ஜித்து மாதவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படம், தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், விறுவிறுப்பான பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்த மாஸ் என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது.
ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் சார்பில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். ஜெயஸ்ரீ தாமோதரன் மற்றும் ராஜசேகர் பாண்டியன் இணை தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்.
இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் நடிகர் சிவகுமாரும், நடிகர் கார்த்தியும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
இவ்விழாவில் பேசிய சூர்யா, “இது ரொம்ப முக்கியமான மேடை. ‘சீன்: படத்தின் இசை வெளியீட்டு விழா. இந்த நேரத்தில் என்னுடைய முதல் படமான ‘நேருக்கு நேர்’ படத்திற்கு தேவா சார் இசையமைத்திருந்தார். அவருக்கு இந்த மேடையில் என்னுடைய பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறேன். அவர் எப்போதும் எங்களுடைய நினைவில் இருப்பார். அவர் போட்ட ‘அவள் வருவாளா..!’ என்ற ட்யூன் தான் இன்று வரை என்னை அடையாளப்படுத்தி வருகிறது . நான் இவ்வளவு தூரம் பயணித்ததற்கு தேவா சார் தான் ஆரம்பப் புள்ளி.
நானும் ஜோவும், ஜித்துவின் ‘ரோமஞ்சம்’ படத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தோம். அவருடைய ‘ஆவேஷம்’ படமும் எனக்குப் பிடித்திருந்தது. அவர் உருவாக்கும் உலகம் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாக இருந்தது. அதேபோல் ‘சீன்’ திரைப்படமும் வித்தியாசமானதாக இருக்கும். எனக்கு இந்த வருஷம் மிகவும் ஸ்பெஷல் ஆனது. மூன்று படங்கள் வெளியாகிறது. இதற்கு முன் ‘மாயாவி’, ‘கஜினி’, ‘ஆறு’ என மூன்று படங்கள் வெளியானது என நினைக்கிறேன்.
‘கருப்பு’ 45 நிமிடங்களில் கதை கேட்டு நடிக்க முடிவெடுத்தேன். தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடித்து வந்தேன். ஃபேமிலி ஓரியண்டட் படங்களில் நடிக்க வேண்டும் என நினைத்து ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தில் நடித்தேன். அதுவும் உங்களுக்குப் பிடித்திருந்தது. அதேபோல் இந்தப் படமும் நீங்கள் எதிர்பார்க்காத படமாக இருக்கும்.
இசையமைப்பாளர் சுசின் ஷியாம் தமிழில் அறிமுகமாகும் படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது எனக்குப் பெருமை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜாலியாகத் திரையரங்கத்திற்கு வந்து, இந்தப் படத்தை சந்தோஷமாகப் பாருங்கள்” என்றார்.