இது தமிழ் ⚡ AMP

“சர்தார் 2: உங்கள் ஆரோக்கியத்தை அசைத்துப் பார்க்கும் விஷயத்தைப் பேசியுள்ளோம்” – கார்த்தி

By Dinesh R | Sep 02, 2026

பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐவிஒய் (IVY) என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.லக்ஷ்மன் குமார், இஷான் சக்சேனா ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி உள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார். சென்னை வர்த்தக மையத்தில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்நிகழ்வில் பேசிய நடிகர் எஸ்ஜே.சூர்யா, ”நான் முதன்முதலாகச் சென்னை வடபழனி குமரன் காலனியில் உள்ள ஸ்டுடியோவில் பாடுவதற்காகச் சென்றிருந்தேன். ஆனால் அங்குள்ளவர்கள் ஏழு மணி நேரம் வரை காத்திருக்கச் செய்து, அதன் பிறகு எனக்குக் குரல் வளம் இல்லை என்று நிராகரித்தார்கள். எனக்கு அப்போது இசை ஆர்வம் இருந்தது. ஆனால் பாட வேண்டும் என்று விரும்பினேன். அதன் பிறகும் தொடர்ந்து பல நிராகரிப்புகள், அவமானங்கள் தொடர்ந்தது.

நூறாவது படத்திற்கு இசையமைத்து, அதற்கான மேடையில் நான் நிற்கும் போது என்னுடைய இந்தப் பயணம் மிக நீண்டது. துயரம் மிகுந்தது. ஆனாலும் கடவுள் மற்றும் மக்களின் ஆதரவு இருந்ததால் இசையில் ஓரளவு குறிப்பிட்ட சாதனையை எட்டி இருப்பதாக நம்புகிறேன்.

என்னுடைய நூறாவது திரைப்படத்தில் கார்த்தி நடித்திருக்கிறார் என்பதே எனக்குப் பெருமிதமாக இருக்கிறது. எனக்கு எப்போதும் அறிவாளியாய் உள்ள இயக்குநர்களிடம் பணியாற்றுவதற்கு ஆசையாக இருக்கும். அதிலும் இசை பற்றிய அறிவு அதிகம் உள்ள மித்ரன் போன்றவர்களிடம் பணியாற்றும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இசையில் ராகங்களைப் பற்றியும், இசைக்குறிப்புகளைப் பற்றியும் மித்திரனுக்கு நன்றாகத் தெரியும். இவரைப் போன்றவர்களை அசத்துவதற்காக இன்னும் ஏதாவது புதிதாக முயற்சிக்கலாம் எனப் புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்வேன். மித்ரன் என்னுடைய நண்பர். இருந்தாலும் அவருடன் இணைந்து பணியாற்றுவது சிறந்ததாக இருந்தது. நான் பணியாற்றிய இயக்குநர்களில் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் மித்ரன்.

இந்தப் படத்தின் பின்னணி இசை அமைக்கும் போது இயக்குநரும், நானும் ஒன்றாக அமர்ந்து பணியாற்றினோம். இந்தத் திரைப்படம் மியூசிக்கலாக எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். அதற்கான உழைப்பை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வழங்கியுள்ளோம்” என்றார்.

கார்த்தி, “தமிழ் சினிமா என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல. தமிழ் சினிமா – தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்கிறது. இங்கு நாம் அனைவரும் 40 மதிப்பெண் எடுத்தால் போதும் அல்லது 50 மதிப்பெண் எடுத்தால் போதும். ஆனால் நூறு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று சிலர் மட்டும் தான் நினைப்பார்கள். இந்தப் படத்தின் குழு அப்படி 100 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறது. 100 மதிப்பெண்ணிற்கு எழுதுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதை இந்தப் படக்குழு கடினமாக உழைத்து உருவாக்கியிருக்கிறார்கள்.

கனவுகளைக் காகிதத்தில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அதனை இப்படி பிரம்மாண்டமான படைப்பாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு இந்தக் கதை மீது ஆர்வம் கொண்ட நம்பிக்கை வைக்கும் தயாரிப்பாளர் ஒருவர் வேண்டும். அந்த வகையில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் இல்லை என்றால் எங்களின் கனவு நனவாகி இருக்காது.

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதை வேண்டுமானால் நீங்கள் தவிர்க்க முடியாமல் தொடர்ந்திருக்கலாம். ஆனால் இந்தப் படத்தைப் பார்த்து பிறகு நீங்கள் இந்தப் படம் சொல்லும் விஷயத்தை உங்களால் தவிர்க்கவே முடியாது. ஏனென்றால் உங்களுடைய ஆரோக்கியத்தைப் பற்றிய அசைத்துப் பார்க்கும் உண்மையைச் சொல்லி இருக்கிறோம். இதுதான் படத்தில் முக்கியமான விசயம்.

மித்ரனிடம் எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு விசயம் என்னவென்றால் எழுத்தாளர்களுக்கு மரியாதையும், மதிப்பையும் வழங்குவது. எழுத்தாளர்களுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்கும் போது தான் அது அடர்த்தியானதாகவும் ரசிகர்களை உத்வேகத்துடனும் இருக்க வைக்கும். அத்துடன் இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய உரையாடலை உண்டாக்கும். ஒரு படம் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புபவன் நான். அது இந்தப் படத்தில் இயக்குநர் மித்திரன் செய்திருக்கிறார். படம் வெளியான பிறகு இது தொடர்பான மிகப்பெரிய உரையாடல் ஏற்படும்” என்றார்.