இது தமிழ் ⚡ AMP

“பதறாமல் தீமிதித்த சூரி” – சமுத்திரக்கனி | கருடன்

By Dinesh R | May 21, 2024

சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘கருடன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவ்விழாவில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் அம்பேத்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கருடன்’ திரைப்படத்தில், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K. குமார் தயாரித்திருக்கிறார்.

இவ்விழாவில் பேசிய நடிகர் சமுத்திரக்கனி, “தம்பி சூரி நிறைய நல்ல மனிதர்களைச் சம்பாதித்திருக்கிறார். ஒவ்வொரு திரைப்படத்திலும் தலைமைக் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பவர்களுக்கு அப்படத்தின் வெளியீடு என்பது பூக்குழிக்குள் இறங்குவது போன்றது. வெளியிலிருந்து பார்க்கும் போது பூக்குழி என்பது பூவின் புதையல் போன்று தோன்றும். ஆனால் அருகில் சென்று பார்த்தால் தான் அது தீமிதி எனத் தெரியவரும். அவருடைய முதல் படத்தில், அவரை அருமையான பூசாரி ஒருவர் அவரைக் கை பிடித்து அழைத்து வந்தார். இந்தத் திரைப்படத்தில் அவருடன் பலமுறை தீமிதித்தவர்கள் உடன் இருந்தனர். தீ மிதிக்கும் போது அவருக்கு அருகில் இரண்டு பக்கங்களிலும் வேட்டியை மடித்துக் கொண்டு நின்றனர். தீ மிதிக்கும் போது ஏதேனும் தடுமாற்றம் ஏற்பட்டால் காப்பாற்றுவதற்காகத தான் இந்த ஏற்பாடு. ஆனால் சூரி எந்தவிதத் தடுமாற்றமும் இல்லாமல் நிதானமாக தீ மிதியில் இறங்கி நடந்து வந்தார்.

இந்தப் படத்தில் அவருடைய உழைப்பு அசாதாரணமானது. ஒவ்வொரு நொடியும் படத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார். இதனாலேயே அவர் திரைத்துறையில் மிக உயரத்திற்குச் செல்வார். அதற்காக மனமார வாழ்த்துகிறேன்.

நீண்ட நாள் கழித்து தம்பி சசியுடன் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன். இந்தப் படத்திற்கு பின்னணி பேசும்போது, இயக்குநர் வெற்றிமாறன் என்னைச் சந்தித்து, “இந்தப் படத்திற்கு அனைத்தும் நல்லபடியாக அமைந்து விட்டது” என்றார். அவரிடமிருந்து இதுபோன்ற வாழ்த்து கிடைத்தவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் துரை செந்தில்குமார், கலைஞர்களைத் தோழமையுடனும் புன்னகையுடனும் அணுகி பணியாற்ற வைத்த அனுபவம் மறக்க இயலாது. இந்தத் திரைப்படத்தில் நானும் இருக்கிறேன் என்பது எனக்குப் பெருமிதமாக இருக்கிறது” என்றார்.

இவ்விழாவில் பேசிய நடிகை ரேவதி சர்மா, ”இது எனக்கு இரண்டாவது திரைப்படம். வெற்றிமாறன், துரை. செந்தில்குமார், சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி போன்ற பிரபலங்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க இயலாததாக இருந்தது.

நான் நடித்த முதல் திரைப்படமான ‘1947 ஆகஸ்ட் 14’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். என்னுடைய இரண்டாவது படமான ‘கருடன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார். இதனை நான் பாக்கியமாக கருதுகிறேன்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அதிதி பாலனுடன் இணைந்து பணியாற்றும்போது அவரைச் சந்தித்துப் பேசி இருக்கிறேன். அவரும் இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.