இது தமிழ் ⚡ AMP

பரிமளா அண்ட் கோ விமர்சனம் | Parimala and Co review

By Dinesh R | Jun 05, 2026

கோடை விடுமுறையைக் குறிவைத்துக் குடும்பப்படமாகப் பரிமளா அண்ட் கோ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சென்னை பட்டினப்பாக்கம் ஏரியாவில் மிடில் கிளாஸ் வாழ்வில் கலந்து நிறைந்துள்ளார் நாயகன் ஜெயராம். அவரது மனைவி ஊர்வசி, மகள்கள் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார் ஆவர். இவர்கள் மூவரும் தான் அவருக்கு உலகம். ரொம்பவும் ஜாலியாக வாழ்ந்து வரும் இந்தக் குடும்பத்திற்குள் லோக்கல் தாதாவான சாண்டி நுழைகிறார். ஜெயராம் மகள்களுக்குத் தொந்தரவு கொடுக்கிறார். இதனால் கடுப்பாகும் ஜெயராம் ஃபேமிலி சாண்டியைத் தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறது. அதன்பின் நடக்கும் சாண்டி மரணமும், அது சார்ந்த விசாரணையும் தான் மீதிப்படம்.

எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை முழுமையாக உள்வாங்கி நடிக்கும் திறன் படைத்த ஜெயராம் இப்படத்தில் வீணடிக்கப்பட்டுள்ளார். அவர் பாத்திரத்துக்கான எழுத்தில் துளியும் அழுத்தமில்லை. இருப்பினும் சில காட்சிகளில் நிறைவாகக் கவனிக்க செய்கிறார். ஊர்வசி தலைவலி தைலத்தை வைத்துச் செய்யும் நகைச்சுவைக்குத் திரையரங்கில் நல்ல வரவேற்பு. அனந்திகா, சஞ்சனா இருவரும் சுட்டித்தனம் செய்யும் மகள்களாக அசத்தியுள்ளனர். சாண்டி ஒரு நிஜ ரெளடியைக் கண்முன் நிறுத்துகிறார். மிஷ்கின் கதாபாத்திரத்துக்கான தொடக்கமும் முடிவும் கச்சிதமான எழுதப்பட்டுள்ளது. அவரும் பிரமாதமாக நடித்துள்ளார். படத்தில் உருப்படியாகப் படைக்கப்பட்ட கதாபாத்திரம் மிஷ்கினுடையது மட்டும் தான். யோகிபாபுவின் நகைச்சுவை பெரிதாகப் படத்திற்கு உதவவில்லை. சிங்கம்புலி, பக்ஸ் இருவரும் ஓகே ரகம்.

ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு, பட்டினப்பாக்கம் நிலவியலைச் சிறப்பாகக் காட்டியுள்ளது. இசைஞர் இன்னும் சிறப்பான பின்னணி இசையை வழங்கியிருக்கலாம். டைட்டில் சாங் ஒன்று சிறப்பாக இருக்கிறது.

கதையில் பாபநாசம் படத்தின் சாயலைக் கையிலெடுத்த இயக்குநர் பாண்டிராஜ், திரைக்கதையில் அதன் சுவாரசியத்தைக் கொண்டு வரத் தவறியுள்ளார். இன்ஸ்பெக்டர், ஜெயராம் வீட்டிற்கு வரும் ஒரு காட்சி தவிர வேறு காட்சிகள் எதுவும் சுவாரசியமாக இல்லை. எந்த லாஜிக்கும் இல்லாத திரைக்கதை, பரிமளா & கோ-வைப் பரிணமிக்க விடாமல் பல்லிளிக்க வைக்கிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் ரசிக்கும்படி வந்திருக்கும்.

– வெண்பா தமிழ்