இது தமிழ் ⚡ AMP

Mrs & Mr – 40 வயதிற்கு மேற்பட்ட கணவன் மனைவிக்கிடையேயான பிரச்சனை | ஸ்ரீகாந்த் தேவா

By Dinesh R | Jun 08, 2025

நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கிக் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் மதியழகன், ”தம்பிகள் பாலா & சதீஷ் இருவரும் இணைந்து ஸ்ரீனிக் ப்ரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிறுவனத்திற்கு ஆலோசகராக நான் பணியாற்றுகிறேன். அவர்கள் மாதத்திற்கு ஒரு படத்தை வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் முதல் படம் தான் வனிதா விஜயகுமாரின் மிஸஸ் & மிஸ்டர். இவர்கள் ஒரு கோடியில் இருந்து ஐந்து கோடி ரூபாய்க்குள் தயாராகும் படங்களைத்தான் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தையும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியிட முடியாத நிலை தான் இருக்கிறது.

ஜோவிகாவிற்காக தான் இப்படத்தில் இணைந்தோம். நாங்கள் அனைவரும் ஜோவிகாவிற்கு சகோதரர்கள். நான் இந்தத் திரைப்படத்தை மூன்று முறை பார்த்து விட்டேன். படம் நன்றாக இருக்கிறது. கடைசி இருபது நிமிடம் சுந்தர் சி படம் போல் காமெடியாக இருக்கும்” என்றார்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ”இதுவரை 125 திரைப்படங்களுக்கும் மேலாக பணியாற்றி இருக்கிறேன். ஆனால் வனிதா விஜயகுமாருடன் இணைந்து பணியாற்றியது சவாலானதாக இருந்தது, மறக்க முடியாததாகவும் இருந்தது. இந்தத் திரைப்படத்தில் ராபர்ட் மாஸ்டர், வனிதா விஜயகுமார், ஜோவிகா என மூன்று டான்கள் இருக்கிறார்கள். இதில் ஜோவிகா தேர்வுதான் இறுதியானதாக இருக்கும். இந்தச் சிறிய வயதில் அவருக்குள் அபார இசைத்திறமை இருக்கிறது. இதற்கு அவருடைய தாத்தா, பாட்டி தான் காரணம். அவர்களுடைய ஆசி இவருக்கு இருக்கிறது.

ராபர்ட் மாஸ்டரும், வனிதா விஜயகுமாரும் இணைந்த ‘எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சங்கி மங்கி..’ எனும் பாடல் 50 மில்லியனைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்களும் அதனைக் கடந்து புதிய சாதனையைப் படைக்கும்.

இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் இருக்கின்றன. கிளைமாக்ஸில் சாமி பாட்டு ஒன்றும் இருக்கிறது. இந்தப் படத்தில் நான் பாடல்களை எழுதியும் இருக்கிறேன். இந்தத் திரைப்படத்தில் 40 வயதிற்கு மேற்பட்ட கணவன், மனைவி என்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என்பதைச் சொல்லி இருக்கிறார்கள். தற்போதைய தலைமுறையினருக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தில் ராபர்ட் மான்ஸ்டர் நடனத்தை விட நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். குறிப்பாக கிளைமேக்ஸில் அவருடைய நடிப்பு பேசப்படும். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.