இது தமிழ் ⚡ AMP

Tourist Family | “சிம்ரன் ஹீரோயின்; நான் ஹீரோ” – சசிகுமார்

By Dinesh R | Apr 27, 2025

சசிகுமார், சிம்ரன் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இவ்விழாவில் பேசிய நடிகர் சசிகுமார், ”இந்தப் படத்தைப் பார்த்த தயாரிப்பாளருக்கு முழுத் திருப்தி என்றாலும், ரசிகர்களிடம் கிடைக்கும் ஆதரவிற்காகத்தான் சற்று பதட்டத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். படத்தைப் பற்றிப் படக்குழுவினரான நாங்கள் பேசுவதை விட, படத்தைப் பார்க்கும் ரசிகர்களும், ஊடகங்களும் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

தயாரிப்பாளர்கள் இருவரும் நண்பர்கள். அந்த ஒரு காரணத்தினாலேயே அவர்களை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர்கள் எடுத்த ‘குட்நைட்’ ‘லவ்வர்’ என்ற இரண்டு படங்களும் அனைவரும் ரசித்த படங்கள். அதனால் அவர்கள் கதையைத் தேர்வு செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள் என நினைத்து, நான் தான் இந்தப் படத்தில் படத்திற்குள் வந்தேன். இது எனக்கு தான் பெரிய விசயம்.

கதை சொல்லும் போது இயக்குநர் என்னென்னவோ செய்து காண்பித்தார். நான் அதைக் கவனித்துக் கொண்டே இருந்தேன். இயக்குநருடன் வந்த தயாரிப்பாளர் யுவராஜ் ரியாக்சன் செய்து கொண்டே இருந்தார். நான் அவரையும் அமைதியாக கவனித்துக் கொண்டே இருந்தேன். இருந்தாலும் நான் இது போன்றதொரு நல்ல கதையைக் கேட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. என்னிடம் சொன்ன கதையைச் சிறிதும் மாற்றாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள். இது இயக்குநர் அபியின் வெற்றியாக நான் நினைக்கிறேன்.

எனக்கு ஜோடியாக சிம்ரன் மேடம் நடிக்கிறார்கள் என்று சொன்னவுடன் உற்சாகமாகி விட்டேன். அவர்களுக்கும் இந்தக் கதை பிடித்திருந்தது. அதனால் நடிக்க சம்மதம் தெரிவித்தார்கள். எல்லோருக்கும் சிம்ரன் பிடிக்கும். இந்தப் படத்திலும் சிம்ரன் நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும். அவர்களும் இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திலும் அவர் ஹீரோயின். நான் ஹீரோ. அதனால் அவர்கள் இப்போது கூட ஹீரோயினாக நடிக்கலாம்.

இந்தக் கதை எனக்கு ஏன் பிடித்தது என்றால் இந்தக் கதையின் நாயகன் ஈழத்தமிழ் பேசுபவன். ஈழத்திலிருந்து ஒரு குடும்பம் இங்கு வந்து எப்படி தங்களுடைய வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை. இதைப் பார்க்கும் போது காமெடியாக இருக்கும். பொதுவாக ஈழத் தமிழர்களைப் பற்றிய படம் என்றால் அது சோகமாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும். ஆனால் இந்தப் படம் சந்தோசமாக இருக்கும். ரசிகர்களைச் சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் உள்ளுக்குள் ஒரு வலியையும், விசயத்தையும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். வலியை மறைத்து தான் நாம் சந்தோஷத்தைக் கொடுக்க முடியும். அந்த வகையில் இந்தக் குடும்பம் உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

அவர்கள் அடுத்த தலைமுறையினருக்காகக் கஷ்டப்படுகிறார்கள். நாம் படும் கஷ்டங்கள் நம்முடைய தலைமுறையினர் படக்கூடாது. குழந்தைகளை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள். இதனால் தங்களுக்குள் உள்ள வலியை மறந்து, மறைத்து அவர்களுக்காக வாழ்கிறார்கள். இந்தப் படம் உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் பொருந்தும். அனைவருக்கும் பொருந்தும்.

உலகத்தில் உள்ள ஈழத் தமிழர்கள் இப்படத்தை பார்க்கும் போது நம்முடைய கலாச்சாரத்தையும், நம்முடைய தமிழ் மொழியையும் மறந்துவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்த எண்ணம் குறைந்தபட்சம் பத்து பேருக்கு ஏற்பட்டாலும் வெற்றிதான். இதை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் தங்களுடைய குடும்பத்துடன் வந்து பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது ஒரு ஃபீல் குட் மூவி.

‘இயக்குநரிடம் இதற்கான இன்ஸ்பிரேஷன் எது?’ என்று கேட்டபோது அவர் ‘தெனாலி’ திரைப்படம் என்றார். அதனால் இந்தத் திரைப்படம் பார்க்கும்போது ‘தெனாலி’, ‘மொழி’ போன்ற படங்கள் நினைவுக்கு வரலாம் என நம்புகிறேன். இந்தப் படத்தில் என்னுடைய மூத்த மகனாக நடித்திருக்கும் மலையாள நடிகர் மிதுன் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கமலேஷ் என ஒரு குழந்தை நட்சத்திரம் நடித்திருக்கிறார். அவர்தான் இந்தப் படத்திற்குக் காமெடி. அவர்தான் உங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கப் போகிறார்.

இந்த படத்தில் பாடல்களும் இசையும் நன்றாக இருக்கிறது. இந்தப் படம் அன்பைப் போதிக்கிறது. மே மாதம் முதல் தேதி அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. வந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.