இது தமிழ் ⚡ AMP

ராஜா ரங்குஸ்கி விமர்சனம்

By Dinesh R | Sep 23, 2018

கான்ஸ்டபிள் ராஜாக்கு எழுத்தாளர் ரங்குஸ்கி மீது பார்த்ததும் காதல் வந்துவிடுகிறது. யாரோ ஒரு அநாமதேய தொலைப்பேசி அழைப்பாளர்க்கும் ரங்குஸ்கி மீது காதல். அந்த அநாமதேய தொலைப்பேசி அழைப்பாளர், ராஜாவை ஒரு கொலைக் குற்றத்தில் லாகவமாகக் கோர்த்து விட்டுவிடுகிறான். அதிலிருந்து ராஜாவும் ரங்குஸ்கியும் எப்படி மீண்டனர் என்பதுதான் படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

எழுத்தாளர் சுஜாதாவிற்குப் படத்தை டெடிகேட் செய்துள்ளனர். ரங்குஸ்கி என்பது எழுத்தாளர் சுஜாதாவின் இயற்பெயரான ரங்கராஜனின் செல்ல வடிவம். நாயகி, சுஜாதாவின் தீவிர ரசிகை என்பதால் தனது புனைப்பெயராகச் சூடிக் கொள்கிறாள். நாயகன் ராஜாவோ, சுஜாதாவின் அதி தீவிர வாசகன். அவனது வீட்டுச் சுவரில் சுஜாதாவின் புகைப்படங்கள். படத்தின் மர்டரி மிஸ்ட்ரியையும் சுஜாதாவின் பாணியில் சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குநர்.

தனது பெயரில் பதியப்பட்ட சிம் நம்பரில், தனது குரலிலேயே பேசி அலைக்கழிக்கும் நபர் யாரென்று நாயகன் குழம்புகிறான். நாயகியின் ஒவ்வொரு அசைவையும் கூடக் கண்காணித்து நிழலாய்ப் பின் தொடருகிறான். ஆனால், அது தெரிந்தும் கூட க்ளைமேக்ஸ்க்கு முன் நாயகியைத் தனியாக ஆதாரத்தோடு அனுப்பி வைக்கிறான் நாயகன். அசமந்தமாகக் காட்டப்படும் நாயகன்க்குள் புலனாய்வு செய்யும் திறமை உள்ளதெனினும் அதைக் கொஞ்சம் ரகசியம் போல் பின்பகுதிக்காக வைத்துள்ளார் இயக்குநர். தனது பெயரில் உள்ள சிம்மை பிளாக் செய்யவேண்டும் என்றோ, ‘உனது காதலியைக் கொன்றுவிடுவேன்’ என மிரட்டல் விடுக்கும் நபர் மீது சட்டப்படியான நடவடிக்கையோ எடுக்காத ராஜாவாய் மெட்ரோ சிரிஷ் நடித்துள்ளார்.

எழுத்தாளர் ரங்குஸ்கியாய் சாந்தினி. மிகக் கனமான கதாபாத்திரம் கிடைத்தும், அதைப் பார்வையாளர்களுக்குக் கடத்தும் அளவு மெனக்கெடலை அளித்ததாகத் தெரியவில்லை. படத்தின் முடிவு தந்திருக்க வேண்டிய தாக்கம் எட்டப்படாதது துரதிர்ஷ்டமே! அருமையான த்ரில்லருக்குத் தடையாய்ப் பெரிய சைஸ் ஸ்பீடு பிரேக்கராய் உள்ளன பாடல்கள். காரணம், இசையல்ல; பாடல் இடம்பெறும் இடங்கள்.

பழம்பொருட்கள் (Antiques) சேகரிப்பும், படத்தின் மையக்கருவில் முக்கிய பங்கு வகிக்கிறது. கலை இயக்குநர் T.N.கபிலன் தன் பங்கை மிக அழகாகச் செய்துள்ளார். படத்தில் பெரும்பாலும் இரவுக் காட்சிகள்தான். ஒளிப்பதிவாளர் யுவா, மர்டர் மிஸ்ட்ரிக்கான டோனை அழகாக செட் செய்துள்ளார்.

ஒரு நல்ல த்ரில்லராக மனதில் பதிந்திருக்க வேண்டிய படம். இயக்குநர் தரணிதரன் திரையில் கொண்டு வர விழைந்ததை நடிகர்கள் அப்படியே பிரதிபலிக்கத் தவறியுள்ளதால், படம் பார்வையாளர்களிடம் ஏற்படுத்தியிருக்க வேண்டிய தாக்கத்தின் அளவு குறைவாகவே உள்ளது.