சூதாட்டக் களத்தை முன் வைத்து ஒரு கமர்ஷியல் படத்தைக் கொடுக்க முயற்சி செய்துள்ளார் அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய்.
இந்தப் படத்தின் கதையை வில்லன் பாயிண்ட் ஆப் வியூவிலும் சொல்லலாம், நாயகனின் பாயிண்ட் ஆப் வியூவிலும் சொல்லலாம். நாயகன் பார்வையில் பார்ப்போம். RJவாக இருக்கும் நாயகி ஃபரியா அப்துல்லா மீது காதல் கொள்ளும் நாயகன் சந்தீப் கிஷன் நிறைய பணமுடையில் இருக்கிறார். நாயகியின் வாய்ஸில் AI-ஐ மிக்ஸ் பண்ணி யூட்யூபில் பணம் சம்பாதிக்க முயற்சி செய்கிறார். நாயகி முதலில் அதற்கு மறுப்புத் தெரிவித்துப் பின் அன்பாகக் காதலும் செய்கிறார். தன் அம்மாவின் நூலகத்தைக் கோவில் மாதிரி பார்த்துக் கொள்ளும் சந்தீப் கிஷனுக்கு நூலகத்தை இழக்கும் சூழல் வருகிறது. நூலகத்தை மீட்க வேண்டுமானால் நிறைய பணம் தேவை. அதற்காகச் சூதாடச் செல்கிறார். சூதாட்டத்தில் இருக்கும் உள்ளடி வேலைகளைக் கண்டுபிடித்து கிளப் ஓனரிடம் மோதுகிறார். அந்த மோதல் பிரதான வில்லன் சம்பத் வரை இழுத்துச் செல்கிறது. முடிவில் வழக்கம் போல நாயகன் வெல்கிறார்.
சந்தீப் கிஷன் எனர்ஜெடிக்காக இருக்கிறார். காதல் காட்சிகள், சண்டைக் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். எமோஷ்னல் காட்சிகளில் வரும் பின் கதை ஆழமாக இல்லை என்பதால் அவர் நடிப்பு பெரிதாக எடுபடவில்லை. ஃபரியா அப்துல்லா நன்றாக நடிக்க இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். அன்புதாசன் நகைச்சுவை பெரிதாக ஈர்க்கவில்லை. சம்பத், ராஜு சுந்தரம் உள்ளிட்ட எல்லாக் கதாபாத்திரங்களும் ஏதோ ஒப்பேற்றியிருக்கிறார்கள்
கிருஷ்ணன் வசந்த் தனது ஒளிப்பதிவால் படத்திற்கு வலு சேர்த்துள்ளார். துருத்தும் CG ஷாட்களையும் தாண்டி சில விஷுவல்ஸ் நன்றாகவே இருக்கிறது. தந்தை விஜய்க்கு மாஸ் பாடல்களைக் கொடுத்த தமன், மகன் சஞ்சய்க்கு எனர்ஜியற்ற இசையைத் தான் கொடுத்துள்ளார். பாடல்கள், பின்னணி இசை என இரண்டுமே வொர்க் ஆகவில்லை.
திரைக்கதையில் எந்தப் புதுமையுமில்லை என்பது ஆகப்பெரிய மைனஸ். பென்ட்ரைவ்-ஐ வைத்து மிரட்டும் டெக்னிக்கெல்லாம் இன்னுமா புழக்கத்தில் இருக்கிறது? சமூகப் பொறுப்போடு சில காட்சிகளை அணுகியிருக்கலாம். படம் வேகமாக நகர்கிறது என்பது மட்டும் தான் சிக்மாவின் பாசிட்டிவ் அம்சம்.
– வெண்பா தமிழ்