இது தமிழ் ⚡ AMP

சந்தோஷத்தில் கலவரம் விமர்சனம்

By Dinesh R | Nov 02, 2018

ஐந்து ஆண்களும், நான்கு பெண்களுமாக நண்பர்கள் குழு ஒன்று, மலைத்தொடரின் நடுவில் அடர்ந்த காட்டுக்கு மத்தியில் உள்ளதொரு பெரிய வீட்டில், விக்கியின் பிறந்தநாளைக் கொண்டாடச் செல்கிறது. அக்குழுவை அமானுஷ்ய சக்தி ஒன்று தாக்குகிறது. அதிலிருந்து மீண்டு எப்படி உயிருடன் வீடு திரும்புகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மகிழ்ச்சியாகத் தொடங்கிய நண்பர்களின் பயணம் எப்படிக் கலவரமாகிறது என்பதும், அக்கலவரத்தால் விளையும் நன்மைகள் என்னவென்பதும் தான் படத்தின் கதை.

படத்தின் இயக்குநர் கிராந்தி பிரசாத், இளைஞர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வருவதற்காக பெங்களூருவில் ‘பெஸ்ட் யூத்’ விருது பெற்றவர். மேலும், அவர் ஒரு யோகா பயிற்றுநரும் கூட! இந்த இரண்டு விஷயத்தையும் படத்தின் திரைக்கதையில் உணரலாம். ஒரு பேய்க்கதையில் தன்னை ஒரு நாயகனாகப் பொருத்திப் பார்த்து திரைக்கதை அமைத்துள்ளார்.

ஆம், படத்தின் பிரதான கதாபாத்திரமான வேணு, அடிக்கடி தியானத்தில் திளைக்கும் ஒருவர். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் விக்கி, ஜானி, முருகன் ஆகிய மூவரும் சிற்றின்பத்தில் ஈடுபட முயன்று கொண்டிருக்கின்றனர். கலவரத்தில் கிடைத்த அனுபவம் அவர்களை நல்வழிப்படுத்துவதோடு, காட்டுக்குள் பயணம் செய்யும் அவர்களது மனவுறுதியும் வெகுவாக மிகுகிறது.

ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய பவுலியஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அவருடன் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளார் ஷிரவன் குமார். சிவநாக்கின் இசையில், படம் முடிந்ததும், படத்தின் பணிக்குழு பெயர்கள் திரையில் உயரும் பொழுது, வரும் பாடல் ரசிக்கும்படி உள்ளது. க்ளிஷேவான காட்சிகள் ஒருபுறம் என்றால், புல்லாங்குழல் ஊதும் நவீன யோகியான வேணு எதையும் செய்ய வல்லவராய் இருக்கிறார். அவ்வளவு சக்தி படைத்தவர் ஏன் க்ளைமேக்ஸ் வரை காத்திருக்கிறார் என்பது புரியவில்லை. கதாபாத்திரங்கள் பேசும் தமிழும், டப்பிங் படத்தினுடையது போலுள்ளது.  அனைவரும் புதுமுகங்கள் என்பதால் எந்தப் பாத்திரமும் மனதில் அழுத்தமாகப் பதியவில்லை. ராந்தி பிரசாத், தான் சொல்ல வந்ததில் மடும் கவனம் செலுத்தியிருக்கலாம்.