபுரிந்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் நிறுவனத்தில் வலுவான கதைகள் நிறைந்த படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழில் நிறைய படங்கள் செய்ய ஆர்வமாக இருக்கிறேன். எங்கள் நிறுவனம் சார்பில் இப்பொழுது பல படங்கள் செய்து வருகிறோம். தொடர்ந்து இன்னும் பல நல்ல படங்களைக் கொடுக்க உள்ளோம். உதயநிதியுடன் இணைந்து அடுத்து ஒரு படம் உருவாக்க உள்ளோம். தமிழில் முக்கியமான நடிகர்களுடன் இணைந்து இயங்கி கொண்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது” என்றார்.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ், “இந்தப் படம் சில மனிதர்களுக்கான, அறிவுரையைக் கூறும் படமாக அமைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது எனது இரண்டாவது திரைப்படம், அதன் 50 ஆவது நாளில் இருப்பது மகிழ்ச்சி. இந்தப் படத்தின் தலைப்பு எங்களுக்கு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்கிறேன். சமூக நீதிக்கான படத்தை உருவாக்கியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

நடிகர் ஆரி, “எனது திரைப்பயணத்தில் முதல் அங்கீகாரம் உதயநிதி அவர்களால் தான் கிடைத்தது. நெடுஞ்சாலை படத்தின் வெற்றி ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தால் சாத்தியமானது. இப்போது அவருடன் ஒரு நேர்மையான படத்திற்கான வெற்றிவிழாவில் இருப்பது மகிழ்ச்சி. முதல் முறையாக நான் நடித்த படத்திற்கான 50 ஆவது நாளில் இருக்கிறேன். இந்தப் படத்தை பெரிய வெகுமதியாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் உதயநிதி அவர்களுக்கு நன்றி” என்றார்.

உதயநிதி ஸ்டாலின், “நானும் அருண்ராஜாவும் அடுத்து ஒரு படம் இணைந்து பணியாற்ற உள்ளோம். அருணுடன் பணியாற்றுவது பெரிய அனுபவமாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிப்பது முதலில் கஷ்டமாக இருந்தது. பின்னர் அருண் இந்தப் படத்திற்கு கடின உழைப்பைக் கொடுத்தார். அது தான் இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம். எப்பொழுதும் நல்ல படத்திற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்” என்றார்.