இது தமிழ் ⚡ AMP

ராஜபுத்திரன் – தந்தை மகனுக்கிடையான பாசப்படம்

By Dinesh R | May 29, 2025

கிரசென்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே.எம்.சஃபி தயாரிக்க, இளைய திலகம் பிரபுவும் வெற்றியும் தந்தை மகனாக நடிக்க, நாயகியாக கிருஷ்ண பிரியா நடிக்க, கோமல் குமார், மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி, ஆர். வி. உதயகுமார் உடன் நடிப்பில் மகா கந்தன் இயக்கியுள்ள படம் ‘ராஜ புத்திரன்’ ஆகும். இப்படம் மே மாதம் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவர் இயக்குநர் வசந்த் அவர்களிடமும், நந்தா பெரியசாமி அவர்களிடமும் பணிபுரிந்தவர் ஆவார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இவ்விழாவில் பேசிய இயக்குநர் மகா கந்தன், “தந்தை மகன் இருவருக்கும் உள்ள பாசத்தை மையமாக வைத்து இக்கதை உருவாகி இருக்கிறது. வெற்றி கதை கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் பிரபு சாரைப் பிடிப்பதற்காக நான் கடும் முயற்சி செய்ய வேண்டி இருந்தது. தீவிர முயற்சிக்குப் பிறகு அவரைச் சந்தித்து கதை கூறினேன். அவருக்குப் பிடித்திருந்தது. உடனடியாக ஒப்புக் கொண்டார். சின்னத்தம்பி போன்ற காலகட்ட படங்களில் பிரபு நடித்த கதாபாத்திரம் போல் ராஜபுத்திரன் படத்தில் அவரது கதாபாத்திரம் அனைத்துத் தரப்பினருக்கும் குறிப்பாகக் குடும்பத்தினர் பெண்களுக்கு பிடிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. இது முழுக்க ஒரு குடும்பப்படமாகவே உருவாகி இருக்கிறது. அத்துடன் காதலும் இருக்கிறது” என்றார்.

பிரபு, “இதுவரை நான் 74 புதுமுக இயக்நர்களை அறிமுகப்படுத்தி இருக்கேன். இந்தப் படமும் அதில் ஒன்று. இந்தப் படத்தில் நிறைய இளைஞர்களுடன் பணியாற்றினேன். எல்லோரும் அற்புதமான நடிகர்கள்; நல்ல டெக்னீசியன்கள். இந்தப் படத்தில் அண்ணன் T.ராஜேந்தர் பாடிய எனர்ஜியான பாடல் ஒன்றுக்கு நான் ஆடி இருக்கிறேன். ஆரம்பத்தில் நான் ஆட விரும்பவில்லை. ஆனால் வற்புறுத்தி ஆட வைத்து விட்டார்கள். படப்பிடிப்பு ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நடந்தது. அங்குள்ள மக்கள் அப்பா மீதும், என் மீதும், என் மகன் மீதும் அவ்வளவு பாசமாக இருக்கிறார்கள்” என்றார்

வெற்றி, “இந்தp படத்தில் எனக்கு அப்பாவாக நடிக்கிறார் பிரபு சார். என் மகன் ராஜபுத்திரன் என்று படத்தில் ஒரு இடத்தில் சொல்வார் பிரபு சார். உண்மையில் தமிழ் சினிமாவில் ராஜபுத்திரன் பிரபு அண்ணன் தான். இந்த டைட்டிலுக்கு சரியான பொருத்தம் அண்ணன் மட்டுமே!” என்றார்.

இப்படத்திற்கு ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்துள்ளார். மவுஃபுல் ராஜா இசையமைத்துள்ளார். பாடல்களை வைரமுத்து, மோகன் ராஜன் எழுதியுள்ளனர். இப்படம் மே மாதம் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.