இது தமிழ் ⚡ AMP

பெத்தி விமர்சனம் | PEDDI review

By Dinesh R | Jun 05, 2026

பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கும் பெத்தி, கமர்ஷியல் ரூட்டில் ஒரு அரசியலைப் பேசியுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஒரு பெரும் முதலாளிக்கு ராம்சரணும் அவரது மலையடிவாரத்தைச் சேர்ந்த மக்களும் நியாயமற்றக் கூலிக்கு வேலை செய்கின்றனர். ராம்சரணுக்கு எக்ஸ்ட்ரா திறமைகள் நிறைய உண்டு. அதிலொன்று கிரிக்கெட் ஆட்டம்! “ஆட்டக்கூலி” என அழைக்கப்படும் அவர் யார் தன்னை ஏலத்திற்கு எடுக்கிறார்களோ அவர்களுக்காகப் போய் விளையாடுவார். அது 1990 காலகட்டம். ராம்சரணின் மலையடிவாரம் அருகே ரயில் சேவை வேண்டும், அங்கு ரெயில் நின்று செல்லவேண்டும் என ஜெகபதிபாபு பெரும் போராட்டத்தை நிகழ்த்துவார். ராம்சரணுக்கு அவர் போராட்டத்தின் தேவை ஒரு கட்டத்தில் புரிகிறது. அதற்கு நம் ஊருக்கென ஓர் அடையாளம் தேவை என உணர்கிறார். அந்த அடையாளத்திற்காகக் குஸ்தி வாத்தியார் சிவராஜ்குமாரிடம் குஸ்தி கற்று, தேசியளவில் பிரபலமாகித் தனக்கும் தன் கிராமத்திற்கும் ஒரு அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என முடிவெடுக்கிறார். ஆனால் அவரின் முயற்சிக்குப் பெரும் தடை ஒன்று நேர்கிறது. அதை நாயகன் எப்படிச் சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

இந்தப் படத்திற்காக ராம்சரண் போட்டிருக்கும் பெரு உழைப்புத் திரையில் அவர் பெருமைபடும்படியாகத் தெரிகிறது. சண்டைக்காட்சிகளை அவர் அநாயாசமாகக் கையாண்டு ரசிகர்களிடம் கைத்தட்டலைப் பெறுகிறார். ஜான்வி கபூருக்குச் சொல்லிக் கொள்ளும்படியான வேடமில்லை. கவர்ச்சிக் காட்சிகளில் மட்டும் தாராளத்தைக் காட்டியுள்ளார். சிவராஜ்குமார், படத்தில் வழக்கமாக வரும் ஒரு நல்லவர் பாத்திரத்தில் நடித்துள்ளார். அது வழக்கம் போல நன்றாகவே இருந்தது. ஜெகபதி பாபு கதாபாத்திரம் ஆழமாக எழுதப்பட்டிருந்தது. அவரும் சிறப்பாக நடித்திருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் நிஜமாகவே இப்படத்தில் நிறையச் சொதப்பி ஏமாற்றத்தை அளிக்கிறார். ஒளிப்பதிவாளர் ரத்னவேலு விஷுவலில் கோரத்தாண்டவம் ஆடியுள்ளார். அபாரமான ஷாட்ஸ். வரைகலை மட்டும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

எருவெனக் கருதப்பட்ட ஒருவன் சாதனையாளனாக உருவாகி மேலெழும் செம்ம பாசிட்டிவ் கதையை எடுத்துள்ளார் இயக்குநர் புஜ்ஜிபாபு சனா. ஆனால் அந்த நல்ல கதையைத் திரைக்கதையால் எவ்வளவு சொதப்ப முடியுமோ அவ்வளவு சொதப்பியிருக்கிறார். எமோஷ்னல் காட்சிகளில் பார்வையாளருக்கு எந்த அதிர்வும் ஏற்படவில்லை. படத்தின் நீளமும் படத்திற்குப் பெரிய பலவீனம்.

சாதி குறித்த உரையாடல் 90 காலகட்டத்தில் மிகவும் வீரியமாக இருந்ததைச் சரியாகப்பதிவு செய்துள்ளனர். அரசியலாக படம் ஓகே என்றாலும் கமர்ஷியலாகப் படம் அதன் முழுமைத்துவத்தை எய்தவில்லை என்றே சொல்லவேண்டும்.

– வெண்பா தமிழ்