இது தமிழ் ⚡ AMP

“நமது சகோதரர்களின் வலி நமது வலி” – வெற்றிமாறன் | நீளிரா

By Dinesh R | Mar 29, 2026

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழல் பின்னணியில் சர்வைவல் த்ரில்லராக தயாராகி இருக்கும் ‘நீளிரா’ முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திருமதி அகிலா பாலுமகேந்திரா ‘நீளிரா’ படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

படக்குழுவினரை வாழ்த்தி திருமதி அகிலா பாலுமகேந்திரா, ”என் கணவர் பிறந்த ஊர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம். நான் பிறந்தது மட்டக்கிளப்பு. எங்கள் ஊரைப் பற்றி சோமீதரன் படம் எடுத்திருப்பது மிகவும் பெருமிதமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கணவரின் ஆசையை சோமீதரன் நிறைவேற்றி இருக்கிறார். என்னுடைய கணவர் இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பார். சோமீதரனின் ‘நீளிரா’ திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், “நான் இங்கிலாந்திலிருந்து திரும்பிய பிறகு 2012ம் ஆண்டில் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் தொடங்கினோம். நான், கார்த்திக் சுப்புராஜ், பவன், கல்யாண் அனைவரும் இணைந்து தொடங்கினோம். முதல் படமாக மேயாத மான் படத்தைத் தயாரித்தோம். ‘நீளிரா’ திரைப்படம் எங்களுடைய 18வது திரைப்படம்.

‘மேயாத மான்’ படத்தயாரிப்பிற்கு முன்பே இயக்குநர் சோமீதரனை எனக்குத் தெரியும். இன்றைக்குச் சொல்ல வேண்டும் என்றால் சோமி எங்களுக்கு நண்பர் மட்டுமல்ல குலச்சாமி. அந்த அளவுக்கு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார். நிறைய படங்களைத் தயாரித்து இருந்தாலும் ஒரு சில படங்கள்தான் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும். அந்த வகையில் ‘நீளிரா’ எங்களுடைய மனதிற்கு நெருக்கமான படம். இதுவரைக்கும் இந்தத் திரைப்படத்தைப் பார்த்த அனைவரும் நல்ல திரைப்படத்தை தான் தயாரித்திருக்கிறீர்கள் என்று பாராட்டினர்.

இந்தப் படத்தை வெளியிட வேண்டும் எனத் தீர்மானித்து யாருக்கெல்லாம் திரையிடலாம் எனத் திட்டமிட்ட போது முதலில் நடிகர் ராணாவைத் தொடர்பு கொண்டு அவருக்குத் திரையிட்டுக் காண்பித்தோம்.‌ பார்த்து முடித்தவுடன் என்னுடைய பங்களிப்பு உறுதி என்று சொன்னார்.‌ அதற்குப் பின் ஏஜிஎஸ் நிறுவனத்திற்குத் திரையிட்டுக் காண்பித்தோம். அவர்களும் உடனடியாகத் தமிழகம் முழுவதும் திரையிடுவதற்கு மகிழ்ச்சியுடன் முன் வந்தனர்.‌ அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இத்திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறது. இந்தப் படத்திற்காக நாங்கள் ஒரு பாடலை உருவாக்கினோம் அந்தப் பாடலை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.‌ இந்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது சாத்தியமாகி இருக்கிறது என்றால் இதன் பின்னணியில் உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் சசி, ”இயக்குநர்களுக்கென ஒரு வாட்ஸ் அப் குரூப் இருக்கிறது. அந்த குரூப்பில் கார்த்திக் சுப்புராஜ், ‘நீளிரா’ என்றொரு படத்தைத் திரையிட உள்ளோம். அனைவரும் வருகை தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்தச் செய்தியைப் படித்து முடித்தவுடன் இயக்குநர் லிங்குசாமியிடமிருந்து எனக்கு ஃபோன் வந்தது. ‘இந்தப் படத்தை நான் ஓராண்டிற்கு முன்னரே திரைப்பட விழாவில் பார்த்து விட்டேன். நல்ல படம். தவற விடாதீர்கள்’ என்றார். லிங்குசாமி எப்படி என்றால் ‘பாகுபலி’ படத்தைப் பார்த்தால் உடனடியாகப் போய்ப் பார் என்று சொல்வார் ‘கொட்டுக்காளி’ படத்தைப் பார்த்தால் உடனடியாகப் போய்ப் பார் என்று சொல்வார். அவருக்கு எல்லாவிதமான படங்களும் பிடிக்கும். ஆனால் அந்தப் படம் அவரை என்டர்டெய்ன் செய்ய வேண்டும். அதனால் ‘நீளிரா’ கண்டிப்பாக என்டர்டெய்ன்மென்ட் படம் என்று தெரிந்து விட்டது. எனக்கு அந்த டைட்டில் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தினாலும் லிங்குசாமி சொன்னதற்காக இப்படத்தை காணச் சென்றேன்.

