இது தமிழ் ⚡ AMP

பன்றிக்கு நன்றி சொல்லி – ஹீரோ நிஷாந்த் ரூஸோ

By Dinesh R | Feb 08, 2022

சமீபத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், சோனி லிவ் தளத்தில், ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ எனும் திரைப்படத்தை வெளியிட்டது. பாலா அரன் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சினிமாவில் இயக்குனராகப் போராடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நிஷாந்த் ரூஸோ (Nishanth Russo).

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி எடுத்துக் கொண்ட நிஷாந்த் ரூஸோவிற்கு நண்பர் ஒருவர் மூலமாக 2018இல் ‘ஆண்டனி’ என்கிற படத்தில் கதாநாயகனாகவும், சண்டக்கோழி வில்லன் நடிகர் லாலுக்கு மகனாகவும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயத்திலேயே இயக்குநர் பாலா அரனிடமிருந்து, ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தில் நடிக்கும் அழைப்பு வந்து, ஆடிஷனிலும் தேர்வானார் நிஷாந்த் ரூஸோ. தற்போது அந்தப் படத்திற்குக் கிடைத்து வரும் பாசிடிவ் விமர்சனங்களால் உற்சாகமாக இருக்கிறார் நிஷாந்த் ரூஸோ.

“இந்தப் படத்தில் பல காட்சிகளை யாரும் அறியாத வண்ணம் படமாக்கினோம்.. கோவையில் நள்ளிரவில் பிக்பாக்கெட் திருட்டு ஒன்றைப் படமாக்கியபோது, இயக்குநர் கட் சொன்னது கூடக் கேட்காமல் நானும் உடன் நடித்தவரும் சற்று தூரம் தள்ளி வந்துவிட்டோம். ஆனால் வழியில் எங்களை நிறுத்திய போலீஸார் எனது கிழிந்த உடை, உடன் நடித்தவரின் முகம் எல்லாவற்றையும் பார்த்து, சம்பவம் நிஜமாகவே நடந்திருக்கிறதோ என்கிற அளவுக்கு சந்தேக்கப்பட்டு ஜீப்பில் ஏற்றும் அளவுக்குத் தயாராகி விட்டார்கள். ஒரு வழியாகப் படப்பிடிப்பு நடக்கிறது எனக் கூறி, அனுமதிக் கடிதத்தைக் காட்டிய பின்னரே விட்டனர்.

அதே போல சைதாப்பேட்டை பகுதியில் இரவு நேர படப்பிடிப்பில் சாலை வழியாக ஓடும் காட்சிகளைப் படமாக்கினோம். படப்பிடிப்பு நடைபெறுவதற்கான அறிகுறியே இல்லாததால் நாங்கள் ஓடுவதைப் பார்த்து பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டு இருந்தவர்கள் திடுக்கிட்டு விழித்து, எங்களை விரட்ட ஆரம்பித்தனர். இப்படி பல சுவாரசியங்கள் அந்தப் படத்தின் படப்பிடிப்பில் நடந்தன.

இந்தப் படத்தின் டைட்டில் ஒரு மாதிரி இருக்கிறதே என்று கூட ஆரம்பத்தில் பலர் கேட்டார்கள். ஆனால் இந்தப் படத்தின் டைட்டில் தான் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா சாரின் கவனத்தை ஈர்த்து, அவரையே இந்தப் படத்தைப் பார்க்க வைத்தது. படத்தைப் பார்த்த மறுநாளே அவரே படத்தை வெளியிடுவதாக கூறவும் வைத்தது.

தற்போது, நானும் விவேக் பிரசன்னாவும் நடித்துள்ள சர்வைவல் ஆக்ஷன் திரில்லர் படம் ஒன்று ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

அடுத்ததாக ஸ்போர்ட்ஸ் ஜானரில் ‘யார்க்கர்’ எனும் படத்தில் நடிக்கிறேன். ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தைப் பார்த்துவிட்டு சில தயாரிப்பாளர்களும் என்னைப் பாராட்டியதுடன் விரைவில் இணைந்து பணியாற்றலாம் என நம்பிக்கை கொடுத்துள்ளனர். இந்தப் படங்களின் மூலம் அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் வரும் எனக் காத்திருக்கிறேன்” என்றார் நிஷாந்த் ரூஸோ நம்பிக்கையுடன்.