இது தமிழ் ⚡ AMP

நிழற்குடை விமர்சனம் | Nizharkudai review

By Dinesh R | May 09, 2025

நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும். நிழற்குடையின் அருமையோ வெயில், மழை என இரண்டிலும் தெரியும். நிழற்குடையை மனித உறவுகளுக்கான குறியீட்டுத் தலைப்பாகப் பயன்படுத்தியுள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நிரஞ்சனும் லான்சியும் காதலித்துக் கல்யாணம் செய்கிறார்கள். அவர்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ளாததால், தனியாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு நிலா என்றொரு குழந்தை உள்ளது. இருவரும் வேலைக்குச் செல்வதால், குழந்தையைப் பார்த்துக் கொள்ள கேர்-டேக்கரை நியமிக்கிறார்கள். ஆனால் கேர்-டேக்கர் ஒத்து வராததால், ஆசிரமத்தில் இருந்து ஜோதிம்மாவை அழைத்து வருகின்றனர். திடீரென நிலா காணாமல் போகிறாள். பின் என்னாகிறது என்பதே படத்தின் கதை.

இடைவேளையில் ஒரு பதைபதைப்பை ஏற்படுத்துவதற்காக தர்ஷன் சிவா கதாபாத்திரத்தைப் பயன்படுத்தப்பட்டுள்ளார். தொடக்கம் முதலே கதையோடு ஒட்டாமல், அந்தக் கதாபாத்திரத்தின் கனத்தை அதிகப்படுத்துமளவு நடிக்க முடியாமல் திணறியுள்ளார் தர்ஷன் சிவா. கேமரா கோணங்களிலாவது ஒளிப்பதிவாளர் R.B.குருதேவ், எச்சரிக்கையாக இருந்து, படத்திற்குத் தேவையான உணர்வை சீரியஸ் நோட்டில் டெலிவரி செய்திருக்கலாம்.

எப்பொழுதும் வேலை, வேலையில் முன்னேற்றம் என்ற சிந்தனையில் இருக்கும் தலைமுறையைப் பிரதிபலிக்கின்றனர் நிரஞ்சனும் லான்சியும். நல்லவர்கள்தான் ஆனாலும், குடும்பம், குழந்தை, வேலை என்ற மூன்றில் எதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்ற தெளிவில்லாதவர்களாக உள்ளனர் அந்த இணை. தங்கள் புது வீட்டில் பெற்றோர்கள் வந்தால் தங்குவதற்காக, ஓர் அறையை ஒதுக்கி வைத்துள்ளனர். ஆனால் பெற்றோர்களை அருகில் சேர்க்கக் கூடாதென்ற முரணான மனநிலையையும் வளர்த்துக் கொள்பவர்களாகச் சித்தரித்துள்ளதைக் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள ஷிவ சண்முகம் தவிர்த்திருக்கலாம்.

நிரஞ்சனாக விஜித்தும், லான்சியாகக் கண்மணியும் நடித்துள்ளனர். உறவுகளைப் போரில் இழந்த ஈழத்து ஜோதியாக தேவயானி நடித்துள்ளார். நிலா மீது அவர் காட்டும் பிரயமும் நேசமும் தான் நிழற்குடையின் அருமையை விளக்கும் பாத்திரமாக அமைந்துள்ளது. படம் உறவுகளின் மேன்மையைப் பேச முயன்று, அதிலிருந்து விலகிப் பெண் (குழந்தை வளரும் வரை அம்மா) வேலைக்குச் செல்வதையும், வீட்டில் முதியவர்கள் இருந்தால் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வார்கள் என்பதை விவாதப்பொருளாக முன் வைக்கிறது.ஹிமேஷ்பாலாவின் வசனங்களில் தொனிக்கும் இந்த பாசாங்குத்தனத்தை மட்டும் தவிர்த்திருந்தால் நிழற்குடை நல்லதொரு கருத்தை வலியுறுத்தும் படமாக அமைந்திருக்கும்.