இது தமிழ் ⚡ AMP

“சூர்யாவின் கண்கள்…” – பூஜா ஹெக்டே | RETRO

By Dinesh R | Apr 20, 2025

சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரத்தியேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களுடன் படக் குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ், ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் ஆக்சன் எண்டர்டெய்னராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஜெயந்தி லால் கட்டா, ”இந்தப் படத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்ததற்காக முதலில் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நடித்த பல படங்கள் ஹிந்தியில் ரீமேக் ஆகியிருக்கிறது. அதில் அமீர்கான், அக்ஷய் குமார், அஜய் தேவகன் போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள். சூர்யாவை இந்தியா முழுவதும் தெரியும். அவர் இந்தியாவின் ஹீரோ. எனக்கு இந்தி மட்டும் தான் தெரியும். அவர்களுக்கு ஆங்கிலமும், தமிழ் மட்டும்தான் தெரியும். இருப்பினும் அரை மணி நேரம் நாங்கள் சந்தித்துப் பேசினோம். கார்த்திகேயன் சந்தானம் தான் பேச்சுவார்த்தைக்கு உதவினார். நான் முதன்முதலில் இவ்வளவு பிரம்மாண்டமான விழாவில் கலந்து கொள்கிறேன். எனக்குத் தமிழ் படங்கள் என்றால் சூர்யாவின் படங்கள் மட்டும் தான் தெரியும். திரைப்படத்தின் வெற்றிக்கு உதவும் ரசிகர்களை வாழ்த்துகிறேன். ரெட்ரோ திரைப்படத்தின் வெற்றி விழாவை மும்பையில் நடத்துகிறேன். சூர்யாவின் ரசிகர்கள் அனைவரும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்” என்றார்.

நடிகை பூஜா ஹெக்டே, ”நான் கலந்து கொள்ளும் இரண்டாவது இசை வெளியீட்டு விழா நிகழ்வு. இதனைச் சிறப்பானதாக மாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் சினிமாவில் தான் முதலில் அறிமுகமானேன்.

இந்த வாய்ப்பினை வழங்கிய தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் தமிழில் பின்னணி பேசி இருக்கிறேன். இதற்கு உதவிய இயக்குநர் குழுவினருக்கும் நன்றி. டீசரில் எந்த டயலாக்குகளையும் நான் பேசவில்லை என்றாலும் இசை மூலமாக என் கதாபாத்திரத்தின் உணர்வை ரசிகர்களுக்குச் சொன்ன இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு என் நன்றி. இந்தத் திரைப்படத்தில் ருக்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இத்தகைய கேரக்டரை வடிவமைத்ததற்காகவும் அதில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும் இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கேங்ஸ்டர் கதையை எழுதி இருக்கிறீர்கள். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள். அதில் நடிப்பதற்கு வாய்ப்பு தாருங்கள்.

சூர்யா சார் இந்தப் படத்தில் பாரி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். சூர்யாவுடன் இணைந்து நடித்த அனுபவம் மறக்க முடியாதது. எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். அவருடைய எக்ஸ்பிரஸிவ்வான கண்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ‘கனிமா’ பாடலை ரீல்சாக உருவாக்கி பதிவிட்ட அனைவருக்கும் நன்றி” என்றார்.

ரெட்ரோ திரைப்படம், எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.