இது தமிழ் ⚡ AMP

“சிறை: இது ஒரு டீம் வெற்றி” – விக்ரம் பிரபு

By Dinesh R | Mar 14, 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் LK அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் சிறை ஆகும். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்தப் படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 23 அன்று ZEE 5 ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், அதிலும் பெரும் வரவேற்பைப் பெற்று பார்வையாளர்களின் பாராட்டுகளைக் குவித்தது. இந்நிலையில், படம் வெளியாகி 75 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் வரவேற்பைக் குவித்து வருகிறது. பொதுமக்கள், சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்ற இந்த படம், கடந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் கொண்டாடப்பட்டது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற “சிறை” திரைப்பட வெற்றிவிழாவில், படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நினைவாக வெற்றிக் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வினில் பேசிய விக்ரம் பிரபு, “இன்றைய இந்த விழாவில் கலந்து கொண்டு, இப்படத்திற்கு கிடைத்துள்ள விருதுகளைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்னர் என் அப்பாவின் அவார்ட் விழாக்களுக்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். ஆனால் இன்று நான் நடித்த ஒரு படத்திற்கு இவ்வளவு கேடயங்கள் கிடைப்பதை நேரில் பார்க்கும் போது அது எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியாக உள்ளது.

ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் அது ஒரு டீம் வொர்க் என்பதற்கு சிறை படம் ஒரு உதாரணம். இந்த மேடையில் விருது பெற்றவர்களும், இன்னும் பெறவிருப்பவர்களும் அனைவரும் இந்த படத்தை தங்களது வாழ்க்கை போல உழைத்து உருவாக்கியவர்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த படம் 2025 டிசம்பர் 25ஆம் தேதி வெளியானது. அதன் பிறகு படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதற்குப் பிறகு ‘டாணாக்காரன்‘ படத்திற்கு மாநில விருது கிடைத்த செய்தி வந்தபோது, அந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை. எனக்கு இரட்டை சந்தோஷமாக அமைந்தது.

நான் ஒரு நடிகரின் மகன், பேரன் என்ற அடையாளத்தோடு வளர்ந்தேன். பள்ளி நாட்களிலேயே சில சமயம் அந்த அடையாளம் காரணமாகத் தனியாக உணர்ந்த தருணங்களும் இருந்தன. அதனால் பல விஷயங்களில் இருந்து ஓடிக்கொண்டே இருந்தேன். பிறகு அமெரிக்காவுக்குச் சென்றபோது தான் என்னை நான் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு தான் திரும்பி வந்து சினிமாவிலேயே என் பாதையை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

என் முதல் படம் ‘கும்கி’ பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றிக்கு பிறகு ஒரு அழுத்தமும் வந்தது. ஆனால் அதைத் தாண்டி தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இந்தப் பயணத்தில் பல விமர்சனங்களும் சவால்களும் இருந்தன. சிலர் பாராட்டினார்கள், சிலர் விமர்சித்தார்கள். ஆனால் நான் என்னுடைய பாதையைத் தெரிந்து கொண்டு முன்னேறிக் கொண்டே வந்தேன்.

சினிமா என்பது திறமை, நேரம், அதிர்ஷ்டம், வாய்ப்பு ஆகியவைச் சேர்ந்த ஒரு துறை. அதில் பல சவால்களும் இருக்கும். ஆனால் அந்த எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு தான் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறேன். இப்போது இந்த 25 ஆவது படத்திற்குப் பிறகு, இது எனக்கு ஒரு புதிய ஆரம்பம் போல தோன்றுகிறது. இனிமேல் இன்னும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து, நம் தமிழ் சினிமாவிற்குப் பெருமை சேர்க்கும் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

என் பயணத்தில் என்னை ஆதரித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. இந்த படத்தின் வெளியீட்டு நாளில், ‘இது ஒரு டீம் வெற்றி’ என்று நான் சமூக வலைதளத்தில் பதிவிட்டேன். இன்று அந்த டீமுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன்” என்றார்.