இது தமிழ் ⚡ AMP

நிறம் விமர்சனம் | Niram review

By Dinesh R | Nov 26, 2026

புதிதாகக் கட்டப்படும் ஒரு கட்டடத்தின் தூணில் இருந்து இரண்டு மனித விரல்கள் மட்டும் நீட்டிக் கொண்டிருக்கின்றன. SK மருத்துவமனை ஓனரான சகுந்தலா தேவியின் மகள் காணாமல் போகிறார்; மருத்துவக் கல்லூரியின் மாணவி கீர்த்தனா கடத்தப்படுகிறார்; இந்த மூன்று க்ரைமையும் இணைக்கும் புள்ளிதான் படத்தின் முடிவு.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

SK மருத்துவமனையின் ஓனராக சுரேகாவாணி நடித்துள்ளார். அவரது மகளாக தான்யா ஹோப் நடித்துள்ளார். தான்யா ஹோப் கடத்தப்பட்டதும், மருத்துவமனையை நிர்வகிக்கும் நிதின் சத்யாவிடம், தனது மகளைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்கிறார். நிதின் சத்யாவிற்கு ஒரு மாதிரியான க்ரே ஷேட் கொண்ட கதாபாத்திரத்தில் சரியாகப் பொருந்திப் போகிறார். மருத்துவராக முகின் ராவ் நடித்துள்ளார். தனது காதலியைக் காப்பாற்ற எந்த ரிஸ்க்கையும் எடுக்கத் தயாராக இருக்கும் பாத்திரத்தில் வருகிறார்.

கீர்த்தனாவின் தந்தையாக நடித்துள்ள திருநாவுக்கரசு தனது ஸ்க்ரீன் ப்ரெஸன்சால் படத்தின் எமோஷ்னல் காட்சிக்கு உதவியுள்ளார். பாசமிகு மகளாக, சமூக அக்கறை கொண்டவராகத் தான்யா ஹோப் நடித்துள்ளார். ஆனால், படத்தின் நாயகியோ கல்லூரி மாணவி கீர்த்தனாவாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ராணிதான். கண் முன்னே நிகழும் சின்ன தப்பையும் மிகத் தைரியமாகத் தட்டிக் கேட்கும் பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

காட்சிகள் தனித் தனியாகத் தொக்கி நிற்பதால் படத்தோடு ஒன்றுவதில் சின்ன சிரமம் எழுகிறது. சவால்களைச் சுவாரசியமாக எழுப்பாமல், பாதி காட்டி, பின் தீர்வைக் க்ளைமேக்ஸில் ஒரு திருப்பமாக அளிக்கு முயற்சி செய்துள்ளார் இயக்குநர் பலராம் கிருஷ்ணா.