ஈழத்து பிரச்சனையை ஈழ மக்களின் வாழ்வை அப்படியே கண்முன் கொண்டு வந்த கலை இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு ஆகிய இரண்டு தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் முதலில் என் வாழ்த்துகளையும் நன்றிகளையும் சொல்கிறேன். போர் சூழலில் ஈழத்திற்குள் ஒரு வீட்டிற்குள் இருக்கிறேன் என்ற ஒரு எண்ணத்தை உருவாக்கிய இவர்களுக்கு நன்றி. இந்தப் படத்தில் இதுதான் கிளைமாக்ஸ் என்று தெரிகிறது. அந்த இடத்திற்கு சென்ற பிறகு, அங்கிருந்து இயக்குநர் வேறு ஒரு விஷயத்தை சொல்கிறார். தயாரிப்பாளர்களே, தைரியமாக இருங்கள். நீங்கள் ஒரு வெற்றிகரமான படத்தை வழங்கியுள்ளீர்கள், வாழ்த்துகள்,” என்றார்.

ராணா டக்குபாத்தி, ”சோமீதரனின் சொந்த வாழ்க்கை தான் இந்தத் திரைப்படம். அடுத்த தலைமுறைக்கான சிறந்த படம் இது.‌ இங்குப் பேசிய இயக்குநர்கள் ஜெர்மனி, வியட்நாம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போர்களைப் பற்றி ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன, ஆனால் இந்தியாவில் இந்திய மண்ணில் இது பற்றிய படங்கள் வெளியாகவில்லை எனக் குறிப்பிட்டனர். இதனால் தான் எங்களின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் நம் மண்ணைச் சார்ந்த, நம் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் படைப்புகளைத் தயாரிக்க வேண்டும் என ஐந்தாண்டுகளுக்கு முன் தீர்மானித்தோம். மலையாளம், மராத்தி தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கலாச்சாரம் சார்ந்த கதையைத் தயாரித்து வருகிறோம். இந்தப் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியதைப் பெருமிதமாகக் கருதுகிறேன்.

சோமீதரன் மிகவும் திறமைசாலி. யுத்தம் இல்லாமல், ஒரு துப்பாக்கிக் குண்டு இல்லாமல், ஒரு வீட்டிற்குள் பரபரவென்று செல்லும் கதையைச் சொல்லி இருக்கிறார். நான் இந்தப் படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன். தற்போதுள்ள உலகளாவிய போர்ச் சூழலில் இந்தப் படத்தை சரியான தருணத்தில் வெளியிடுகிறோம் என நினைக்கிறேன்” என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன், ”இந்தப் படம் ஈழத்திலிருந்து வந்த ஒரு நண்பன். தன்னுடைய வலியை, தன்னுடைய நினைவுகளை, ஈழத்திலிருந்து வந்த மற்றொரு இளைஞனுடன் சேர்ந்து படமாக உருவாக்கி இருக்கிறார். இதற்காக கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி.

நம்முடைய சகோதரர்களுடைய வலியை நம்முடைய வலியாகவே பார்த்து வளர்ந்திருக்கிறோம். ஆனாலும் சினிமாவின் வாயிலாக இதனை சாத்தியப்படுத்திய சோமீதரனுக்கு வாழ்த்துக்கள். ஒரு ரைட்டர் ஆக சோமிதரனின் அச்சீவ்மென்ட் ஸோ ஹை. எதிர்பாராதது.

இந்தப் படம் வெறுப்பை பேசவில்லை. இந்தப் படம் வன்முறையை ஆதரிக்கவில்லை. இது பிரச்சாரப் படம் அல்ல. ஒரு கருத்தியலை உயர்த்திப் பிடிப்பதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான படமும் அல்ல. வெறுப்பையும் வன்முறையையும் பணமாக்க விரும்பாத ஒரு படம்.‌

இந்தப் படம் யாரையும் நேரடியாக விமர்சனத்திற்கு உட்படுத்தாமல் சம்பவங்களை இயல்பாக சொல்லும் படம். வெறுப்பிற்கு எதிராக நாம் இதுபோன்ற படங்களை தான் பதிலாக சொல்ல முடியும்” என்றார்.

கார்த்திக் சுப்புராஜ், “இது போன்ற போர் சூழல் குறித்த கதைகளைச் சொல்வதற்கு சினிமா தான் ஆகச்சிறந்த கலை வடிவம்.‌ ஆதனால் அதனை மிகவும் சரியாகச் செய்துவிட வேண்டும் என்று பதட்டம் இருந்து கொண்டே இருந்தது.

ஈழத் தமிழர்கள் மீது எனக்குச் சின்ன வயதில் இருந்தே ஒரு அனுதாபம் இருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு சோமிதரன் போன்றவர்கள் இது போன்ற கதைகளை எடுத்து வந்தால் அதைத் தயாரிப்பதற்கு பெரியப் பெரிய தயாரிப்பாளர்கள் முன் வருவார்கள். இதற்கான தைரியத்தை முழுதாகக் கொடுக்கிறதோ இல்லையோ ஆனால் அதற்கான தொடக்கப் புள்ளியாக இப்படம் இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.