இது தமிழ் ⚡ AMP

Yours Sincerely RAAM | ரமேஷ் அரவிந்த் & கோல்டன் ஸ்டார்

By Dinesh R | Sep 09, 2024

கன்னடத் திரையுலகில் ரசிகர்களின் அபிமானத்திற்குரிய நட்சத்திரங்களான ‘மிஸ்டர் பர்ஃபெக்ட்’ ரமேஷ் அரவிந்த் மற்றும் ‘கோல்டன் ஸ்டார்’ கணேஷ் ஆகிய இருவரும் முதன்முறையாக ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ எனும் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கௌரி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரூ கவுடா பாளையத்தில் உள்ள ஸ்ரீநிவாசா திரையரங்கத்தில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. உற்சாகம் நிறைந்த இந்த விழாவில் நடிகையும் தொகுப்பாளருமான ஜானகி ராயலா கிளாப் அடிக்க, இயக்குநர் விக்யாத்தின் மனைவி சுவாதி விக்யாத் கேமராவை ஆன் செய்ய, முதல் காட்சி படமானது. இந்நிகழ்வில் ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியிடப்பட்டது.

இத்திரைப்படம் சமூகத்தில் நிலவும் வர்க்கத்தையும், மனித உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் உணர்வுபூர்வமான படைப்பாக இருக்கும் என உறுதி அளிக்கும் வகையிலும் டீசர் அமைந்திருந்தது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்நிகழ்வில் ரமேஷ் அரவிந்த், ”இயக்குநர் விக்யாத் ஏ.ஆர். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு விக்யாத் ‘புஷ்பக விமானம்’ எனும் திரைப்படத்தின் கதையை விவரிக்க வந்தபோது எனக்கு அறிமுகமானார். அந்தத் தருணத்திலிருந்து அவரின் முன்னேற்றத்தை நான் கண்டு வருகிறேன். அவருடைய கலை உணர்வைப் பாராட்டுகிறேன். அவர் தயாரிப்பில் வெளியான படங்களின் போஸ்டர்கள் மற்றும் டீசரில் ஒரு நுட்பமான உணர்வுபூர்வமான குணம் இருக்கிறது. இறுதியில் அவர் ஒரு திரைப்படத்தை இயக்குவதைக் காணும் போது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. இது அவருக்கு அருமையான அனுபவமாகவும் இருக்கும்.‌

‘புஷ்பக விமானம்’, ‘மழைக்கால ராகம்’ போன்ற படங்களைத் தயாரித்த விக்யாத், ‘யுவர் சின்சியர்லி ராம்’ எனும் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவருக்கு இயக்குநராக இது முதல் பயணம். இதில் நானும், கணேசும் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். ரமேஷ்- கணேஷ் கூட்டணி, எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. சாண்டல்வுட்டின் பிரியத்துடன் பழகும் நடிகர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, இந்த படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும், எங்களின் ஆழமான நட்புறவு மற்றும் உற்சாகத்தையும் எதிரொலிக்கிறது” என்றார்.

நடிகர் கணேஷ், ”கௌரி பண்டிகை நாளில் இது போன்ற அர்த்தமுள்ள திரைப்படத்தைத் தொடங்குவது தனிச் சிறப்பு. இந்த நாளில் எங்களின் ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ படத்தை அறிமுகப்படுத்துகிறோம். இந்தத் திரைப்படம் அழகான கதையம்சத்துடன் தயாராகிறது. இந்தத் திரைப்படம் பார்வையாளர்களை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். கதாபாத்திரங்களுக்கு இடையேயான உணர்வுப்பூர்வமான உறவை மையமாகக் கொண்டது இந்தத் திரைப்படம். இப்படத்தின் திரைக்கதை என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒவ்வொரு காட்சியும் ஒரு அனுபவமாக இருக்கும். அற்புதமான நடிகரும், தொழில்நுட்பக் கலைஞருமான ரமேஷ் அரவிந்த் உடன் இணைந்து பணிபுரிவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்பு, எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. அத்துடன் இந்தத் திரைப்படத்தின் மூலம் விக்யாத் இயக்குநராக அறிமுகமாவதையும் நான் மனதார பாராட்டுகிறேன். இயக்குநர் விக்யாத்- உணர்வுப்பூர்வமான இயக்குநர். இந்தத் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

பல வெற்றிகரமான திரைப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளரான விக்யாத் இயக்குநராக வேண்டும் என்ற தனது பத்தாண்டு கால கனவை, ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ எனும் இப்படத்தின் மூலம் சாத்தியப்படுத்தி இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை இவருடைய சொந்த நிறுவனமான சத்ய ராயலா நிறுவனம், தி ராயலா ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இந்தத் திரைப்படத்திற்கு நவீன் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜே. அனூப் சீலின் இசையமைக்கிறார். ஹரிஷ் கொம்மே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின் ஆடியோ உரிமையை ஆனந்த் ஆடியோ நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

‘யுவர் சின்சியர்லி ராம்’ படத்தில் முதல் தோற்றம் வெளியாகி குறிப்பிடத்தக்க அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. திறமையான கலைஞர்களுடன் சாண்டல்வுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்புகளில் ஒன்றாக ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ உருவாகி வருகிறது.