இது தமிழ் ⚡ AMP

“படையாண்ட மாவீரா: அறம் சுமந்த ஒருவனது வரலாறு” – கெளதமன்

By Dinesh R | Sep 10, 2025

இயக்குநரும் நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்து, இயக்கியிருக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள். வடத்தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த ‘காடுவெட்டி’ குருவின் சுயசரிதையைத் தழுவித் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை வி.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். செப்டம்பர் 19 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் வ. கௌதமன் பேசுகையில், “தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் யாரும் உயர்ந்தவர்களும் இல்லை. தாழ்ந்தவர்களும் இல்லை. அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.‌ இங்கு ஒரு வரலாறை வரலாற்றில் இருந்து தான் தொடங்க வேண்டும். அதற்காக வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று சொல்லவில்லை. வரலாறாக நின்ற ஒருவனின் வரலாறைச் சொல்லும் போது தான், இந்த மண்ணில் இருள் மண்டிக் கிடக்கிற குப்பையும், கூளங்களும், அழுக்குகளும் அகற்றப்படும். அப்படிப்பட்ட ஒரு படைப்புதான் ‘படையாண்ட மாவீரா’.

இந்தப் படைப்பை வீழ்த்த வேண்டும் என்பதற்காக மறைமுகமாகப் பலர் செயல்படுகிறார்கள். நான் இதுவரை எந்தச் சமூகத்தையும் காயப்படுத்த வில்லை. எந்த இனத்தையும் காயப்படுத்த வில்லை. எந்த தமிழ் சாதியையும் அசிங்கப்படுத்துவதற்காக நான் உடந்தையாக இருந்ததில்லை. பிறகு ஏன் இந்த அருவருப்பான செயலைத் தொடர்ந்து செய்கிறீர்கள்?

என்னுடைய தந்தையும், அவருடைய (காடுவெட்டி குரு) தந்தையும் ஒன்றாகக் கல்வி கற்றவர்கள். எனக்கும், அவருக்கும் நல்ல நட்பு மட்டுமல்ல, புரிதல் மட்டுமல்ல, பேரன்பும் இருக்கிறது. அறம் கொண்டவர்களை இந்த மண்ணில் வீழ்த்த முடியாது. வேண்டுமானால் சில காலம் வரை மறைக்கலாம். ஆனால் மீண்டும் எழுந்து வருவார்கள். படைப்புகளையும், படைப்பாளிகளையும் வீழ்த்த நினைத்து மேற்கொள்ளப்படும் செயல்கள் அனைத்தும் அருவருப்பானவை. அதனைத் தவிர்த்து விடுங்கள்.

தமிழரசனின் வாழ்க்கை வரலாறைப் படைப்பாக உருவாக்க வேண்டும். மேதகு பிரபாகரனை வாழ்க்கை வரலாற்றைப் படைப்பாக உருவாக்க வேண்டும். ஏனெனில் தமிழ் இனத்தின் வரலாறை அனைவருக்கும் உரக்கச் சொல்ல வேண்டும். தமிழினத்தின் எதிரிகளை மண்டியிடச் செய்ய வேண்டும்.

இந்தப் படத்தின் பாடல்களில் நெருப்புப் பொறி பறந்தது போல் படத்திலும் அனல் பறக்கும். இந்தப் படத்திற்காக பின்னணி குரல் கொடுத்த கலைஞர்களுக்கு படத்தின் உச்சகட்ட காட்சியைத் திரையிட்டு காண்பித்தேன். அவர்கள் அனைவரும் கண்ணீருடன் என்னைக் கட்டி அணைத்து தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர். அறம் சுமந்த ஒருவனது வரலாறு என்பது பார்வையாளர்களுக்கு இடைவெளி இல்லாத ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும், ஒரு தாக்கத்தை உருவாக்கும் என்பதை உணர்ந்தேன். அந்தத் தருணத்திலேயே இந்தப் படைப்பிற்கான புனிதத்தை நான் அடையத் தொடங்கி விட்டேன். இந்தப் படைப்பு வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.