இது தமிழ் ⚡ AMP

சொட்ட சொட்ட நனையுது விமர்சனம் | Sotta Sotta Nanaiyuthu review

By Dinesh R | Aug 29, 2025

காரைக்குடியைச் சேர்ந்த செல்வந்தனான ராஜாவிற்கு தலையில் சொட்டை தோன்றி முழு வழுக்கையாக மாறிவிடுகிறது. அதனால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகும் ராஜாவிற்குக் கல்யாணமும் தள்ளிப் போகிறது. எதிர் வீட்டில் வசிக்கும் ராயல் பாட்டியின் வீட்டுக்குப் படிப்பு முடித்து வரும் அவரது பேத்தி பிரியாவை ராஜா விரும்ப, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயமாகிறது. இந்நிலையில், கல்யாணத்துக்கு முன் தினம் கல்யாணத்தை ராஜாவே நிறுத்துகிறான். கல்யாணத்தை ராஜா ஏன் நிறுத்தினான், அதன் பின் என்னாகிறது என்பதே படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அறிமுக இயக்குநரான நவீத் S. ஃபரீத் அவர்களின் தந்தை ஷேக் ஃபரீத், நாயகனின் தந்தை பண்ணை பரமசிவமாக நடித்துள்ளார். ப்ரோக்கர் குலுக்கல் குமரேசனாக ரோபோ சங்கர் நடித்துள்ளார். நாயகனின் கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்யும் ராக்கெடியாக விஜய் டிவி புகழ் வருகிறார். இப்படத்திற்கு வசனமும் திரைக்கதையும் எழுதி, நண்பனின் நாயகன் ராக்கியாகவும் நடித்துள்ளார் KPY ராஜா. சம்பந்தமே இல்லாமல் தூய தமிழ் பேசும் நாயகனின் மாமாவாக ஆனந்த் பாண்டி நடித்துள்ளார்.

வழுக்கையாக இருந்தாலும் நாயகனைக் காதலிக்கும் பாத்திரத்தில் ஷாலினி நடித்துள்ளாற். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் தலைக்கேறியவராக வர்ஷினி வெங்கட் நடித்துள்ளார். ஒரு சீரியஸான விஷயத்தைத் தொட்டும், கலகலப்பிற்கான எல்லா அடித்தளமும் அமைக்கப்பட்டும், இலக்கற்ற திரைக்கதை பொறுமையை மிகவும் சோதிக்கிறது. கோர்வையற்றுத் தாவிக் குதிக்கும் காட்சிகளில் மருந்துக்கும் நகைச்சுவை எடுபடாமல் சோதிக்கிறது.

பிரியாவாக நடித்திருக்கும் ஷாலினிக்கு என்ன நடந்தது எனத் தெளிவாகச் சொல்லப்படாதது முதல், படத்தில் பல விஷயங்கள் தொக்கி நிற்கின்றன. வழுக்கை தலை நாயகன் ராஜாவாக நடித்துள்ள நிஷாந்த் ரூஸோ மட்டும் முயன்றளவுக்குப் படத்தை நகர்த்தப் போராடியுள்ளார். ‘ஜிமிக்கி கம்மல்’ புகழ் ரெஞ்சித் உன்னி இசையமைத்துள்ளார். திரைக்கதையும் வசனமும் ஏனோதானோ என்றிருக்க, இயக்குநர் நவீத் S. ஃபரீத் எத்தனை மெனக்கெட்டிருந்தாலும், அது விழலுக்கு இறைத்த நீர்தான்.